பொள்ளாச்சி சந்தையில் பூசணி கிலோ ரூ.18க்கு விற்பனை

பொள்ளாச்சி சந்தையில் பூசணி கிலோ ரூ.18க்கு விற்பனை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தற்போது வெளியூர்களில் இருந்து பூசணி வரத்து அதிகரித்துள்ளது. இதனை ஒரு கிலோ ரூ.18க்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களில் பூசணி மற்றும் அரசாணிக்காய் விதைப்பில் விவசாயிகள் அதிகம் ஆர்வம் கட்டுகின்றனர். இதில் வடக்கிபாளையம், நெகமம், கோமங்கலம், கோட்டூர், சமத்தூர், ராமபட்டினம், கோபாலபுரம், சூலக்கல், கோவில்பாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பகுதிகளில் வெள்ளை பூசணி அதிகளவு  சாகுபடி செய்யப்படுகிறது. விளைச்சல் அதிகரித்தவுடன் அறுவடை செய்யப்பட்டு மார்க்கெட்டுக்கு மொத்த விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் கடந்த தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கி ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சாகுடி செய்யப்பட்ட  பூசணிகள், கடந்த நவம்பர் மாதத்தில் நல்ல விளைச்சலுடன் இருந்தது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, விவசாயிகள் பூசணிகளை அறுவடை செய்து, மார்க்கெட்டுக்கு கொண்டு வந்தனர்.

தற்போது சுற்று வட்டார கிராமங்களில் புதிதாக பூசணி சாகுபடியில் விவசாயிகள் பலர் ஈடுபட்டுள்ளனர். இதனால் உள்ளூர் பகுதியில் பூசணி அறுவடை பணி மிகவும் குறைந்துள்ளது. இதற்கு மாறாக உடுமலை, கணியூர், ஒட்டன்சத்திரம், உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து, பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு பூசணி வரத்து தற்போது அதிகரித்துள்ளது. இந்த பூசணிகள் உள்ளூர் பகுதியில் விளையும் அளவை விட மிகவும் பெரிதாக உள்ளது. ஒவ்வொன்றும் சுமார் 8 கிலோ முதல் 25 கிலோ வரை உள்ளது. வெளியூர்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட பூசணிகளை, விவசாயிகள் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மூலம், பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். மார்க்கெட்டுக்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பூசணி வரத்து குறைந்தாலும், வெளியூர்களில் இருந்து பூசணி வரத்து இருப்பதால், அதனை பெரும்பாலும் கேரளா வியாபாரிகளே வாங்கி செல்கின்றனர். இத்தகைய பூசணி ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.18 வரை என விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Source: dinakaran

Author Image
murugan