நாகர்கோவிலில் தேசிய பளுதூக்கும் போட்டி: ராணுவம் – ரெயில்வே அணிகள் சாம்பியன்

நாகர்கோவில் :

2016-2017-ம் ஆண்டிற்கான 69-வது ஆண்கள், 32-வது பெண்கள் சீனியர் தேசிய ‘சாம்பியன்ஷிப்‘ பளுதூக்கும் போட்டி நாகர்கோவில் பொன்ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரியில் கடந்த 26-ந் தேதி முதல் நடந்து வந்தது. இதில் ஆண்களுக்கான பிரிவில் 36 மாநிலங்களை சேர்ந்த 280 பேரும், பெண்களுக்கான பிரிவில் 28 மாநிலங்களை சேர்ந்த 170 பேரும் கலந்து கொண்டனர்.

இந்த போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. 5-வது நாளான நேற்று இறுதிநாள் போட்டிகள் நடந்தன. அப்போது ஆண்களுக்கு 105 கிலோவுக்கு மேற்பட்டோருக்கான எடை பிரிவிலும், பெண்களுக்கு 75 கிலோவுக்கு மேற்பட்டோருக்கான எடை பிரிவிலும் போட்டிகள் நடந்தன.

ஆண்களுக்கான 105 கிலோவுக்கு மேற்பட்டோருக்கான எடை பிரிவில் இந்திய ரெயில்வேயை சேர்ந்த ஹிமாசுஜாஸ் 363 கிலோ எடையை தூக்கி முதல் இடம் பிடித்தார்.

இந்திய ரெயில்வேயை சேர்ந்த குர்தீப்சிங் 361 கிலோ எடையை தூக்கி 2-ம் இடமும், பஞ்சாப்பை சேர்ந்த ஜஸ்பீர்சிங் 344 கிலோ எடையை தூக்கி 3-ம் இடமும் பிடித்தனர்.

பெண்களுக்கான 75 கிலோவுக்கு மேற்பட்டோருக்கான எடை பிரிவில் அரியானா மாநிலத்தை சேர்ந்த மோனிகா தலால் 201 கிலோ எடையை தூக்கி முதல் பரிசு பெற்றார்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காஞ்சு 198 கிலோ எடையை தூக்கி 2-வது பரிசையும், இந்திய போலீஸ் அணியை சேர்ந்த ஜோஷிலா தேவி 197 கிலோ எடையை தூக்கி 3-வது பரிசையும் பெற்றனர்.

இதையடுத்து பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்திய பளுதூக்கும் சம்மேளனத்தின் துணைத்தலைவர் சகாதேவ் யாதவ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு பளுதூக்கும் சங்க மாநில தலைவரும், நாகர்கோவில் பொன்ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரி தாளாளருமான பொன்.ராபர்ட்சிங் வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பரிசு வழங்கினார்.

அப்போது ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் 69-வது ‘சாம்பியன்ஷிப்’ சுழற்கோப்பை இந்திய ராணுவ அணிக்கும், 2-வது பரிசு இந்திய ரெயில்வே அணிக்கும் வழங்கப்பட்டது.

இதேபோல் பெண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் 32-வது ‘சாம்பியன்ஷிப்’ சுழற்கோப்பை இந்திய ரெயில்வே அணிக்கும், 2-வது பரிசு ஆந்திர மாநில அணிக்கும் வழங்கப்பட்டது.

மாநிலங்களுக்கு இடையேயான போட்டியில் முதல் பரிசை மராட்டிய மாநில அணியும், 2-வது பரிசை தமிழ்நாடு அணியும் பெற்றன. சிறந்த பளுதூக்கும் வீரருக்கான பரிசை இந்திய ரெயில்வே அணியை சேர்ந்த சதீஷ்குமாரும் (வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்), சிறந்த பளுதூக்கும் வீராங்கனைக்கான பரிசை இந்திய ரெயில்வே அணியை சேர்ந்த மீராபாய் ஜானுவும் பெற்றனர்.

ஒவ்வொரு எடை பிரிவிலும் நடந்த போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கங்களும் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் பளுதூக்கும் சங்க நிர்வாகிகள் ராஜகுமார், பாண்டியன், எல்.ஏ.எஸ்.பாண்டியன், மாவட்ட விளையாட்டு அதிகாரி கில்பர்ட் பெஞ்சமின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் பளுதூக்கும் சங்க மாநில செயலாளர் சண்முகவேல் நன்றி கூறினார்.

Source: Maalaimalar