உலகளவில் கணிப்பொறி விற்பனை 2011க்குப் பிறகு அதிகரிப்பு

உலகளவில் கணிப்பொறி விற்பனை 2011க்குப் பிறகு அதிகரிப்பு

புதுடில்லி:உலகளவிலான கம்ப்யூட்டர்கள் விற்பனை, கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், 2.3 சதவீதம் அதிகரித்துள்ளது என, கார்ட்னர் நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்த ஆய்வு நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், உலகளவில், கம்ப்யூட்டர் விற்பனை, 2.3 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம், 7.06 கோடி கம்ப்யூட்டர்கள் விற்பனை ஆகியுள்ளன.இதுவே, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில், மொத்தம், 6.9 கோடி கம்ப்யூட்டர்கள் விற்பனை ஆகியிருந்தன.

கடந்த, 2011ம் ஆண்டுக்குப் பிறகு, முதன்முறையாக, கம்ப்யூட்டர் சந்தை வளர்ச்சியை கண்டுள்ளது.இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம், இயங்கு தளத்தை ‘விண்டோஸ் 10’ நிலைக்கு கம்ப்யூட்டர்களை உயர்த்த வேண்டிய தேவை வணிகங்களுக்கு ஏற்பட்டதுதான். குறிப்பாக, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஜப்பான் ஆகிய நாடுகளில் இதற்கான தேவை அதிகரித்ததுதான்.

இந்த வளர்ச்சி, இந்த ஆண்டிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம், ஆசியா உள்ளிட்ட பல பகுதிகளிலும் இதற்கான தேவை அதிகரிக்கும் என்பதுதான்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: dinamalar

Author Image
Agamagizhan R