புரோ கபடி சங்கம்: தமிழ் தலைவாசை வீழ்த்தி முதலிடம் பிடித்தது பெங்கால் வாரியர்ஸ்

புரோ கபடி சங்கம் தொடரில் நொய்டாவில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்திய பெங்கால் வாரியர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

7-வது புரோ கபடி சங்கம் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் நேற்று இரவு நடந்த 128-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் பொறுப்புடன் ஆடினர். இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் 13-13 என சமனிலை வகித்தன. 

இரண்டாவது பாதியில் வழக்கம்போல் தமிழ் தலைவாஸ் அணி சோபிக்க தவறியது.

இறுதியில், 33 – 29 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் பெங்கால் வாரியர்ஸ் அணி 83 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது.

ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட தமிழ் தலைவாஸ் அணி, இந்த பருவத்தில் 4 வெற்றி, 3 டிரா, 15 தோல்வி என மொத்தம் 37 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

மற்றொரு போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 41 – 36 என்ற புள்ளி கணக்கில் யு.பி யோதா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Related Tags :

Source: Maalaimalar