டி20 உலக கோப்பை குறித்து இறுதி முடிவு எடுக்காத ஐசிசி

டி20 உலக கோப்பை குறித்து இறுதி முடிவு எடுக்காத ஐசிசி

போட்டி அட்டவணைப்படி எங்களது திட்டம் தொடரும் என்று டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து ஐசிசி தெரிவித்துள்ளது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடத்த ஐசிசி திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறுமா? என்ற சந்தேகமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கடந்த 28-ந்தேதி நடந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஐ.சி.சி. போர்டு நிர்வாகிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டி20 உலகக் கோப்பை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஐசிசி அதன் டுவிட்டர் பக்கத்தில் ‘‘ஐசிசி டி20 உலக கோப்பை மற்றும் மகளிர் 50 ஓவர் உலக கோப்பை ஆகியவற்றிகான தற்செயல் திட்டங்களை தொடர்ந்து ஆராயும். போட்டி அட்டவணைப்படி இரண்டு தொடர்களுக்கான திட்டம் தொடரும்’’ எனப் பதிவிட்டுள்ளது.

இதனால் இன்னும் இறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என்பது தெளிவாகியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் தற்போது சுகாதார நிலை மேம்பட்டு வருகிறது. ஆனால் பயண கட்டுப்பாடு, தனிமைப்படுத்தப்படும் விதிமுறைகள், ரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவது போன்ற காரணங்களால் ஐ.சி.சி. திணறி வருகிறது.

20 ஓவர் உலகக் கோப்பை போட்டி தள்ளி வைக்கப்பட்டால் அந்த காலகட்டத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja