ஓய்வு காலத்தை நெருங்கி விட்டேன் – பெடரர்

ஓய்வு காலத்தை நெருங்கி விட்டேன் – பெடரர்

டென்னிசில் இருந்து ஓய்வு பெறும் காலத்தை நெருங்கி விட்டதாக சுவிட்சர்லாந்து ஜாம்பவான் பெடரர் கூறியுள்ளார்.

ஷூரிச்:

டென்னில் உலகில் அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர். முன்னாள் நம்பர் ஒன் வீரரான பெடரர் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இதில் 8 விம்பிள்டன் மகுடமும் அடங்கும். தரவரிசையில் 310 வாரங்கள் ‘நம்பர் ஒன்’ இடத்தை அலங்கரித்த சாதனையாளர் ஆவார்.

சில மாதங்களுக்கு முன்பு வலது முழங்கால் முட்டியில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து கொண்ட பெடரர் இந்த ஆண்டில் எஞ்சிய போட்டிகளில் விளையாடமாட்டேன் என்றும், அடுத்த ஆண்டில் புத்துணர்ச்சியுடன் களம் திரும்புவேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் 38 வயதான பெடரர் ஓய்வு கட்டத்தை நெருங்கி விட்டதாக வெளிப்படையாக கூறியுள்ளார்.

தற்போது தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் பெடரர் அளித்த ஒரு பேட்டியில், ‘எனது டென்னிஸ் வாழ்க்கையில் நான் இறுதி கட்டத்தில் இருப்பதை அறிவேன். அடுத்த 2 ஆண்டுகளில் என்ன நடக்கும் என்பதை என்னால் சொல்ல முடியாது. அதனால் தான் ஒவ்வொரு ஆண்டாக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறேன். ஆனால் இப்போதும் மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறேன். எப்போது தளர்வடைகிறேனோ அப்போது விளையாடுவதை நிறுத்தி விடுவேன். டென்னிசை பொறுத்தவரை வயதானாலும் நிச்சயம் விளையாட முடியும். ஆனால் தொடர்ந்து கடின பயிற்சியில் ஈடுபட முடியாது.

ஒலிம்பிக் போட்டி எப்போதும் சிறப்பு வாய்ந்தது. 2021-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி டோக்கியோவில் நடக்கும் என்று நம்புகிறேன். இதில் பங்கேற்க ஆர்வமுடன் உள்ளேன். டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். அது ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவு எதுவாக இருந்தாலும் பரவாயில்லை’ என்றார்.பெடரர் ஏற்கனவே 2008-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கமும், 2012-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கமும் ருசித்து இருக்கிறார். அனேகமாக அவர் அடுத்த ஆண்டுடன் டென்னில் இருந்து விடைபெறுவார் என்று தெரிகிறது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja