பிசிசிஐ தலைவராக கங்குலி 2023 உலக கோப்பை வரை நீடிக்க வேண்டும்: கவாஸ்கர் விருப்பம்

பிசிசிஐ தலைவராக கங்குலி 2023 உலக கோப்பை வரை நீடிக்க வேண்டும்: கவாஸ்கர் விருப்பம்

கங்குலியின் பிசிசிஐ தலைவர் பதவி 2023 வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனும், முன்னாள் கேப்டனும், மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவருமான கங்குலி பிசிசிஐ தலைவராக உள்ளார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிசிசிஐ தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார். ஐசிசி-யின் விதிமுறைப்படி அவரது பதவிக்காலம் 9 மாதங்களே. இதனால் நேற்றுடன் அவரது பதவிகாலம் முடிவடைகிறது. அதன்பின் மீண்டும் பதவி பொறுப்பில் வருவதற்கு மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

இதனால், கங்குலி 2023 வரை பிசிசிஐ தலைவர் பதவியில் நீட்டிக்க அனுமதிக்க வேண்டும் என்று பிசிசிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதை விசாரணைக்கு கோர்ட் ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் பிசிசிஐ தலைவராக கங்குலி 2023 உலக கோப்பை வரை நீடிக்க வேண்டும் என சுனில் கவாஸ்கர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘பி.சி.சி.ஐ மற்றும் சில மாநில சங்கங்களின் பல வழக்குகளின் விசாரணையை ஒத்திவைப்பதாக எடுத்துள்ள உச்சநீதிமன்றத்தின் முடிவு இந்திய கிரிக்கெட்டை தடுமாறச் செய்துள்ளது. உறுதியாக கிரிக்கெட்டை விட முக்கியமான வழக்குகள் கோர்ட்டில் இருக்கும். ஆனால், இந்திய கிரிக்கெட் பிரியர்கள் இந்த முடிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

தனிப்பட்ட முறையில் கங்குலி மற்றும் அவரது அணியைச் சேர்ந்தவர்கள் 2023 உலக கோப்பை வரை பதவியில் இருப்பதை நான் பார்க்க விரும்புகிறேன். ஆனால் கோர்ட் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பார்க்க வேண்டும்.

இந்திய அணியை இக்கட்டான நிலையில் இருந்தபோது, நல்ல நிலைக்கு கொண்டு வந்து கிரிக்கெட் ரசிகர்களிடம் நம்பிக்கையை மீண்டும் கொண்டு வந்தவர் கங்குலி. அதேபோல் கிரிக்கெட் நிர்வாகத்தையும் நல்ல நிலைமைக்கு கொண்டு வரும் திறமை அவரது அணியிடம் உள்ளது’’ என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja