பதவி விலகுகிறார் ராகுல் பஜாஜ்

பதவி விலகுகிறார் ராகுல் பஜாஜ்

புதுடில்லி: ‘பஜாஜ் ஆட்டோ’ நிறுவனத்தின் தலைவர் ராகுல் பஜாஜ், தன் பதவியிலிருந்து விலக உள்ளார் என்றும், அதன் பின், அவர் செயல் சாரா இயக்குனராக நீடிப்பார் என்றும், அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ராகுல் பஜாஜின் பதவிக்காலம், மார்ச், 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், 75 வயதாகும் ராகுல் பஜாஜ், வேறு சில கடமைகள் மற்றும் பணிகள் காரணமாக, மார்ச், 31ம் தேதிக்கு பின், நிறுவனத்தின் முழுநேர இயக்குனராக பணியாற்ற விரும்பவில்லை என்று, பஜாஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும், நேற்று நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில், ராகுல் பஜாஜ், செயல் சாரா இயக்குனராக இருப்பார் என்றும், நிறுவனத்தின் தலைவர் என்ற அந்தஸ்தில் ஏப்ரல், 1ம் தேதி முதல் தொடர்வார் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த, 1965ம் ஆண்டு, பஜாஜ் குழும வணிகத்தில் பொறுப்பேற்ற ராகுல் பஜாஜ், 7.2 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்ட நிறுவனமாக இருந்ததை, 12 ஆயிரம் கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்ட நிறுவனமாக உயர்த்தினார்.ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில், எம்.பி.ஏ., பயின்ற ராகுல் பஜாஜ், 2006 – 2010ம் ஆண்டுகளில் ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: dinamalar

Author Image
Agamagizhan R