இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில்

இரட்டை சதம் அடித்தபோது மனைவி ரித்திகா அழுதது ஏன்?: ரோகித் சர்மா பதில்

எனக்கு காயம் ஏற்பட்டிற்குமோ என்ற கவலையில் இருந்து எனது மனைவி, இரட்டை சதம் அடித்த மகிழ்ச்சியில் அழுதார் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் மூன்று முறை இரட்டை சதம் விளாசிய ஒரே வீரர் இந்தியாவின் ரோகித் சர்மா. அதிலும் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 3-வது முறையாக இரட்டை சதம் (2017-ம் ஆண்டு மொகாலியில் நடந்த ஆட்டத்தில் 208 ரன்) நொறுக்கியபோது நேரில் பார்த்து கொண்டிருந்த அவரது மனைவி ரித்திகா சஜ்தே உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார்.

அவர் ஏன் திடீரென அழுதார் என்பது குறித்து ரோகித் சர்மாவிடம் கலந்துரையாடிய சக வீரர் மயங்க் அகர்வால் கேட்டார்.

அதற்கு ரோகித் சர்மா கூறுகையில், ‘‘நான் 195 ரன்களில் இருந்தபோது, அடுத்த ரன்னுக்கு ஓடுகையில் கிரீசை தொட பாய்ந்து (டைவ்) விழுந்தேன். இதனால் முழங்கையில் சிராய்ப்பு ஏற்பட்டு விட்டதோ என்று நினைத்து ரித்திகா கவலைப்பட்டு உள்ளார். அது அவரது மனசுக்குள் உறுத்தலாகவே இருந்திருக்கிறது. இதனால் உணர்ச்சிவசப்பட்ட அவர் நான் இரட்டை சதத்தை எட்டியதும் கண்கலங்கி விட்டார்.

இதை இன்னிங்ஸ் முடிந்ததும் அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். அது மட்டுமின்றி அன்றைய தினம் எங்களது திருமண நாள் என்பதால் மேலும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. இந்த இரட்டை சதம் நான் அவருக்கு கொடுத்த திருமண நாள் பரிசு’’ என்றார்.

தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுடன் நடந்த வேடிக்கையான சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்ட ரோகித் சர்மா, ‘‘2015-ம் ஆண்டில் வங்காளதேசத்தில் நடந்த போட்டி ஒன்றில் நான் முதலாவது ஸ்லிப்பிலும், தவான் 3-வது ஸ்லிப்பிலும் நின்று கொண்டிருந்தோம். வங்காளதேச வீரர் தமிம் இக்பால் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.

அப்போது தவான் திடீரென சத்தமாக பாட்டுப்பாடி விட்டார். பவுலரோ பந்து வீச பாதி தூரம் ஓடி வந்து விட்ட நிலையில், தமிம் இக்பால் ஒரு கணம் திகைத்து நின்றார். அவருக்கு எங்கிருந்து சத்தம் வந்தது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் எங்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. உண்மையிலேயே அது ஒரு ஜாலியான நிகழ்வு’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja