சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் மன்னிப்பு கேட்க வேண்டும் – சஞ்சிதா சானு வலியுறுத்தல்

சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் மன்னிப்பு கேட்க வேண்டும் – சஞ்சிதா சானு வலியுறுத்தல்

தன் மீதான ஊக்க மருந்து குற்றச்சாட்டு நீக்கப்பட்டதால் நடந்த தவறுக்காக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சஞ்சிதா சானு வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி:

2014 மற்றும் 2018-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானுவிடம் 2017-ம் ஆண்டு இறுதியில் அமெரிக்காவில் நடந்த உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்பு அமெரிக்க ஊக்க மருந்து தடுப்பு முகமையால் ஊக்க மருந்து பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனை முடிவு குறித்த அறிக்கையில் சஞ்சிதா சானு தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அவர் 2018-ம் ஆண்டு மே மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தான் ஒருபோதும் ஊக்க மருந்தை பயன்படுத்தியது இல்லை என்று மறுத்த சஞ்சிதா சானு தன் மீதான நடவடிக்கையை எதிர்த்து ஹங்கேரியில் உள்ள சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனத்திடம் முறையிட்டார். இதற்கிடையில், ஊக்க மருந்து சோதனையின் போது சஞ்சிதா சானுவிடம் சேகரிக்கப்பட்ட சிறுநீர் மாதிரியின் நம்பர் நிர்வாக குளறுபடி காரணமாக மாறியதால் இந்த தவறு நிகழ்ந்து விட்டதாக ஒப்புக்கொண்ட சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் கடந்த ஆண்டு (2019) ஜனவரி மாதத்தில் சஞ்சிதா சானுவின் இடைநீக்கத்தை ரத்து செய்தது. ஆனால் அவர் மீதான ஊக்க மருந்து குற்றச்சாட்டு நிலுவையில் இருந்து வந்தது. இதனால் சஞ்சிதா சானுவின் பெயர் அர்ஜூனா விருது தேர்வுக்கான பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் சஞ்சிதா சானு மீதான ஊக்க மருந்து குற்றச்சாட்டு விவகாரம் முடித்து வைக்கப்பட்டு விட்டதாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் அதிகாரபூர்வமாக அவருக்கு இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்து இருக்கிறது. உலக ஊக்க மருந்து தடுப்பு முகமையின் சிபாரிசின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மணிப்பூரை சேர்ந்த 26 வயதான சஞ்சிதா சானு கருத்து தெரிவிக்கையில், ‘ஊக்க மருந்து குற்றச்சாட்டில் இருந்து இறுதியாகவும், அதிகாரபூர்வமாகவும் நான் நீக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் இந்த விவகாரத்தில் நான் இழந்த வாய்ப்புகளுக்கு பதில் என்ன?. எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு யார் பொறுப்பு ஏற்பார்கள். இந்த தவறுக்கு காரணம் யார் என்று கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனத்தின் கடுமையான நடவடிக்கையால் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தேன். எனவே சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் மன்னிப்பு கேட்பதுடன், நடந்த தவறுக்கு நியாயமான விளக்கம் அளிக்க வேண்டும். அத்துடன் எனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு இழப்பீடு வழங்க முன்வர வேண்டும். இல்லையெனில் இதற்காக நான் உயர் அமைப்புகளை நாடுவேன்’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja