கங்குலி உதவியால்தான் ஜோகன்னஸ்பர்க் தேர்வில் கதாநாயகனாக திகழ்ந்தேன்: ஸ்ரீசந்த் சொல்கிறார்

கங்குலி உதவியால்தான் ஜோகன்னஸ்பர்க் தேர்வில் கதாநாயகனாக திகழ்ந்தேன்: ஸ்ரீசந்த் சொல்கிறார்

ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் போட்டிக்கு முன் சவுரவ் கங்குலி என்னை நீண்ட நேரம் வலைப்பயிற்சியில் ஈடுபடுத்தியது மிகப்பெரிய அளவில் உதவியாக இருந்தது என ஸ்ரீசந்த் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஸ்ரீசந்த். 2013 ஐபிஎல் தொடரின்போது மேட்ச்-பிக்சிங் வழக்கில் கைது செய்யப்பட்டதால் கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தற்போது நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டாலும் கிரிக்கெட் விளையாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

2005 முதல் 2001 வரை இந்திய அணியின் முக்கிய நபராக இருந்தார். 2007-ம் ஆண்டு இந்தியா டி20 உலக கோப்பை அணியை வென்ற போதும், 2011-ம் ஆண்டு இந்தியா ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் உலக கோப்பையை வென்ற போதும் அணியில் இருந்தவர்.

இந்திய அணி தென்ஆப்பிரிக்காவில் 2006-ம் ஆண்டு சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. ராகுல் டிராவிட்டின் தலைமையிலான இந்திய அணி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியை வென்றது. அந்த டெஸ்டில் 8 விக்கெட் வீழ்த்தி அசத்தியவர் ஸ்ரீசந்த்.

முதல் இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளும், 2-வது இன்னிங்சில் 3 விக்கெட்டும் வீழ்த்தினார். இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீச சவுரவ் கங்குலிதான் முக்கிய காரணமாக இருந்தார் என்று ஸ்ரீசந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீசந்த் கூறுகையில் ‘‘எனக்கு அந்த சம்பவத்தை இன்னும் ஞாபகப்படுத்த முடியும். டெஸ்ட் தொடருக்கு முன் போட்செஃப்ஸ்ட்ரூமில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் விளையாடினோம். அப்போது கங்குலி மீண்டும் அணிக்கு திரும்பிய நேரம்.

போட்டி தொடங்குவதற்கு முன் கங்குலி என்னை அழைத்து வலைப்பயிற்சியின்போது பந்து வீசக் கூறினார். அந்த நேரத்தில் நான் இடது கை சுழற்பந்து வீச்சாளருக்கு சிறப்பாக பந்து வீசியது கிடையாது. ஆனால் நீண்ட நேரம் கங்குலிக்கு பந்து வீசியது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.

நான் தென்ஆப்பிரிக்கா இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசியதை நீங்கள் கவனித்திருக்க முடியும். குறிப்பாக கிரேம் ஸ்மித்திற்கு எதிராக அற்புதமாக பந்து வீசினேன். ஒவ்வொரு முறையும் பந்து வீசிய பின்னர் சச்சின் தெண்டுல்கரிடம் செல்வேன். அவர் மிட்-ஆஃப் அல்லது மிட்-ஆன் திசையில் நின்று எனக்கு ஆலோசனைக் கூறுவார்.

எனக்கு அந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. ஆனால் இது அனைத்தும் அந்த ஜாம்பவான்களால் கிடைத்தது. தென்ஆப்பிரிக்கா மண்ணில் இதுவரை இந்தியா ஏன் டெஸ்ட் தொடரை வெல்ல வில்லை என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. ஜாம்பவான்களுக்கு வலைப்பயிற்சியின் போது பந்து வீசியதால், அது என்னை சிறந்த பந்து வீச்சாளராக மாற்றியது’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja