ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா? கேரளாவுடன் இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா? கேரளாவுடன் இன்று மோதல்

7-வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. கடைசி லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்சை இன்று எதிர்க்கொள்கிறது.

கோவா:

7-வது ஐ.எஸ்.எல். (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. 11 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.

இதுவரை 100 லீக் ஆட்டங்கள் முடிந்துவிட்டது. இன்னும் 10 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. இதுவரை 2 அணிகள் மட்டுமே அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

2 முறை சாம்பியனான அட்லெடிகோ கொல்கத்தா மோகன் பகான் அணி 12 வெற்றி, 3 டிரா, 3 தோல்வி 39 புள்ளிகள் பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. அந்த அணி தற்போது முதல் இடத்தில் உள்ளது. மோகன் பகான் அணிக்கு இன்னும் 2 ஆட்டம் இருக்கிறது.

மும்பை அணி 10 வெற்றி, 4 டிரா, 4 தோல்வியுடன் 34 புள்ளிகள் பெற்று அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. அந்த அணி தற்போது 2-வது இடத்தில் இருக் கிறது. மும்பை அணிக்கும் 2 ஆட்டம் எஞ்சியுள்ளன.

மற்ற 2 இடங்களுக்கு ஐதராபாத், கோவா, கவுகாத்தி, ஜாம்ஷெட்பூர், பெங்களூர் அணிகள் இடையே போட்டி நிலவுகிறது. இதில் ஐதராபாத், கோவா, கவுகாத்தி அணிகள் தலா 27 புள்ளிகளுடனும், ஜாம்ஷெட்பூர் 24 புள்ளிகளுடனும், பெங்களூர் 22 புள்ளிகளுடனும் உள்ளன.

இந்த 5 அணிகளும் முறையே 3 முதல் 7-வது இடங்களில் உள்ளன. இதில் ஜாம்ஷெட்பூர் தவிர மற்ற 4 அணிகளுக்கும் 2 ஆட்டங்கள் உள்ளன. ஜாம்ஷெட்பூர் அணிக்கு ஒரே ஒரு ஆட்டமே உள்ளது.

2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை இழந்துவிட்டது. இந்த அணி 19 ஆட்டத்தில் 3-ல் மட்டுமே வெற்றிபெற்றது. 6 ஆட்டத்தில் தோற்றது. 10 போட்டியை டிரா செய்தது. 19 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளது.

சென்னையின் எப்.சி. கடைசி லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்சை இன்று எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி நடக்கிறது. சென்னை அணி கேரளாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படு கிறது.

இரு அணிகளும் ஏற்கனவே மோதிய ஆட்டம் கோல் எதுவுமின்றி டிரா ஆனது. கேரளா அணி 3 வெற்றி, 7 டிரா, 8 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று 10-வது இடத்தில் உள்ளது.

முன்னதாக இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பெங்களூர்- கோவா அணிகள் மோதுகின்றன. அரை இறுதி வாய்ப்பை பெற இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja