2020-21-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று தாக்கல் எதிரொலி; இந்திய பங்குச் சந்தைகள் உயர்வு

2020-21-ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று தாக்கல் எதிரொலி; இந்திய பங்குச் சந்தைகள் உயர்வு

மும்பை: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் இன்று வர்த்த தொடக்கத்தில் இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடங்கி மீண்டும் உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 140 புள்ளிகள் குறைந்து 40,576 புள்ளிகளாக வர்த்தகமாகியது. தேசிய பங்குச் சந்தை நிஃபடி 126 புள்ளிகள் சரிந்து 11,910 புள்ளிகளாக வர்த்தகமாகியது. வர்த்த தொடக்கத்தில் சரிவை சந்தித்த பங்குசந்தைகள் மீண்டும் உயர்ந்து வர்த்தகமாகிறது. நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாத கடைசியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இதை பிப்ரவரி 1ம் தேதிக்கு பாஜ தலைமையிலான மத்திய அரசு கடந்த 2017ல் மாற்றியது. மத்திய பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2020-21ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

இது இவர் தாக்கல் செய்யும் 2வது பட்ஜெட். கடந்த ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி அப்போதைய தற்காலிக நிதி அமைச்சர் பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். பின்னர் மத்தியில் பாஜ 2வது முறையாக ஆட்சிப்பொறுப்பு ஏற்ற பிறகு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல், வரும் மார்ச் வரையிலான நடப்பு நிதியாண்டின் முழுமையான பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்று பட்ஜெட் தாக்கல் செய்வதை முன்னிட்டு, பொருளாதார ஆய்வறிக்கை மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

பொருளாதார மந்தநிலை, 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பு விகிதம் சரிவு, உள்நாட்டு உற்பத்தியில் தொடர்ச்சியான சரிவு, விலைவாசி உயர்வு என பல்வேறு சவால்களுக்கு மத்தியில், இந்த பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். எனவே, பொருளாதார மந்தநிலையை மேம்படுத்தும் அறிவிப்புகள், வருமான வரிச்சலுகை, ஜிஎஸ்டி வரி குறைப்பு, வீட்டு வசதித் திட்டத்துக்கான வரிச் சலுகைகள், நுகர்வோர் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் இன்று இந்திய பங்கு சந்தைகள் சரிவுடன் தொடங்கி மீண்டும் உயர்ந்து வர்த்தகமாகிறது.

Source: dinakaran

Author Image
murugan