தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி அதிகரிப்பு:கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு

தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி அதிகரிப்பு:கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வு

புதுடில்லி:நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி, எட்டு ஆண்டுகளில் இல்லாத வகையில், கடந்த ஜனவரி மாதத்தில் அதிகரித்துள்ளது. புதிய, ‘ஆர்டர்’கள், தேவை அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக, ஜனவரி மாதத்தில் இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.
இது குறித்து, ஐ.எச்.எஸ்., – மார்க்கிட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி, கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இவ்வளர்ச்சியை குறிக்கும், ஐ.எச்.எஸ்., மார்க்கிட் இந்தியா பி.எம்.ஐ., குறியீடு, 55.3 புள்ளியாக உயர்ந்துள்ளது. இது, கடந்த டிசம்பரில், 52.7 புள்ளியாக இருந்தது.
தேவை அதிகரிப்பு
இக்குறியீடு, 50 புள்ளிகளை தாண்டினால், அது வளர்ச்சியை குறிக்கும்; 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும். இதனடிப்படையில் பார்க்கும்போது, கடந்த ஜனவரி மாதத்தில், தயாரிப்பு துறை வளர்ச்சியை பெற்றுள்ளது.ஜனவரி மாதத்தில், தேவை அதிகரிப்பு இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. தேவை அதிகரிப்பின் காரணமாக, புதிய ஆர்டர்கள், புதிய வணிகங்கள், உற்பத்தி, ஏற்றுமதி, வேலைவாய்ப்பு ஆகியவையும் அதிகரித்துள்ளன. அது மட்டுமின்றி, வணிக நம்பிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, டிசம்பரில், 52.7 புள்ளிகளாக இருந்தது, ஜனவரி மாதத்தில், 55.3 புள்ளிகளாக, கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது.கடந்த, 30 மாதங்களாக, தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி தொடர்ந்து, 50 புள்ளிகளுக்கு மேல் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, புதிய வணிகங்களுக்கான வாய்ப்புகள் வலுவான முன்னேற்றத்தை குறிப்பிடுவதாக உள்ளன. தேவை மற்றும் வாடிக்கையாளர்கள் விருப்பம் அதிகரித்துள்ளது இதற்கு காரணம்.வெளிச் சந்தைகளின் காரணமாக, தேவை வலுவடைந்துள்ளது. இதனால், 2018ம் ஆண்டு நவம்பர் முதல், ஏற்றுமதி வளர்ச்சி வேகமாக அதிகரித்துள்ளது.
வேலைவாய்ப்பை பொறுத்தவரை, கடந்த ஜனவரியில் பணியமர்த்தும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. கடந்த ஏழரை ஆண்டுகளில் இல்லாத வகையில், வேலைவாய்ப்புகள் விரைவாக அதிகரித்துள்ளன.இந்த புதிய வேலை உருவாக்கத்துக்கு, புதிய வணிகங்கள் வளர்ச்சி மற்றும் திட்டங்கள் காரணங்களாக அமைந்துள்ளன.இதற்கிடையே, இந்திய உற்பத்தியாளர்கள், எதிர்வரும் ஆண்டில், உற்பத்தி குறித்து மிகவும் உற்சாகமாக உள்ளனர். நம்பிக்கைசிறந்த தேவைகள், புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்தால், சந்தை முயற்சிகள், விரிவாக்கத் திறன் மற்றும் புதிய தயாரிப்பு அறிமுகங்கள் ஆகியவை, தயாரிப்பாளர் களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன.
விலையை பொறுத்தவரை, உள்ளீட்டு செலவுகள் மற்றும் தயாரிப்பு செலவுகள் ஆகிய இரண்டிலும் ஓரளவு அதிகரிப்பு இருந்தது என, ஆய்வுகள் தெரிவித்துள்ளன.நிறுவனங்கள் சிக்கனமான செலவுகளால் பயன் அடைந்துள்ளன. இது, தயாரிப்பு செலவை ஓரளவு கட்டுப்படுத்த உதவி உள்ளது.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில், தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி, ஜனவரி மாதத்தில் தொடர்ந்து வலுப் பெற்றுஉள்ளது. இதன் செயல்பாடுகள், கடந்த எட்டு ஆண்டுகளில் காணப்படாத வேகத்தில் மேம்பட்டுள்ளன.பாலியானா டி லிமா, தலைமை பொருளாதார வல்லுனர், ஐ.எச்.எஸ்., மார்க்கிட்எட்டு பிரிவுகள்தயாரிப்பு துறையில், அடிப்படை உலோகங்கள், ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக், உணவு மற்றும் பானகங்கள் உட்பட, எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களிடம், ஐ.எச்.எஸ்., மார்க்கிட் நிறுவனம் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

Source: dinamalar

Author Image
Agamagizhan R