Press "Enter" to skip to content

இரண்டு மோசமான ஆட்டத்தை வைத்து கோலியை விமர்சிப்பது சரியில்லை: சஞ்சய் பாங்கர்

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், ‘ஒரு சில ஆட்டங்களில் மோசமாக விளையாடியதை வைத்து விராட் கோலியை விமர்சிப்பது சரியில்லை’ என்று தெரிவித்தார்.

பெங்களூர்:

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார்.

ஆஸ்திரேலிய தொடருக்கு முன்பு அவர் அனைவராலும் பாராட்டப்பட்டு வந்தார். 4 டெஸ்ட் தொடர்களில் 4 இரட்டை சதம் அடித்த சாதனையாளராக விராட் கோலி ஜொலித்தார்.

ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவரது ஆட்டம் மோசமாக உள்ளது. ஆஸ்திரேலிய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அவர் திணறி வருகிறார்.

புனேயில் நடந்த முதல் டெஸ்டில் முதல் இன்னிங்சில் ரன் எதுவும் எடுக்காமலும், 2-வது இன்னிங்சில் 13 ரன்னும் எடுத்து வெளியேறி இருந்தார்.

பெங்களூரில் தற்போது நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸ் 12 ரன்னில் ஆட்டம் இழந்தார். 2-வது இன்னிங்ஸ் நேற்று 15 ரன்னில் அவுட் ஆனார். 4 இன்னிங்சிலும் சேர்த்து 40 ரன்களே எடுத்தார். சராசரி 10.00 ஆகும்.

இந்த மோசமான ஆட்டத்தால் விராட் கோலி விமர்சிக்கப்படுகிறார். அவரது முடிவுகள் குறித்தும் கேள்வி எழுப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஒரு சில ஆட்டங்களில் மோசமாக விளையாடியதை வைத்து விராட் கோலியை விமர்சிப்பது சரியில்லை என்று இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறி உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

விராட்கோலி மிகவும் அபாயகரமான பேட்ஸ்மேன். அவரது ஆட்டம் நம்ப முடியாத வகையில் சிறப்பாக இருக்கிறது. ஒரு சில ஆட்டம் மோசமாக அமைந்ததை வைத்து அவர் குறித்து கருத்து தெரிவிப்பது சரியில்லை. மோசமான நிலையில் இருந்து எப்படி பாடம் கற்பது என்பதே அவரது கவனமாக இருக்கும். இனி வரும் ஆட்டங்களில் அவரது மகத்துவம் தெரியும். சிறப்பாக விளையாடுவார்.

இவ்வாறு சஞ்சய் பாங்கர் கூறியுள்ளார்.

இதற்கிடையே ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் இயன் ஹீலே பெங்களூர் டெஸ்டில் விராட் கோலி ஆஸ்திரேலியர்களை உசுப்பேற்றியது (சிலெட்ஜிங்) தொடர்பாக விமர்சித்து உள்ளார்.

சிலெட்ஜிங்கால் விராட் கோலி தனது மரியாதையை இழந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »