அசாதாரண நடவடிக்கை தேவை!

அசாதாரண நடவடிக்கை தேவை!

எல்லோர் பார்வையும், இப்போது பிரதமர் அலுவலகத்தை நோக்கியே திரும்பியிருக்கிறது. பல்வேறு துறைகள் சந்தித்து வரும் சிரமங்களை தீர்ப்பதற்கான மாயத் திறவுகோல், தற்போது, பிரதமர் அலுவலகத்தில் தான் இருக்கிறது. அவர் என்ன செய்ய வேண்டும்?
மகிந்திரா நிறுவனம், மாதம் தோறும், 8 முதல், 14 நாட்களுக்கான உற்பத்தியை நிறுத்தி வைப்பதாக சென்ற வாரம் சொன்னது. அதைத் தொடர்ந்து லுாகாஸ் டி.வி.எஸ்., சுந்தரம் கிளேட்டன், கதாநாயகன் மோட்டோகார்ப் ஆகிய நிறுவனங்களும் தங்கள் உற்பத்தியைக் குறைக்க தொடங்கியுள்ளன. அதாவது, ‘வேலையில்லா நாட்கள்’ அதிகமாக தொடங்கிஉள்ளது.ஆட்டோமொபைல் துறை தான் இந்தியாவின் வளர்ச்சியை, இதுகாறும் பறைசாற்றிக் கொண்டு இருந்தது. அதில் கடந்த, 19 ஆண்டுகளில் காணாத தளர்ச்சி, தற்போது ஏற்பட்டுள்ளது. 42 மாதங்கள்கடந்த, 10 மாதங்களாக, தொடர்ச்சியாக விற்பனை சரிந்து வருகிறது. 31 சதவீத விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதில் இயங்கிய, 300 டீலர்கள், தங்கள் கடைகளை கட்டிக்கொண்டு போய்விட்டார்கள் என்று தெரிவிக்கிறது, ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம். கோடிக்கணக்கானவர்களுக்கு, நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை வழங்கிவந்த இந்தத் துறையில், தற்போது, 8 முதல், 10 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோயுள்ளன என்கின்றனர், இத்துறை நிபுணர்கள்.வளர்ச்சியின் குறியீடாக கருதப்பட்ட மற்றொரு துறை மனை வணிகம். கிட்டத்தட்ட, 250 உபதொழில்களையும் சேர்த்தே ரியல் எஸ்டேட் என, குறிப்பிடப்படுகிறது. கடந்த ஓராண்டாக, விற்பனைத் தேக்கம். அதாவது, 42 மாதங்களுக்கான தேவை, விற்பனையாகாமல் நிற்கிறது என்று தெரிவிக்கிறது ஓர் அறிக்கை.வழக்கமாக, 10 முதல், 12 மாதங்களின் தேவைதான் முன்கூட்டியே கட்டப்பட்டு காத்திருக்கும். அடுத்த மூன்றாண்டுகளுக்குப் புதிய கட்டடங்களே கட்டவேண்டாம் என்பது தான் இதற்கு அர்த்தம். இருப்பதை விற்பனை செய்தாலே, மூன்றாண்டுகளுக்கான தேவை பூர்த்தியாகும்.
பாதுகாப்பு உணர்வுஅப்படியென்றால், இத்துறை எவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது? இனி, புதிய கட்டடங்களே வேண்டாம் என்றால், 250 உபதொழில்களும் நசிந்துபோய்விடுமே?வண்டியோ, வீடோ கூட கொஞ்சம் பெரிய செலவுகள். அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களை விற்பனை செய்பவை, எப்.எம்.சி.ஜி., எனப்படும், நுகர்பொருட்கள் துறை. இந்துஸ்தான் லீவர், டாபர், பிரிட்டானியா போன்ற நிறுவனங்கள் எல்லாம் திணறுகின்றன.கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டின், ஏப்ரல்- – – ஜூன் மாதத்தில், விற்பனை பாதியளவுக்கு குறைந்து போயுள்ளது.
அதாவது, மக்கள் சோப்பு, சோப்புத் துாள், வீடு துடைக்கும் கிளீனர் உட்பட பல பொருட்களை வாங்குவதைக் குறைத்துக் கொண்டு விட்டனர்.ஒருவித பயம் வந்துவிட்டது. கஷ்டகாலத்துக்குச் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பாதுகாப்பு உணர்வு ஏற்பட்டு விட்டது. அதனால் தான், பங்குச் சந்தைகளிலோ, மியூச்சுவல் பண்டுகளிலோ சிறிய முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறைவாக இருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில்தான், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்ற வாரம் நிதி நிறுவனங்கள், எஸ்.எம்.இ.,க்கள், தொழில்துறையினர், ஆட்டோமொபைல் துறையினர் என்று பலரையும் சந்தித்தார். பின்னர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துஉள்ளார்.தள்ளுபடிஇங்கே தான், பிரதமர் அலுவலகத்தை நோக்கி அனைவர் கவனமும் திரும்பியிருக்கிறது. சரிந்துபோயுள்ள பொருளாதாரத்தை மேம்படுத்த, பிரதமர் செய்ய வேண்டியவை பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.முதலில், மக்கள் கையில் கொஞ்சம் உபரி பணம் சேருவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். அதுதான், இங்கே நிதி சுழற்சியையும் அதன்மூலம் வணிக சுழற்சியையும் உற்பத்தி வளர்ச்சியையும் அதிகப்படுத்தும்.ரெப்போ விகிதத்தை நன்கு குறைத்துள்ளது, ஆர்.பி.ஐ., அந்தப் பலன் மொத்தத்தையும் பொதுமக்களுக்கு வழங்காமல் வங்கிகள் சண்டித்தனம் செய்கின்றன. இதனை களைய வேண்டும்.ஜி.எஸ்.டி., வரிவிதிப்பில், 28 சதவீத அடுக்கில் இருக்கும் வாகனங்களுக்கான வரியை, 18 சதவீதமாக குறைக்க வேண்டும்.
அதேபோல், புதிய நேரடி வரிவிதிப்புக் கொள்கை அறிமுகம் செய்யப்படுவதோடு, கார்ப்பரேட் வரி, 25 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும்.எல்லாவற்றுக்கும் மேல், இரண்டு முக்கியமான விஷயங்களை எதிர்பார்க்கிறது தொழில்துறை. ஒன்று, முதலீடுகள் செய்வதை ஊக்கப்படுத்தும் முயற்சியாக, முதலீட்டு தள்ளுபடி வழங்க வேண்டும். அதாவது, அவர்களுடைய முதலீடுகளுக்கு விதிக்கப்படும் வரியில் இருந்து தள்ளுபடி வேண்டும்.இரண்டாவது, அரசாங்கமே, பெரும் முதலீடுகள் செய்ய வேண்டும்.
பெரும் முதலீடுதனியார் துறை முதலீடு கள் சரிந்துவிட்ட நிலையில், இன்றைய தேதியில் வேறு எங்கிருந்தும் முதலீடுகள் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்த தேக்கத்தைப் போக்க அரசாங்கம் தான் பெரும் முதலீடுகளைச் செய்தாக வேண்டும்.அமெரிக்காவில் புஷ் செய்தது போன்று, மக்கள் கையில் பணமாகக் கொடுத்து, நிதிச் சுழற்சியை மீண்டும் துாண்டப் போகிறாரா அல்லது அதிபர் ஒபாமா செய்தது போன்று, வருமான வரிப் பிடித்தத்தில் சலுகையாக வழங்கப் போகிறாரா என்று தெரியவில்லை.அசாதாரணமான காலங்களில், அசாதாரணமாக நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.
இது, அத்தகைய ஒரு தருணம். இக்கட்டுரையை நீங்கள் படிக்கும் நேரம், அத்தகைய ஓர் அறிவிப்பு வந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.————-ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்[email protected]

Source: dinamalar

Author Image
Agamagizhan R