14 நாட்கள் தனிமை, 25 பேர் கொண்ட அணி: இங்கிலாந்து தொடருக்கு தயாராகும் பாகிஸ்தான்

14 நாட்கள் தனிமை, 25 பேர் கொண்ட அணி: இங்கிலாந்து தொடருக்கு தயாராகும் பாகிஸ்தான்

இங்கிலாந்து தொடருக்காக 25 பேர் கொண்ட அணியை தயார் செய்ய இருக்கிறோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.

இங்கிலாந்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைய ஆரம்பித்துள்ளதால் விளையாட்டு போட்டிகளை தொடங்க அரசு அனுமதி கொடுத்துள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து சென்று மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது.

இரு நாட்டின் கிரிக்கெட் போர்டுகளும் பேச்சுவார்த்தை நடத்தியதில் சாதகமான முடிவு எட்டப்பட்டுள்ளது.  பாகிஸ்தான் அணி முன்னதாகவே இங்கிலாந்து சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள இருக்கிறது. அதன்பின் பயிற்சி மேற்கொண்டு போட்டிகளில் விளையாட இருக்கிறது.

ஒருவேளை வீரர்களுக்கு சோர்வு ஏற்பட்டால் மாற்று வீரர்களை தயார் செய்யும் வகையில் 25 பேர் கொண்ட அணியுடன் செல்ல இருக்கிறது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் வாசிம் கான் கூறுகையில் ‘‘இங்கிலாந்து சென்ற பிறகு எங்களை தனிமைப்படுத்திக் கொள்ள 14 நாட்கள் தேவைப்படுகிறது. அதன்பின் போதுமான அளவுக்கு பயிற்சி பெற நேரம் உள்ளது. இதனால் போட்டி நடைபெறும் நாட்களுக்குள் வீரர்கள் தயாராகிவிடுவார்கள்.

கொஞ்சம் சவாலானது என்பதால் 25 பேர் கொண்ட அணியை அழைத்துச் செல்ல இருக்கிறோம். அவர்களை ஒன்றிணைத்து போட்டிக்கு தயார்படுத்த திட்டமிட்டு வருகிறோம். இன்னும் ஒரு வாரத்திற்குள் அதற்கான வெலைகளை ஆரம்பித்து விடுவோம்.

இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ள அனைத்து கருத்துக்களும் மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. வீரர்கள் சற்று யோசிக்கிறார்கள். இந்த தொடரை நாங்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja