மாருதி நிகர லாபம் 4.13 சதவீதம் அதிகரிப்பு

மாருதி நிகர லாபம் 4.13 சதவீதம் அதிகரிப்பு

புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான, மாருதி சுசூகியின் நிகர லாபம், நடப்பு நிதியாண்டின், மூன்றாவது காலாண்டில், 4.13 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம், 4.13 சதவீதம் அதிகரித்து, 1,587 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இதுவே, இதற்கு முந்தைய நிதியாண்டில், 1,525 கோடி ரூபாயாக இருந்தது. மொத்த வருவாய், மதிப்பீட்டு காலத்தில், 20 ஆயிரத்து 721 கோடி ரூபாயாக உள்ளது. இது, கடந்த நிதியாண்டில், 19,681 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மதிப்பீட்டு காலத்தில், நிறுவனம், மொத்தம், 4.37 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 2 சதவீதம் அதிகம் ஆகும்.இதேபோல், உள்நாட்டு விற்பனையும், கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டுடன் ஒப்பிடும்போது, 2 சதவீதம் அதிகரித்துள்ளது.

செலவுக் குறைப்பு முயற்சிகள், குறைந்த செயல்பாட்டு செலவுகள், பொருட்களின் விலை குறைவு மற்றும் கார்ப்பரேட் வரி குறைந்தது ஆகிய காரணங்களால், மதிப்பீட்டு காலத்தில் லாபம் அதிகரித்துள்ளது.இவ்வாறு, மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.

Source: dinamalar

Author Image
Agamagizhan R