Press "Enter" to skip to content

காயம் காரணமாக நியூசி. தொடரில் இருந்து முஷ்பிகுர் ரஹிம் விலகல்

வங்காள தேச கிரிக்கெட் அணி மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 26-ந்தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வங்காள தேசம் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது வங்காள தேச அணியின் பேட்ஸ்மேனும் விக்கெட் கீப்பரும் ஆன முஸ்டாபிகுர் ரஹிமிற்கு தொடையில் காயம் ஏற்பட்டது. அப்போது அவர் 42 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து பேட்டிங் செய்ய முடியாமல் ‘ரிட்டையர்டு ஹர்ட்’ மூலம் வெளியேறினார்.

இதனால் கடைசி இரண்டு போட்டிகளில் அவர் பங்கேற்கமாட்டார் என்று வங்காள தேச அணி தெரிவித்துள்ளது. மேலும், காயம் முழுமையாக குணமடையவில்லை என்றால் டி20 கிரிக்கெட் தொடரில் அவர் பங்கேற்கமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பர் பணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அனுபவ வீரரான ரஹிம் அணியில் இடம்பெறாதது பெரிய இழப்பு என்று அந்த அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடக்கிறது.

Source: Maalaimalar