விராட் கோலியும் மனிதர் தான், அவர் ஒன்றும் மெஷின் அல்ல என்பதை மறந்து விடுகின்றனர் – ரசிகர்களை சாடிய பயிற்சியாளர்

விராட் கோலியும் மனிதர் தான், அவர் ஒன்றும் மெஷின் அல்ல என்பதை மறந்து விடுகின்றனர் – ரசிகர்களை சாடிய பயிற்சியாளர்

விராட் கோலியும் மனிதர் தான், அவர் ஒன்றும் மெஷின் அல்ல என்பதை ரசிகர்கள் மறந்து விடுகின்றனர் என்று கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2020 கிரிக்கெட்டில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலன்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாடியுள்ளது. ஐதராபாத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பெங்களூர் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.

இந்த போட்டிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி மிகவும் சொற்பமான ரன்களை மட்டுமே எடுத்தார். ஐதராபாத்திற்கு எதிரான போட்டியின் 14 ரன்களை எடுத்த கோலி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 1 ஓட்டத்தை மட்டுமே எடுத்து ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தினார். மேலும், சில கேட்ச்களையும் கோலி தவறவிட்டார். 

இது குறித்து போட்டியின்போது வர்ணனையாளராக இருந்த சுனில் கவாஸ்கர் விராட் கோலி மீது சில விமர்சனங்களை செய்தார். இந்த விவகாரமும் தற்போது பூதாகரமாகி வருகிறது. 

இதற்கிடையில், அடுத்த போட்டியில் இருந்து விராட் கோலி மீண்டும் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே ஆர்சிபி ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்நிலையில், விராட் கோலியின் தற்காலிக மட்டையாட்டம் தடுமாற்றம் குறித்து கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

மைதானத்தில் உங்களுக்கு நல்ல நாட்களும் இருக்கும், மோசமான நாட்களும் இருக்கும். இது ஒவ்வொரு விளையாட்டு வீரனின் வாழ்க்கையிலும் ஒரு பகுதி. கோலி ஒரு மனிதர் தான்.. அவர் ஒன்றும் மெஷின் அல்ல… என்பதை ரசிகர்கள் மறந்து விடுகின்றனர். 

நீங்கள் மைதானத்திற்குள் நுழையும் ஒவ்வொரு நேரமும் வெற்றியடையமாட்டீர்கள். கோலி தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதை அவரது ரசிகர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர். தற்போது அவர் ஒரே ஒரு போட்டியில் மோசமாக விளையாடினாலும் அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி விடுகிறது.

என்றார்.

Related Tags :

Source: Maalaimalar

Author Image
Ilayaraja