உலக கோப்பை இடத்தில் ஐபிஎல் தொடரா?: ஆலன் பார்டன் கடும் எதிர்ப்பு

உலக கோப்பை இடத்தில் ஐபிஎல் தொடரா?: ஆலன் பார்டன் கடும் எதிர்ப்பு

உலக கோப்பை நடைபெறும் நேரத்தில் ஐபிஎல் போட்டி என்பது இந்திய கிரிக்கெட்டால் பணத்தை பறிக்கும் செயல் என ஆலன் பார்டர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 18-ந்தேதியில் இருந்து நவம்பர் 15-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. கொரோனா வைரஸ் பிரச்சனைக்கிடையில் 15 அணி வீரர்கள் ஒரு நாட்டிற்குச் சென்று தனிமைப்படுத்திக் கொண்டு போட்டிகளில் கலந்து கொள்வது எளிதான காரியம் அல்ல.

இதனால் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தள்ளிப்போகலாம் என தெரிகிறது. இதுகுறித்து விரைவில் ஐசிசி முடிவு எடுக்க இருக்கிறது. இதற்கிடையில் ஐபிஎல் போட்டியை மழைக்காலத்திற்குப் பிறகு நவம்பரில் நடத்த வாய்ப்புள்ளதாக பிசிசிஐ அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

டி20 உலக கோப்பை தள்ளிப்போனால் ஐபிஎல் தொடரை பிசிசிஐ எப்படியும் நடத்திவிடும். அப்படி ஐபிஎல் நடத்தப்பட்டால் அது இந்திய கிரிக்கெட்டால் பணம் பறிக்கும் செயல் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஆலன் பார்டர் கூறுகையில் ‘‘எனக்கு இதில் உடன்பாடு கிடையாது. உள்ளூர் போட்டியை காட்டிலும் உலக போட்டிக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். உலக கோப்பைக்குப் பதில் ஐபிஎல் போட்டி நடைபெற்றால், நான் நிச்சயம் கேள்வி எழுப்புவேன். இது ஜஸ்ட் பணம் பறித்த போன்றதாகும். அப்படி இல்லையா?….

டி20 உலக கோப்பைக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். தற்போது டி20 உலக கோப்பைக்குப் பதில் ஐபிஎல் தொடர்தான் என்பதை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். 80 சதவீத கிரிக்கெட் வருமானத்திற்கு நீங்கள்தான் (ஐசிசி) பொறுப்பு என்றால், நியாயமாக என்ன முடிவு எடுக்கப்போகிறீர்கள் என்பதை நான் பார்க்க இருக்கிறேன்.

ஆனால் உலக போட்டிகள் இதுபோன்று நடக்க அனுமதிக்கக் கூடாது. ஒவ்வொரு கிரிக்கெட் போர்டுகளும் வீரர்களை ஐபிஎல் தொடருக்கு செல்வதை நிறுத்த வேண்டும். சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறும் நேரத்தில், இந்தியாவுக்கு சாதகமாக செயல்பட முடியும் என்று நான் நினைக்கவில்லை. இது தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja