சச்சின் தெண்டுல்கரின் சர்ச்சைகுரிய அவுட்: டேரில் ஹார்பரிடம் கூறியது என்ன?- எம்எஸ்கே பிரசாத் விளக்கம்

சச்சின் தெண்டுல்கரின் சர்ச்சைகுரிய அவுட்: டேரில் ஹார்பரிடம் கூறியது என்ன?- எம்எஸ்கே பிரசாத் விளக்கம்

கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய சச்சின் தெண்டுல்கர் அவுட் குறித்து பேசிய என்ன? என்பதை எம்எஸ்கே பிரசாத் வெளிப்படுத்தியுள்ளார்.

கிரிக்கெட்டில் நடுவர்கள் கொடுக்கும் சில அவுட் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தும். அந்த வகையில் அமைந்ததுதான் டேரில் ஹார்பர் சச்சின் தெண்டுல்கருக்கு கொடுத்த எல்.பி.டபிள்யூ. அவுட்.

1999-ம் ஆண்டு ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இதில் மெக்ராத் வீசிய பந்து பவுன்சராக செல்லும் என்று நினைத்து சச்சின் தெண்டுல்கர் குனிந்து பந்தை விட விரும்புவார். ஆனால் பந்து தாழ்வாக வந்து சச்சின் தெண்டுல்கரின் தோள்பட்டையை தாக்கும்.

மெக்ராத் அப்பீல் கேட்க டேரில் ஹார்பர் அவுட் கொடுத்து விடுவார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சமீபத்தில் டேரில் ஹார்பர் பேட்டி ஒன்றில், ‘‘சச்சின் தெண்டுல்கருக்கு நான் கொடுத்த அவுட் சரியான முடிவு என்று நம்புகிறேன். அந்த அவுட் கொடுத்ததை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். 2018-ல் எம்எஸ்கே பிரசாத்தை சந்தித்தேன். அப்போது சச்சின் தெண்டுல்கர் அவுட்டை ஏற்றுக் கொண்டதாக கூறியதாக ஹார்பர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் டேரில் ஹார்பரிடம் நான் அப்படி கூறவில்லை என்று எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘டேரில் இந்த முடிவைப் பற்றிய குற்ற உணர்வை மிக நீண்ட காலமாக சுமந்து கொண்டிருந்தார். 2018 இந்தியா – ஆஸ்திரேலியா தொடரின்போது டேரில் ஹார்பர் என்னை உணவு இடைவேளையின்போது சந்தித்தார். அப்போது மிகப்பெரிய சர்ச்சைக்குரிய அவுட் குறித்து சச்சின் எவ்வாறு உணர்ந்தார் என்று கேட்டார்.

சரியோ அல்லது தவறோ எதுவாக இருந்தாலும், நடுவரிடம் கேள்வி கேட்கும் நபர் சச்சின் தெண்டுல்கர் அல்ல என்று டேரில் ஹார்பரிடம் நான் கூறினேன். அதனால்தான் அவர் ரோல் மாடலாக மாறியுள்ளார். இந்திய கிரிக்கெட் கடவுளாக போற்றப்படுகிறார் என்றேன். தீர்ப்பு கொடுத்தபோது ஒட்டுமொத்த அணியும் அதிர்ச்சியில் உறைந்தது’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja