ஐபிஎல் கோப்பையை எந்த அணி கைப்பற்றும்? கெவின் பீட்டர்சன் கணிப்பு

ஐபிஎல் கோப்பையை எந்த அணி கைப்பற்றும்? கெவின் பீட்டர்சன் கணிப்பு

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கோப்பையை எந்த அணி கைப்பற்றும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான பீட்டர்சன் அவரது கணிப்பை தெரிவித்துள்ளார்.

துபாய்:

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடக்கிறது.

இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன் ரைசர்ஸ் ஐதராபாத், டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதவேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த நிலையில் ஐ.பி.எல். கோப்பையை டெல்லி அணி கைப்பற்றும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா மருத்துவ தடுப்புப் பாதுகாப்பில் இங்கிலாந்தில் இருந்த நான் தற்போது கொரோனா மருத்துவ தடுப்புப் பாதுகாப்பு உள்ள துபாய்க்கு சென்று கொண்டிருக்கிறேன். கிரிக்கெட் போட்டி மீண்டும் தொடங்குவது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஐ.பி.எல். போட்டிக்கு வர்ணனையாளராக தொடர்ந்து பணியாற்றுவது எனக்கு எப்போதுமே பிடித்திருக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் இந்த ஐ.பி.எல். போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கோப்பையை வெல்லும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணி முதலில் டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் ஆடியது. கடந்த 2 சீசனில் அதன் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறாத ஒரே அணி டெல்லிதான்.

அந்த அணி கடந்த முறை பிளேப் ஆப் சுற்றுவரை வந்தது. டெல்லி கேபிடல்ஸ் அணியில் கேப்டன் ஸ்ரேயாஷ் அய்யர், தவான், ரி‌ஷப் பண்ட், ரகானே, அஸ்வின், ரபடா, பிரித்விஷா போன்ற முன்னணி வீரர்கள் உள்ளனர். டெல்லி அணி தொடக்க ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை சந்திக்கிறது.

இதேபோல பஞ்சாப், பெங்களூரு அணிகளும் இதுவரை ஐ.பி.எ. கோப்பையை வென்றதில்லை.

டெல்லி கோப்பையை வெல்லும் என்று கணித்த பீட்டர்சன் ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு, டெல்லி, புனே அணிக்காக விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja