வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் பிரிட்டனுடன் நிறைவேற வாய்ப்பு

வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் பிரிட்டனுடன் நிறைவேற வாய்ப்பு

திருப்பூர்: ‘‘ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறியுள்ள பிரிட்டனுடன், இந்தியா வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது,’’ என, திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஐரோப்பிய யூனியனில்இருந்து, பிரிட்டன் நேற்று முன்தினம் இரவு, அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. திருப்பூர் உட்பட, நாட்டின் பல்வேறு ஜவுளி நகரங்களில் இருந்து, பிரிட்டனுக்கு அதிகளவு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாகின்றன. திருப்பூர் பின்னலாடை துறை ஆலோசகர் சபரி கிரீஷ் கூறியதாவது: ஐரோப்பிய யூனியனுடன், இந்தியா வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறுவதில் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் இருந்து, பிரிட்டன் வெளியேறியது, இந்திய ஆடை ஏற்றுமதி துறைக்கு சாதகமான சூழலை உருவாக்கும். பிரிட்டன் தனியாக பிரிந்துள்ளதால், இந்தியஅரசு சிறிய முயற்சி மேற்கொண்டாலும் கூட, அந்நாட்டுடன் எளிதாக வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவேற வாய்ப்பு உள்ளது.

வர்த்தக ஒப்பந்தம் நிறைவேறினால், பிரிட்டன் சந்தையில் இந்திய ஆடைகள் வரியின்றி இறக்குமதியாகும். இதன் மூலம், பிரிட்டன்வர்த்தகர்கள், ஆடை தயாரிப்புக்கான, ‘ஆர்டர்’களை, திருப்பூர் உட்பட இந்திய ஆடை ஏற்றுமதிநிறுவனங்களுக்கு அதிகளவில் வழங்குவர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Source: dinamalar

Author Image
Agamagizhan R