கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு மெஸ்சி, ரொனால்டோ உதவி

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு மெஸ்சி, ரொனால்டோ உதவி

கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளும் திணறி வரும் நிலையில் கால்பந்து ஜாம்பவான்கள் மெஸ்சி, ரொனால்டோ மருத்துவமனைகளுக்கு நிதியுதவி செய்துள்ளனர்.

உயிரை பறிக்கும் கொடிய கொரோனா வைரஸ் உலகையே ஸ்தம்பிக்க வைத்துவிட்டது. இந்த நோயால் பாதித்தவர்களுக்கு விளையாட்டு பிரபலங்களும் உதவ முன்வந்து இருக்கிறார்கள். அர்ஜென்டினாவை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு உதவும் வகையில் ரூ.8.27 கோடியை நிதியாக வழங்கி உள்ளார்.

பார்சிலோனாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரி ஒன்றுக்கும், தனது சொந்த நாட்டில் உள்ள மருத்துவ மையம் ஒன்றுக்கும் இந்த தொகையை அவர் பகிர்ந்து அளித்து இருக்கிறார். மேலும் மான்செஸ்டர் கால்பந்து கிளப்பின் மேலாளரும், பார்சிலோனா அணியின் முன்னாள் வீரருமான பெப் கார்டியாலோவும் தன் பங்குக்கு ரூ.8.27 கோடியை வழங்கி இருக்கிறார்.

இதேபோல் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும், அவரது ஏஜென்டான ஜோர்ஜ் மென்டசும் இணைந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் போர்ச்சுகல் நாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு தலா ரூ.8.27 கோடியை வழங்கியுள்ளனர். பெல்ஜியம் கால்பந்து வீரர் டோபி அல்டர்வெய்ரல்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்கள் தங்கள் உறவினர்களுடன் உரையாட உதவும் வசதியாக 12 ஐ-பேடுகளை வாங்கி தர முன்வந்துள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டில் கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அந்த நாட்டை சேர்ந்த டென்னிஸ் நட்சத்திரம் ரபெல் நடால் மற்றும் அவரது மனைவி மிர்கா ஆகியோர் ரூ.7 ¾ கோடி நிதி உதவி அளிக்க முடிவு செய்துள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja