யானைக்கும் அடி சறுக்கும்: டோனி, சாஹரின் சிறு கவனக்குறைவால் மிகப்பெரிய இழப்பை சந்தித்த சிஎஸ்கே

யானைக்கும் அடி சறுக்கும்: டோனி, சாஹரின் சிறு கவனக்குறைவால் மிகப்பெரிய இழப்பை சந்தித்த சிஎஸ்கே

தீபக் சாஹரின் முதல் ஓவர் 2-வது பந்தில் பிரித்வி ஷா ‘டக்அவுட்’ ஆக வேண்டிய நிலையில், அரைசதம் அடித்து டெல்லி அணியையும் வெற்றி பெற வைத்துவிட்டார்.

ஐபிஎல் தொடரின் 7-வது ஆட்டம் துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் ஆடுகளங்கள் முதலில் மட்டையாட்டம் செய்யும் அணிகளுக்கு மிகப்பெரிய அளவில் சாதகமாக இருந்து வருகிறது.

இரவில் பனிப்பொழிவு இருக்கும் என நினைத்து டாஸ் வென்ற எம்எஸ் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் மட்டையாட்டம் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 175 ஓட்டங்கள் விளாசிவிட்டது. இதற்கு அந்த அணியின் தொடக்க பேட்ஸ்மேன் பிரித்வி ஷாதான் முக்கிய காரணம். அவர் 43 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சருடன் 64 ஓட்டங்கள் அடித்தார்.

நேற்றைய ஆடுகளத்தில் தடால் புடால் என அடித்து விளையாட முடியாத சூழ்நிலை. போட்டி தொடங்கியதும் தீபக் சாஹர் முதல் ஓவரை வீசினார். பிரித்வி ஷா பந்தை எதிர்கொண்டார். முதல் பந்தில் ரன்ஏதும் அடிக்காத பிரித்வி ஷா 2-வது பந்தை எதிர்கொண்டார்.

ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் வந்த பந்தை பிரித்வி ஷா கவர் டிரைவ் ஆட முயன்றார். பந்து பேட்டை உரசியது போன்று சென்றது. பிரித்வி ஷாவுடன் உடனடியாக பின்னால் திரும்பி பார்க்கவில்லை. தீபக் சாஹரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எதையும் உன்னிப்பாக கவனிக்கும் மட்டையிலக்கு கீப்பராக இருந்து எம்எஸ் டோனிக்கும் பேட்டில் உரசிய சத்தம் கேட்காமல் போய்விட்டது. அவரும் அப்பீல் கேட்க விரும்பவில்லை.

பின்னர் ரீ-பிளேயில் பந்து பேட்டில் லேசாக உரசிச் சென்றது தெரிய வந்தது. எம்.எஸ். டோனி ஆட்டம் தொடங்கிய 2-வது பந்து என்பதால் சற்று கவனக்குறைவாக இருந்தாரோ? என்னவோ தெரியவில்லை. கவனிக்காமல் விட்டுவிட்டார்.

அந்த வாய்ப்பை பயன்படுத்திய பிரித்வி ஷா அந்த சுற்றில் இரண்டு பவுண்டரிகள் விளாசியதுடன், 64 ஓட்டங்கள் குவித்து சென்னையை 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்து ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச்சென்று விட்டார். எம்.எஸ். டோனியின் சிறு கவனக்குறைவு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டு எனச் சொல்லலாம்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja