40 அறைகளை கொண்ட ராஜிவ் காந்தி மைதானத்தை சிகிச்சைக்காக வழங்க தயார்: ஐதராபாத் கிரிக்கெட் சங்கம்

40 அறைகளை கொண்ட ராஜிவ் காந்தி மைதானத்தை சிகிச்சைக்காக வழங்க தயார்: ஐதராபாத் கிரிக்கெட் சங்கம்

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ள வீரர்கள் தங்கும் அறைகளை கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக வழங்க தயார் என ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் அதிகரித்த வண்ணமே உள்ளது. தற்போது வரை இந்தியா முழுவதும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியுள்ளது. இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுவதால் ஒவ்வொரு மாநில அரசுகளும் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கு ஏற்ற வகையில் படுக்கைகளை அதிகரித்த வண்ணம் உள்ளன.

ஒருவேளை படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் ரெயில் பெட்டிகளை படுக்கைகளாக மாற்றி கொள்ளலாம் என இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது. இதற்கிடையே புதுச்சேரி மாநில கிரிக்கெட் சங்கம், பெங்கால் கிரிக்கெட் சங்கம் மைதானத்தில் உள்ள வீரர்கள் அறைகளை வழங்க தயாராக இருக்கிறோம் என்று அறிவித்தது.

இந்நிலையில் ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் ராஜிவ் காந்தி மைதானத்தில் உள்ள வீரர்கள் அறைகளை கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக வழங்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

40 அறைக்கள் மற்றும் மிகப்பெரிய அளவில் பார்க்கிங் வசதி கொண்ட இந்த மைதானத்தை வழங்க தயாராக இருப்பது குறித்து ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் ஆர். விஜயானந்த் தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவுக்கு ராஜிவ் காந்தி மைதானத்தை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக தனிமைப்படுத்தப்பட்ட மையமாக மாற்றிக் கொள்வதற்காக வழங்க தயாராக இருக்கிறோம் என கடிதம் எழுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஆர். விஜயானந்த் கூறுகையில் ‘‘அரசுக்கு நாங்கள் ஏதாவது திரும்ப செய்ய வேண்டும் என்றால் இதுதான் சரியான நேரம் என நாங்கள் நினைக்கிறோம். பல ஆண்டுகளாக பொதுமக்கள் எங்களுக்கு தந்த ஆதரவுக்கு கைமாறாக இது இருக்கும். இது தலைவர் முகமது அசாருதீன் உள்பட அனைத்து உறுப்பினர்கள் இணைந்து ஒருமனதாக எடுத்த முடிவாகும்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja