இப்போதைக்கு குறையாது வெங்காயம் விலை.. பிப்ரவரி வரை ஏற்றுமதி தடையை நீடிக்க திட்டம்

இப்போதைக்கு குறையாது வெங்காயம் விலை.. பிப்ரவரி வரை ஏற்றுமதி தடையை நீடிக்க திட்டம்

 

 

மும்பை: வெங்காய விலை ஏற்றத்தின் காரணமாக வரும் பிப்ரவரி மாதம் வரை வெங்காய ஏற்றுமதியை தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை கிடுகிடுவென ஏற்றம் கண்டது. சில நகரங்களில் கிலோ 100 ரூபாய் அளவுக்கு கூட விற்பனையானது.

கடந்த செப்டம்பர் மாதம் முதலே வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்த போதிலும் கூட, வெள்ளம், மழை, கால நிலை மாற்றம் போன்ற, பல்வேறு காரணிகளால் வெங்காயத்தின் விலை பெருமளவுக்கு குறையவில்லை.

கர்நாடகாவின் வடக்கு பகுதி மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் வெங்காயம் அதிக அளவுக்கு உற்பத்தி ஆகிறது. ஆனால் இந்த பிராந்தியத்தில்தான் பருவ மழையின் தாக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டு வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆப்கானிஸ்தான், ஈரான் உள்ளிட்ட ஐந்து நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்தது. இப்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும் கூட தற்போதைய நிலவரப்படி வெங்காயத்தின் மொத்த விலை கிலோவுக்கு 40 ரூபாய் என்ற அளவில் உள்ளது.

எனவே வரும் பிப்ரவரி மாதம் வரை வெங்காய ஏற்றுமதி தடையை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வெங்காயத்தின் விலை இன்னும் குறையும் வரை ஏற்றுமதிக்கான தடையை நீடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

“ஜனவரி முதல் வெங்காய விநியோகம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு கிலோ வெங்காயம் 20 ரூபாய்க்கு கீழே சென்ற பிறகு ஏற்றுமதி தடையை விலக்க திட்டமிடலாம்” என்று நுகர்வோர் விவகாரத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மும்பைக்கு கிழக்கே 180 கி.மீ தொலைவில் உள்ள கோடேகான் கிராமத்தைச் சேர்ந்த 79 வயதான சாகரம் தரேகர் என்ற விவசாயி தங்கள் நிலைமையை இப்படி சொல்கிறார்: கடந்த மாதம் பெய்த அடைமழை (கனமழை)யால் வயல்கள் பல நாட்கள் நீரில் மூழ்கியது. எனவே 2 ஏக்கரில் வெங்காய பயிர்கள் சேதமடைந்தன.

மழைக்கால சேதம் காரணமாக குளிர்காலத்தில் பயிர் நடவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நான் வெங்காயம் நடவு செய்ய விரும்புகிறேன், ஆனால் நாற்றுகள் கிடைக்கவில்லை என்கிறார்.

ஒருபக்கம் இயற்கை சீற்றம் மறுபக்கம், நாற்று விநியோகம் குறைபாடு போன்றவை, வெங்காய விலையை இன்னும் உயரத்திலேயே வைத்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

Author Image
murugan