இந்த ஒரு விஷயம்தான் கொல்கத்தா தேர்வில் வரலாற்று வெற்றி பெற காரணம்: டிராவிட்

இந்த ஒரு விஷயம்தான் கொல்கத்தா தேர்வில் வரலாற்று வெற்றி பெற காரணம்: டிராவிட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கொல்கத்தா டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி பெற நான், விவிஎஸ் லக்‌ஷ்மண், ஹர்பஜன் சிங் ஆகியோருடன் ரசிகர்களும் காரணம் என டிராவிட் தெரிவித்துள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டிகளில் 2001-ம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான போட்டியும் ஒன்று.

இந்தியா முதல் இன்னிங்சில் பாலோ-ஆன் ஆனது. இதனால் தொடர்ந்து பேட்டிங் செய்ய ஆஸ்திரேலியா அழைத்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்‌ஷ்மண் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

ராகுல் டிராவிட் 180 ரன்கள் குவித்தார். விவிஎஸ் லக்‌ஷ்மண் 281 ரன்கள் விளாசினார். இருவரும் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 331 ரன்கள் குவித்தனர். இதனால் இந்தியா 2-வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 657 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

பின்னர் 384 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா கடைசி நாளில் களம் இறங்கியது. தேனீர் இடைவேளைக்கு முன்பு வரை ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்திருந்தது. தேனீர் இடைவேளைக்குப்பின் 46 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை சந்தித்தது.

2-வது இன்னிங்சில் ஹாட்ரிக்குடன் ஹர்பஜன் சிங் விக்கெட்டுகளை வேட்டையாடினார். இந்த போட்டியில் இந்தியா வெற்றிபெற ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்‌ஷ்மண், ஹர்பஜன் சிங் ஆகியோர்தான் காரணம் எனக் கூறப்படும்.

ஆனால் ரசிகர்கள் அளித்த ஊக்கம்தான் முக்கிய காரணம் என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘கடைசி நாள் தேனீர் இடைவேளைக்குப் பிறகு இந்தியா விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சி செய்து கொண்டிருந்தபோது, அங்கு நடைபெற்ற சூழ்நிலைதான் இந்தியா வெற்றி பெற காரணம்.

ஹர்பஜன் சிங் பந்து வீசி கொண்டிருந்தார். விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டிருந்தன. ரசிகர்களிடம் இருந்து ஆதரவு நம்பமுடியாத வகையில் இருந்தது. ஈடன் கார்டன் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள்தான் போட்டியில் வெற்றி பெற உதவியாக இருந்தார்கள். ஒவ்வொரு பந்திற்கும் பிறகு ஆதரவு, ஊக்கம், உற்சாகம் கொடுத்தார்கள். தற்போது கூட அதை என்னால் நினைவு கூர்ந்து சொல்ல முடியும். தற்போதுகூட அதை என்னால் உணர முடிகிறது.

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் நினைத்து பார்க்கக் கூடிய அளவில் அதிகமான விஷயங்கள் இல்லை. ஆனால், கொல்கத்தா டெஸ்டில் கடைசி நாள் தேனீர் இடைவேளிக்குப்பின் நடந்த அந்த சம்பவம். மைதானத்தில் நிகழ்ந்த அந்த சூழ்நிலை மற்றும் தீவிரம். கொல்கத்தா மைதானம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பி இருந்தது’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja