தங்கம் விலை கிடு, கிடு உயர்வு ஒரே நாளில் சவரன் ரூ. 312 அதிகரிப்பு: இன்னும் அதிகரிக்க வாய்ப்பு

தங்கம் விலை கிடு, கிடு உயர்வு ஒரே நாளில் சவரன் ரூ. 312 அதிகரிப்பு: இன்னும் அதிகரிக்க வாய்ப்பு

சென்னை: தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 312 அதிகரித்தது. மீண்டும் சவரன் ரூ. 31 ஆயிரத்தை தாண்டியுள்ளது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதே நேரத்தில் இன்னும் தங்கம் விலை உயர தான் வாய்ப்புள்ளது என்று நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 8ம் தேதி தங்கம் விலை ரூ. 31,176 ஆக அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டது. இது தான் தங்கம் விலை வரலாற்றில் புதிய சாதனையை படைத்தது. அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும், அடுத்த நாள் பெயரளவுக்கு குறைவதுமான நிலை நீடித்து வருகிறது.

கடந்த 25ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ. 30,896க்கும், 27ம் தேதி ரூ. 31,056, 28ம் தேதி ரூ. 31,000, 29ம் தேதி ரூ. 30,848, 30ம் தேதி ரூ. 31,128க்கும் விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ. 3,883க்கும், சவரன் ரூ. 31,064க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று தங்கம் விலையில் அதிரடி மாற்றம் காணப்பட்டது. அதாவது, யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் கிராமுக்கு ரூ. 39 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 3922க்கும், சவரனுக்கு ரூ. 312 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 31,376க்கும் விற்கப்பட்டது. ஒரே நாளில் சவரன் ரூ. 312 அளவுக்கு உயர்ந்திருப்பது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை ஆகும். அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். திங்கட்கிழமை மார்க்கெட் தொடங்கியதும் தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும். அதே நேரத்தில் தங்கம் விலை இன்னும் உயர தான் வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக சென்னை தங்கம், வைரம் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் கூறியதாவது:
உற்பத்திக்கான பங்கு சந்தையின் வீழ்ச்சியின் தாக்கத்தால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. அதன் தாக்கம் இந்திய பங்கு சந்தையில் எதிரொலித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி. போன்ற காரணங்களால் தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இன்னும் தங்கம் விலை உயர தான் வாய்ப்புள்ளது. மெதுவாக ஏறிக்கொண்டே போகும். திங்கட்கிழமை தான் எந்த அளவுக்கு உயர போகிறது என்பது தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார்.

Source: dinakaran

Author Image
murugan