கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் பன்டெஸ்லிகா கால்பந்து போட்டி இன்று மீண்டும் தொடக்கம்

கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் பன்டெஸ்லிகா கால்பந்து போட்டி இன்று மீண்டும் தொடக்கம்

கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் ஜெர்மனியில் பன்டெஸ்லிகா கால்பந்து போட்டி இன்று தொடங்குகிறது.

பெர்லின்:

ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்படும் பிரபலமான கிளப் கால்பந்து போட்டிகளில் பன்டெஸ்லிகாவும் ஒன்று. இந்த போட்டி ஆண்டுதோறும் ஜெர்மனியில் நடத்தப்படுகிறது. இதன்படி விறுவிறுப்பாக நடந்து வந்த 57-வது பன்டெஸ் லிகா கால்பந்து தொடர் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் அச்சத்தால் கடந்த மார்ச் 13-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டது. வீரர்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கினர். ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்ததை தொடர்ந்து பன்டெஸ்லிகா போட்டியை நடத்த அந்த நாட்டு அரசு அனுமதி வழங்கியது.

இந்த நிலையில் ஜெர்மனி அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதலோடு பன்டெஸ்லிகா போட்டி இன்று (சனிக்கிழமை) மீண்டும் தொடங்குகிறது. கொரோனா தாக்கத்துக்கு இடையே நடத்தப்படும் முதல் பெரிய போட்டி இது தான்.

இதில் மொத்தம் 18 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். நடப்பு சாம்பியன் பயர்ன் முனிச் 55 புள்ளிகளுடன் முதலிடத்திலும் (17 வெற்றி, 4 டிரா, 4 தோல்வி), போரசியா டார்ட்மன்ட் 51 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், லிப்ஜிக் 50 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளன. திருத்தப்பட்ட புதிய போட்டி அட்டவணைப்படி அடுத்த மாதம் 27-ந்தேதி வரை இந்த போட்டி நடைபெறும். வாரத்தில் 3 அல்லது 4 நாட்கள் ஆட்டங்கள் நடக்கும். வழக்கமாக ஒவ்வொரு ஆட்டத்திலும் 3 மாற்று ஆட்டக்காரர்களை பயன்படுத்தலாம். இந்த எண்ணிக்கையை 5 ஆக உயர்த்தி சமீபத்தில் சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்தது. இதன்படி இந்த போட்டியில் முதல்முறையாக 5 மாற்று ஆட்டக்காரர்கள் வரை பயன்படுத்தப்பட உள்ளனர்.

இன்று 6 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இவற்றில் டார்ட்மன்ட்-எப்.சி.ஸ்கால்க் (இரவு 7 மணி), லிப்ஜிக்-பிரைபர்க் (இரவு 7 மணி), என்ட்ராச்-எம் கிளாட்பேச் (இரவு 10 மணி) ஆகிய அணிகளின் மோதலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

ரசிகர்கள் அதிகளவில் ஒன்று கூடும் போது கொரோனா பரவும் ஆபத்து உள்ளதால் இந்த போட்டிக்கு ரசிகர்கள் யாரும் ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஸ்டேடியம் மூன்று மண்டலமாக பிரிக்கப்பட்டு உள்ளன. போட்டி ஏற்பாட்டாளர்கள், வீரர்கள், பயிற்சியாளர்கள், ஒளிபரப்பு தாரர்கள், ஊடகத்தினர், நடுவர்கள், கால்பந்து நிர்வாகிகள், மருத்துவ உதவியாளர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், பந்து எடுத்து போடும் சிறுவர்கள் என்று வகைப்படுத்தப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திலும் அதிகபட்சமாக 100 பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. களத்தில் உள்ள வீரர்கள், நடுவர்கள் தவிர அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும், வீரர்களுடன் கைகுலுக்கக்கூடாது, கோல் அடிக்கும் போது மகிழ்ச்சியில் கட்டிப்பிடித்து கொண்டாடக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja