Press "Enter" to skip to content

Anti Indians தண்ணி இல்லன்னு பொய் சொல்றத நிறுத்துங்க! புதிய ஜல் சக்தி அமைச்சர் கோபம்! Water Scarcity

டெல்லி: சமீபத்தில் சம்பள உயர்வு வாங்கிக் கொண்டு, பாராளுமன்ற கேண்டீனில் மலிவு விலையில் ஆட்டுக் கால் பாயா, வான் கோழி பிரியாணி, பிஸ்லெரி தண்ணீர் குடித்து விட்டு, டெல்லி வெயில் உடம்பில் படாமல், எம்பிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் சொகுசாக 21 டிகிரி ஏசியில் உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கும் மந்திரிகளில் ஒருவர், மக்களை வெறுப்பேத்தும் விதத்தில் பொன் வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார்.

இங்கு சென்னையில் குடிக்க 20 லிட்டர் தண்ணீர் கேனுக்கே 70 ரூபாய்க்கு மேல் கொடுத்து வாங்கும் சூழலுக்கு வந்துவிட்டோம். பல இடங்களில் இந்த தண்ணீர் கேன் கூட ஒழுங்காகக் கிடைப்பதில்லை. தண்ணீர் பஞ்சம் (Water Scarcity) தலை விரித்தாடுகிறது.

குளிப்பதெல்லாம் ஆடம்பரம் ஆகிவிட்டது. வியர்வை நாற்றம் மூக்கைத் துளைத்தாலும் துவைக்க தண்ணீர் இல்லாமல் அதே உப்பு பூத்த ஜூன்ஸில் பாடி ஸ்ப்ரே அடித்துக் கொண்டு அலுவலகம் செல்வது வாடிக்கை ஆகிவிட்டது.

பொறுப்பற்ற பேச்சு

ஆனால் இங்கு ஒரு அமைச்சர் “தமிழகத்தில் எல்லாம் தண்ணீர் நன்றாகத் தான் இருக்கிறது. தண்ணீர் இல்லை, தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது எனச் சொல்வதெல்லாம் ஊடகம்க்களின் பொய் பிரசாரம்” என வழக்கம் போல ஆண்டி இந்தியன் ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார். மக்களின் வேதனையை புரிந்து கொள்ளாமல் பேசி இருக்கிறார் ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர செகாவத். அவர் கூற்றுப் படி இந்தியாவில் உள்ள எல்லா நீர் நிலைகளிலும் போதிய நீர் இருக்கிறதாம். எல்லா மாநிலங்களுக்கும் போதுமான நீர் இருக்கிறதாம். நீர் பற்றாக்குறை என்கிற வார்த்தைக்கே மோடி ஆட்சிக் காலத்தில் இடம் இல்லை என்கிறார்.

இந்த விஷயம் தெரியுமா..?

சென்னை நகரின் தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்ய, திருவள்ளூர் கிராமங்களில் விவசாயிகளுக்கு தேவையான விவசாய நீரை எடுக்க பயன்பட்டு வரும் ஆள் துளைக் கிணறுகளில் இருந்து தான் சென்னைக்கு நாள் ஒன்றுக்கு தேவையான 85 கோடி லிட்டர் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த திருவள்ளூர் கிராம மக்களுக்கு தான், இப்போது சென்னை மக்கள் கசகசப்பான வியர்வையோடு, கை கூப்பி நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

தண்ணீர் இல்லை

தண்ணீர் இல்லை

மழை இல்லை என்றால்

இன்னும் 3 மாதங்களில் தமிழகத்தில் நல்ல மழை இல்லை என்றால் தமிழகம் இன்னும் நீர் பற்றாக்குறையால் தவிக்கும். குறிப்பாக சென்னை பெரிய அளவில் தண்ணீருக்கு கண்ணீர் விட வேண்டி இருக்கும் என பல செய்திகளும் அறிக்கைகளும் நம்மை இப்போது உயிரோடு கொன்று கொண்டிருக்கிறது. ஆதங்கப்படக் கூட நேரமில்லாமல், தண்ணீர் கேன்களோடு அலைந்து கொண்டிருக்கி(றோம்.)றார்கள் மக்கள்.

சாட்சியங்கள்

மேலே சொன்னதற்கு சாட்சியாக கோடிகளில் புரளும் 12 ஐடி நிறுவனங்களாலேயே தங்கள் ஊழியர்களுக்குத் தேவையான தண்ணீரை ஏற்பாடு செய்து கொடுக்க முடியாமல், வீட்டில் இருந்தே வேலை பார்க்கச் சொல்லி இருக்கிறார்கள். சோழிங்கநல்லூரில் உள்ள ஃபோர்ட் தேர் ஆலை நிர்வாகம், தன் ஊழியர்களுக்குத் தேவையான குடிநீரைக் தற்காலிகமாகக் கொடுக்க முடியாததால், ஊழியர்கள், தங்கள் வீட்டில் இருந்தே தங்களுக்கான குடிநீரைக் கொண்டு வருமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள். பல ஹோட்டல்கள், உணவகங்கள் தண்ணீர் இல்லாமல் மூடிக் கொண்டிருக்கிறார்கள்.

மத்திய அரசு எச்சரிக்கை

இதுவரை சொன்னது எல்லாம் கூட உணர்ச்சி வேகத்தில் சொல்வது, ஊடகம் மிகப்படுத்துதல் என ஒதுக்கிக் கொள்ளுங்கள் நீர் சக்தி அமைச்சரே. ஆனால் மத்திய அரசின் நிர்வாகத்தில் கீழ் இயங்கும் மத்திய நீர் ஆணையம் (Centrall Water Commission) கடந்த 18 மே 2019-ல் வறட்சி ஆலோசனை ஒன்றை தமிழகம், மகாராஷ்டிரம், குஜராத், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா என பல மாநிலங்களுக்கு அனுப்பியது. இதையாவது ஒப்புக் கொள்வீர்களா..?

ஏன் அனுப்புவார்கள்

இந்த வறட்சி ஆலோசனையை (Drought Advisory) நாட்டில் உள்ள முக்கிய நீர் தேக்கங்கள், அணைகளில் கடந்த 10 ஆண்டு கால நீர் தேக்க அளவை விட 20 சதவிகிதம் குறைவாக இருக்கும் போது மட்டுமே அனுப்புவார்கள். ஆக இந்தியாவில் அணைகள் மற்றும் முக்கிய நீர் தேக்கங்களில் கடந்த 10 ஆண்டுகளில் இருந்த நீரின் அளவை விட இப்போது 20 சதவிகிதம் குறைந்திருப்பதை கருத்தில் கொண்டு மத்திய நீர் ஆணையமே மாநிலங்களை எச்சரித்திருக்கிறது.

முக்கிய ஆலோசனை

அதோடு மாநிலப் பட்டியலில் இருக்கும் அணைகள் மற்றும் நீர் வீழ்ச்சிகளில் ஓடும் நீரை தொழிற் தேவைகளுக்கு பயன்படுத்தாமல், குடி நீருக்கு மட்டும் நீரை பயன்படுத்தும் படியும் எச்சரித்திருக்கிறது மத்திய நீர் ஆணையம். அணைகளில் போதுமான நீர் வந்த பிறகு வழக்கம் போல தொழிற் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என வண்ண பேனாவில் எழுதி எச்சரித்திருக்கிறது மத்திய நீர் ஆணையம்.

மொத்த கொள்ளளவில் 22% தான்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் 91 பெரிய நீர் தேக்கங்களில் முழு கொள்ளளவு 162 பில்லியன் க்யூபிக் மீட்டர். ஆனால் இப்போது இந்த நீர் தேக்கங்களில் வெறும் 36 பில்லியன் க்யூபிக் மீட்டர் தான் நீர் இருக்கிறது. அதாவது மொத்த கொள்ளளவில் 22 சதவிகிதம் மட்டுமே தண்ணீர் இருக்கிறது. இதையும் மக்களோ, ஊடகம்வோ சொல்லவில்லை. மத்திய நீர் ஆணையத்தில் வலைதளம் சொல்கிறது.

வெறும் 18% தான்

இந்தியாவில் தற்போது 18% பேருக்கு தான் அரசு குழாய் வழியாக நீரை வீட்டுக்கே கொண்டு சென்று கொடுக்கிறது. மீதமுள்ள 82 சதவிகிதம் பேர் பொதுக் குழாய், ஆற்றங்கரை, அடி பம்ப், கார்ப்பரேஷன் பார வண்டி (லாரி) போன்றவைகளைத் தான் நம்பி இருக்கிறார்கள். இந்த பிரச்னையை தீர்க்கத் தான் ஜல் சக்தி (நீர் சக்தி) அமைச்சகம் அமைக்கப்பட்டு, 2024-க்குள் இந்தியர்கள் அனைவருக்கும் அரசு குழாய் வழியாக வீட்டுக்கே நீரைக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும் என இலக்கு வைத்துக் கொண்டீர்கள்.

வந்து பாருங்க

ஆனால் அதே நீர் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் “இந்தியாவில் நிரம்பத் தண்ணீர் இருக்கிறது. தண்ணீர் இல்லை என்று சொல்பவர்கள் எல்லாம் ஆண்டி இந்தியர்கள், மோடிக்கு எதிரானவர்கள்” என்கிற தொனியில் ஹாயாக கருத்துச் சொல்கிறார். ஐயா புதிய ஜல் சக்தி அமைச்சரே, ஒரு வாரம் சென்னைக்கு வந்து சொகுசு ஹோட்டல்ல தங்காம, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மவுண்ட் ரோட், சைதாப் பேட்டை, கிண்டி, தாம்பரம்-ன்னு ஏதாவது வீட்ல போய் தங்கி இருந்து பாருங்கய்யா… தண்ணி பிரச்னைன்னா என்னன்னு மொதல்ல உங்களுக்கு புரிய வரட்டும். அதுக்கு அப்புறம் நீங்க வீட்டுக்கு வீடு குழாய் போட்டு தண்ணி தரலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

Mission News Theme by Compete Themes.