வெளிநாட்டு லீக்குகளில் விளையாட அனுமதிக்க வேண்டும்: உத்தப்பா விருப்பம்

வெளிநாட்டு லீக்குகளில் விளையாட அனுமதிக்க வேண்டும்: உத்தப்பா விருப்பம்

வெளிநாட்டு டி20 லீக் தொடர்களிலும் இந்தியாவைச் சேர்ந்த வீரர்களை விளையாட அனுமதிக்க வேண்டும் என உத்தப்பா விருப்பம் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் என்ற பெயரில் டி20 லீக் தொடரை கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து பிசிசிஐ நடத்தி வருகிறது. இதில் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொண்டு விளையாடுகிறார்கள். பாகிஸ்தான் வீரர்களுக்கு மட்டும் அனுமதியில்லை.

இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறுவது போன்று ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக், வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் பிரிமீயர் லீக், தென்ஆப்பிரிக்காவில் மான்சி சூப்பர் லீக், வங்காள தேசத்தில் வங்காளதேசம் பிரிமீயர் லீக் போன்ற டி20 தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் மற்ற தொடர்களில் விளையாட அனுமதிக்கப்படவில்லை. யுவராஜ் சிங் ஐபிஎல் உள்பட அனைத்து வகை கிரிக்கெட் போட்டியிலும் இருந்து ஓய்வு பெற்றதால் கனடாவில் நடபெற்று வரும் குளோபல் டி20 லீக்கில் விளையாட அனுமதிக்கப்பட்டார். மற்ற வீரர்களுக்கும் அதுபோன்று அனுமதி வழங்க வேண்டும் என்று ராபின் உத்தப்பா விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உத்தப்பா கூறுகையில் ‘‘வெளிநாட்டில் நடைபெற்று வரும் டி20 லீக் தொடர்களில் விளையாட அனுமதிக்காவிட்டால், அது பாதிப்பை ஏற்படுத்தும். குறைந்தபட்சம் ஒன்றிரண்டு லீக்கில் விளையாட அனுமதி அளித்தால் கூட, சிறப்பானதாக இருக்கும். ஏனென்றால், கிரிக்கெட் குறித்து மேலும் கற்றுக்கொள்ள, வளர்ச்சி பெற உதவிகரமாக இருக்கும்’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja