தேசிய சீனியர் ஸ்குவாஷ்: சவுரவ் கோஷல், ஜோஸ்னா அபாரம்

தேசிய சீனியர் ஸ்குவாஷ்: சவுரவ் கோஷல், ஜோஸ்னா அபாரம்

77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சவுரவ் கோஷல், பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோஸ்னா சின்னப்பா இருவரும் இறுதி சுற்றில் நுழைந்தனர்.

சென்னை:

77-வது தேசிய சீனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு பார்க்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் 12 முறை சாம்பியனான சவுரவ் கோஷல் (தமிழகம்) 11-9, 11-1, 11-8 என்ற நேர் செட்டில் சக மாநில வீரரான அபய்சிங்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மற்றொரு அரையிறுதியில் அபிஷேக் பிரதன் (மகாராஷ்டிரா) 11-6, 12-10, 10-12, 9-11, 11-7 என்ற செட் கணக்கில் போராடி ஹரிந்தர் பால் சிங் சந்துவை (தமிழகம்) தோற்கடித்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ஜோஸ்னா சின்னப்பா (தமிழகம்) 11-9, 11-7, 11-4 என்ற நேர் செட்டில் சன்யா வாட்சை (டெல்லி) சாய்த்து இறுதி சுற்றை எட்டினார். மற்றொரு அரையிறுதியில் தமிழக வீராங்கனை சுனைனா குருவில்லா 6-11, 11-3, 8-11, 11-8, 10-12 என்ற செட் கணக்கில் போராடி தன்வி கன்னாவிடம் (டெல்லி) தோல்வி அடைந்தார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja