ஷான்மார்ஷ், கோரி ஆண்டர்சன், மார்கல் சேர்ப்பு – ஐ.பி.எல். போட்டி ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 292 வீரர்கள்

ஷான்மார்ஷ், கோரி ஆண்டர்சன், மார்கல் சேர்ப்பு – ஐ.பி.எல். போட்டி ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 292 வீரர்கள்

ஷான்மார்ஷ், கோரி ஆண்டர்சன், மார்கல் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது.

சென்னை:

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் முதல் மே மாதம் வரை இந்தியாவில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இப்போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு சென்னையில் நடக்கிறது.

இந்த ஏலப்பட்டியலில் 814 இந்தியர்கள், 283 வெளிநாட்டினர். ஆக மொத்தம் 1,097 வீரர்கள் பதிவு செய்து இருந்தனர். மேலும் 17 வீரர்கள் பதிவு செய்ததால் மொத்தம் எண்ணிக்கை 1,114 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 292 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

164 இந்திய வீரர்களும், 125 வெளிநாட்டு வீரர்களும் மூன்று அசோசியேட் நாட்டு அணி வீரர்களும் ஏலம் விடப்படுகிறார்கள்.

புதிதாக பதிவு செய்யப்பட்ட 17 பேரில் ஷான்மார்ஷ் (ஆஸ்திரேலியா), கோரி ஆண்டர்சன் (நியூசிலாந்து), மார்னே மார்கல் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் இறுதி பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் ஜேக் வில்தர் மூத் இடம் பிடித்துள்ளார்.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் தனது தடை காலம் முடிந்து போட்டிகளில் விளையாடி வருகிறார். ஆனால் அவரது பெயர் ஏலத்துக்காக இறுதிப் பட்டியலில் இடம் பெறவில்லை.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜூன் தெண்டுல்கர் ஏலப்பட்டியலில் உள்ளார்.

அதேபோல் இந்திய அணியின் முன்னாள் மட்டையிலக்கு கீப்பர் சையத் கிர்மானியின் மகன் சாகித் கிர்மானி இடம் பெற்று இருக்கிறார்.

தங்களது அணிகளால் கழட்டி விடப்பட்ட மேக்ஸ் வெல், ஸ்டீவ் சுமித் (ஆஸ்திரேலியா), காலின் இங்கிராம் (தென் ஆப்பிரிக்கா), மார்க்வுட், மொய்ன்அலி, சாம் பில்லிங்ஸ், ஜேசன் ராய், பிளான் கட் (இங்கிலாந்து), சகீப்-அல்-ஹசன் (வங்காள தேசம்) மற்றும் இந்தியாவை சேர்ந்த கேதர் ஜாதவ், ஹர்பஜன் சிங் ஆகிய 11 வீரர்களுக்கு அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறந்த அதிரடி வீரரான மேக்ஸ்வெல்லை பஞ்சாப் அணியும், ஸ்டீவ் சுமித்தை ராஜஸ்தான் அணியும் கை கழுவியது. அவர்கள் ஏலத்தில் அதிக விலைக்கு போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அலெக்ஸ் கேரி, முஜுபுர் ரகுமான், டாம் கரண், டேவிட் மலன் உள்ளிட்ட வீரர்களுக்கு ரூ.1.5 கோடியும், விகாரி உள்ளிட்ட வீரர்களுக்கு ரூ.1 கோடியும் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இறுதிப் பட்டியலில் 292 வீரர்கள் இடம்பெற்று இருந்தாலும் இருந்தாலும், 61 வீரர்கள்தான் ஏலம் எடுக்கப்படுவார்கள். இதற்காக 8 அணிகளும் 196.6 கோடியை செலவழிக்க தயார் நிலையில் உள்ளது.

ஏற்கனவே 8 அணிகளும் 139 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதற்காக ரூ.483.39 கோடியை செலவழித்து உள்ளது. 

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja