இரண்டாவது நாளாக முடங்கியுள்ள கணினிமய சேவை.. கடுப்பில் ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்கள்..!

இரண்டாவது நாளாக முடங்கியுள்ள கணினிமய சேவை.. கடுப்பில் ஹெச்டிஎஃப்சி வாடிக்கையாளர்கள்..!

 

 

டெல்லி: நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஹெச்டிஎஃப்சி தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஹெச்.டி.எப்.சி வங்கியின் கணினிமய சேவை இரண்டாம் நாளாக முடங்கியுள்ளது. இதனால் வடிக்கையாளர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஹெச்.டி.எப்.சி வங்கியின் இணைய வங்கி மற்றும் மொபைல் பேங்கிங் சேவை திங்கட்கிழமை காலை முதல் தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக சரி வர இயங்கவில்லை.

இதுகுறித்த புகார்கள் சமூக வலைதளங்களில் பரவலாகக் காணப்பட்ட நிலையில், ஹெச்.டி.எப்.சி வங்கி வாடிக்கையாளர்கள் இதனால் பெரிய சிரமங்களை சந்தித்து வருவதாகவும் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இதுகுறித்து ஹெச்.டி.எப்.சி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக இணைய வங்கி சேவை மற்றும் மொபைல் பேங்கிங் ஆப் சேவை தற்காலிகமாக முடங்கியுள்ளது.

மேலும் எங்களது தொழில்நுட்ப வல்லுநர்கள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். இன்னும் சில மணி நேரத்தில் இந்தப் பிரச்னைக்கு தீர்வு கண்டு விடுவோம் என நம்புகிறோம் என்று தெரிவித்துள்ளது.

சில வாடிக்கையாளர்கள் நெட்பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் பயன்பாட்டைப் பயன்படுத்தி பரிவர்த்தனை செய்ய முடியும் என்றாலும், ஒரு சிலர் இன்னும் இடைப்பட்ட சிக்கல்களை எதிர்கொண்டிருக்கலாம். எனவே, சிரமத்திற்கு வருந்துகிறோம் எனவும் தெரிவித்துள்ளது.

மாதத்தின் முதல் வாரத்தில் சம்பளம் வரும் நேரம், மாதாந்திர செலவுகள் உள்ள நேரமாக உள்ள நிலையில், இதுபோன்ற பிரச்னையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஹெச்.டி.எப்.சி வங்கியின் சுமார் 4.5 கோடி வாடிக்கையாளர்களில், பெரும்பாலானோர் பணப் பரிவர்த்தனைகள் ஏதும் செய்ய முடியாது சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனால் கடுப்பான வாடிக்கையாளர்கள் சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்து வருகின்றனர். இந்தியாவில் தனக்கென சந்தை பனினை கொண்டுள்ள, இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் மொத்தம் பல கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களில் தினசரி இணைய வசதிகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களில் அதிகம் பேர் உள்ளனர். இதனால் அவர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி பங்கின் விலை 10 ரூபாய் குறைந்து, 1255 ரூபாயாக குறைந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய தனியார் துறையை சேர்ந்த வங்கியில் இப்படி ஒரு பிரச்சனை, அவ்வங்கி வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது எனினும், இது விரைவில் சரி செய்யப்படலாம் என்றும் வங்கித் தரப்பில் கூறப்பட்டுள்ளது சற்றே ஆறுதல் தரும் விதமாக இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
You have already subscribed

Source: Goodreturns

Author Image
murugan