20 ஓவர் உலக கோப்பை குறித்து ஜூலை மத்திவரை முடிவு இல்லை: ஐ.சி.சி. திட்டவட்டம்

20 ஓவர் உலக கோப்பை குறித்து ஜூலை மத்திவரை முடிவு இல்லை: ஐ.சி.சி. திட்டவட்டம்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறுமா? என்பது  சந்தேகமே. ஆனால் இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இரண்டு முறை கூடியும் இந்த முடிவையும் எடுக்கவில்லை.

இந்த போட்டி  நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தது.

இதற்கிடையே ஐ.சி.சி. உறுப்பினர் கூட்டம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நேற்று நடந்தது. இந்த மாதத்தில் நடந்த 2-வது கூட்டத்தில் 20 ஓவர் உலக கோப்பை குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. ஐ.சி.சி .தலைவர் தேர்தல்  குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட்டது.

20 ஓவர் உலக கோப்பை குறித்து ஜூலை மத்தி வரை ஐ.சி.சி. முடிவு செய்யாது என்று தெரிகிறது. ஐ.சி.சி.யின் அடுத்த கூட்டம் ஜூலை மத்தியில் நடக்கிறது. அதற்கு முன்புவரை உலக கோப்பை குறித்து எந்த முடிவையும் எடுக்க மாட்டோம் என்பதில் ஐ.சி.சி திட்டவட்டமாக உள்ளது.

உலக கோப்பை தள்ளி வைக்கப்பட்டால் அந்த காலக்கட்டத்தில் ஐ.பி.எல் .20 ஓவர் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளது. கொரோனாவால் ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெற இருந்த ஐ.பி.எல்.போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

உலகக்கோப்பை விஷயத்தில் முடிவு எடுப்பதில் ஐ.சி.சி தாமதிப்பதால் பி.சி.சி.ஐ. அதிருப்தி அடைந்துள்ளது. இதுதொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த ஐ.சி.சி. தலைவர் ஷசாங் மனோகர் மீது இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஏற்கனவே தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர்.

ஐ.பி.எல். போட்டி ரத்து செய்யப்பட்டால் பி.சி.சி.ஐ.க்கு ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இதனால் ஐ.சிசியின் முடிவுக்காக தொடர்ந்து காத்திருக்கிறது.

ஐ.சி.சி. தலைவர் ஷசாங்க் மனோகரின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிகிறது. புதிய தலைவர் குறித்து அடுத்த வாரம் இறுதி முடிவு செய்யப்படும் என்று ஐ.சி.சி. வட்டாரங்கள் தெரிவித்தன.

இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவர் கோலின் கிரேவ்ஸ் இதற்கான போட்டியில் முன்னிலையில் இருக்கிறார். பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி போட்டியிடுவதில் நடைமுறை சிக்கல் இருக்கிறது. இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியம்  சுப்ரீம் கோர்ட்டை அணுகி இருக்கிறது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja