3-வது ஒருநாள் போட்டியிலும் அபார வெற்றி: வங்காளதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து

நெல்சன்:

நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நெல்சன் நகரில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்து வங்காளதேசம் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்தது. தமீம் இக்பால் 59 ரன்னும், இம்ரூல் கையூஸ், நுரூல் அசன் தலா 44 ரன்னும் எடுத்தனர்.

237 ரன் இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் டாம் லதம் 4 ரன்னில் அவுட் ஆனார். கப்தில் 6 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர் வில்லியம்சன்- நில்புரூம் ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் சதம் கடந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

அபாரமாக விளையாடிய புரூம் 97 பந்துகளை சந்தித்து 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 97 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வில்லியம்சனுடன் நீஷம் இணைந்தார். இந்த ஜோடி 42-வது ஓவரில் வெற்றியை எட்டியது. நீஷம் அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

நியூசிலாந்து அணி 41.2 ஓவரில் 239 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வில்லியம்சன் 95 ரன்களுடனும், நீஷம் 28 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். வில்லியம்சன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 3-0 என கைப்பற்றியது.

Source: Maalaimalar

Facebook Comments