அரசிடம் என்ன எதிர்பார்க்கலாம்?

அரசிடம் என்ன எதிர்பார்க்கலாம்?

தொழில் மற்றும் வர்த்தக உலகில், பொருளாதார தேக்கம் விலக, அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை குறித்து, பெரும் எதிர்பார்ப்புகள் தெரிகின்றன.பொருளாதார தொய்வு, தேக்கமாக மாறிவிடக்கூடாது என்பதே அனைவரின் கவலை. அப்படி நடக்காமல் இருக்க, துரிதமான, கனமான பொருளாதார முடிவுகள் தேவை.
அந்த முடிவுகள் மிக வேகமாக எடுக்கப்பட வேண்டும் என்ற, பொதுவான எதிர்பார்ப்பில் நியாயம் இருக்கிறது.அரசின் பொருளாதார முடிவுகள், மக்கள் மத்தியில், மனநிலை மாற்றம் உருவாக உதவுவதாக இருக்க வேண்டும். புதிய உற்சாகத்தையும், நம்பிக்கையையும் ஊட்டும் வண்ணம், அரசின் முடிவுகள் இருக்க வேண்டியது அவசியம்.என்ன செய்தால் தற்போதைய சூழல் மாறும் என்ற கணிப்பு இன்னும் உருவாகவில்லை என்றே தோன்றுகிறது.
கடன் வசதிஅதனால் தானோ என்னவோ, ஒவ்வொரு துறையும் தனித்துவமான தனது தேவைகளையே முன்வைத்து, நாட்டின் பொதுவான தேவைகளை முன்வைக்க தவறுகிறது.இந்தச் சூழலில், அரசு எல்லா தரப்புகளிடமும் நிதானமாக கருத்து கேட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இன்னும் சில நாட்களில், அரசு தன் நிலைப்பாட்டையும், நடவடிக்கைகளையும் தெளிவுபடுத்தும். அரசின் அறிவிப்புகள் எப்படி வரவேற்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தே, அந்த முடிவுகளின் உடனடி தாக்கத்தை அளவிட முடியும். அதற்கு அனைவரும் காத்திருக்கின்றனர்.அரசிடம் நாம் குறைந்தபட்சமாக என்ன எதிர்பார்க்கலாம்?அரசு, கொள்கை ரீதியான மாற்றங்களை கொண்டு வர, அவசரம் காட்ட வேண்டும். அந்த மாற்றம், தொழில் மற்றும் வர்த்தக உலகில், தேவையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.வங்கிகள், தொழில் மற்றும் வர்த்தகத்திற்கு தேவையான கடன் வசதிகளை கொடுக்க முன் வரலாம்.
இதனால், நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கிய குறு, சிறு தொழில்கள் இனி, வங்கி சார்ந்த இயக்கத்திற்கு மாறலாம்.அவகாசம்நிதி நிறுவன முடக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு, இதனால் விலகலாம். மைய கட்டுப்பாட்டு வங்கியால் குறைக்கப்பட்ட வட்டி விகிதங்கள், வாடிக்கையாளர்களை சென்று அடைய, பொதுத்துறை வங்கிகளை அரசு நிர்ப்பந்திக்கலாம்.இதனால், ஒட்டுமொத்த பொருளாதாரமும் வளர்ச்சி பெறலாம். பல நிறுவனங்களின் நிதி செலவு குறையும். இதனால், அவர்களின் தொழில் மேம்படத் தேவையான செலவுகளை, இந்த சேமிப்புகளை கொண்டு செய்து முடிக்க முடியும்.ஏற்கனவே, தொழில் சிரமங்களில் சிக்கி இருக்கும் நல்ல வாடிக்கையாளர்களுக்கு, கடனின் அசலை திருப்பிக் கொடுக்க, பொதுத்துறை வங்கிகள், அவர்களுக்கு அதிக கால அவகாசம் தரலாம்.ஒருமித்த கருத்துஅரசு வங்கிகள், கொடுக்கும் வாகன கடன்களை அதிகரிக்கலாம்.
இதனால், குவிந்து கிடக்கும் வாகன கணக்கு வேகமாக குறையும். மீண்டும் வாகன உற்பத்தி வளர இது மட்டுமே வழிவகுக்கும்.பொருளாதாரத்தில் மேலும் கடன் வளர்ச்சி பெருக, அரசு பொதுத்துறை வங்கிகளை ஊக்குவிக்கலாம். வருமான வரி சார்ந்த மாற்றங்களை குறுகிய காலகட்டத்திற்கு கொண்டு வரலாம்.
குறிப்பிட்ட பயனாளிகளுக்கு வரிச் சலுகைகள் கொடுத்து, அவர்கள் தைரியமாக முதலீடுகள் செய்ய ஊக்குவிக்கலாம்.நிறுவன நம்பிக்கையும், நுகர்வு நம்பிக்கையும் வளரும் வகையில், அரசால் எடுக்கப்படும் முடிவுகள் விரைந்து உதவ வேண்டும். இதில், அனைவர் மத்தியிலும் ஒருமித்த கருத்து தெளிவாக தெரிகிறது.

Source: dinamalar

Author Image
Agamagizhan R