விராட் கோலி அற்புதமான நபர்: ஸ்டீவ் ஸ்மித் புகழாரம்

விராட் கோலி அற்புதமான நபர்: ஸ்டீவ் ஸ்மித் புகழாரம்

விராட் கோலி அற்புதமான நபர். நாங்கள் இருவரும் எங்களின் அணிகளுக்காக களத்தில் கடுமையாக ஆடுபவர்கள் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி,  ஸ்டீவ் ஸ்மித் இருவருமே சம காலத்தின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களாக அறியப்படுபவர்கள். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் 12 மாதங்கள் தடைக்கு பிறகு  மீண்டும் ஆட வந்த  ஸ்மித்துக்கு ஆதரவு தெரிவித்த வீரர்களில் முக்கியமானவர் கோலி ஆவார்.

ஸ்மித்தும் பல சூழலில் விராட் கோலியை பாராட்டிப் பேசியுள்ளார். தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது;-

விராட் கோலியுடம் களத்துக்கு வெளியே ஒரு சில சமயம் பேசியிருக்கிறேன். சமீபத்தில் இந்தியாவில் நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து செய்தி அனுப்பியிருந்தேன். அவர் ஒரு அற்புதமான நபர். நாங்கள் இருவரும் எங்களின் அணிகளுக்காக களத்தில் கடுமையாக ஆடுபவர்கள். அது ஆட்டத்தின் ஒரு பகுதியே.

உலக கோப்பை ஆட்டத்தின்போது என்னையும், டேவிட் வார்னரையும் கிண்டல் செய்த இந்திய ரசிகர்களை அமைதி காக்கும்படி விராட் சொன்னதற்கு நான் அன்றே அவரிடம் நன்றி பாராட்டிப் பேசினேன்.

அவரது பேட்டிங் திறமையும் அசாத்தியமானது. 3 வடிவிலான ஆட்டங்களிலும் அவர் மிகத் திறமையானவர். வரும் காலங்களில் அவர் பல சாதனைகளை முறியடிக்கப்போவதை நாம் பார்ப்போம்.

ஒரு கேப்டனாக இந்தியாவை டெஸ்ட் உலகில் முதலிடம் பிடிக்கச் செய்தார். இந்திய அணி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் வருவது விசேஷமானதாக இருக்கும். அதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja