தங்களை தனிமைப்படுத்திக் கொண்ட சங்ககரா, கில்லெஸ்பி

தங்களை தனிமைப்படுத்திக் கொண்ட சங்ககரா, கில்லெஸ்பி

இங்கிலாந்தில் இருந்து திரும்பிய கிரிக்கெட் ஜாம்பவான்களான சங்ககரா, ஜேசன் கில்லெஸ்பி ஆகியோர் முன்னெச்சரிக்கை காரணமாக தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.

சீனா மற்றும் ஈரானுக்கு அடுத்தப்படியாக ஐரோப்பா நாடுகள் கொரோனா வைரசுக்கு அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டின் எல்லைகளை மூடிவிட்டன. கடந்த வாரத்தில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து திரும்பியவர்கள் போலீசிடம் தங்களுடைய தகவல்களை பதிவு செய்ய வேண்டும். அதன்பின் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என இலங்கை அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் பெரும்பாலான மக்கள் வெளிநாடு பயணங்கள் குறித்த தங்களது தகவல்களை அளிப்பதில்லை என்று அரசு கவலை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் இங்கிலாந்தில் இருந்து இலங்கை திரும்பிய கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககரா தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சங்ககரா கூறுகையில் ‘‘எனக்கு கொரோனா நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லை. அதுபோன்ற ஏதும் இல்லை என்றாலும், நான் அரசின் வழிமுறைகளை கடைபிடித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் கடந்த ஒருவாரத்திற்கு முன் லண்டனில் இருந்து இலங்கை திரும்பினேன். வந்ததும் மார்ச் 1-ந்தேதியில் இருந்து 15-ந்தேதி வரைக்கும் வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பியர்கள் போலீசில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அத்துடன் அவர்களை அவர்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான். நான் எனது பெயரை போலீசில் பதிவு செய்துவிட்டது, தனிமைப்படுத்திக் கொண்டேன்” என்றார்.

மேலும், இந்த கொரோனா வைரசால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

வெளிநாடுகளில் இருந்து வந்த மூன்று பேர் கொரோனா அறிகுறி இருந்ததை அதிகாரிகளிடம் அவர்கள் மறைத்துவிட்டதை இலங்கை அரசு உறுதி செய்துள்ளது என்று சங்ககரா தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி் இங்கிலாந்தில் சசக்ஸ் அணியின் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார். இங்கிலாந்தில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் மே 28-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அவர் சொந்தநாடு திரும்பியுள்ளார். ஆஸ்திரேலியாவில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. இதனால் கில்லெஸ்பி தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். இதேபோல் ஏராளமான கிரிக்கெட் பிரபலங்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja