ஐ.பி.எல்.லில் விளையாடும் 13 தமிழக வீரர்கள்

ஐ.பி.எல்.லில் விளையாடும் 13 தமிழக வீரர்கள்

ஷாருக்கான், ஹரிநிஷாந்த் உள்ளபட 13 தமிழக வீரர்கள் இந்த ஐ.பி.எல். போட்டியில் விளையாடுகிறார்கள்.

சென்னை:

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் நடைபெறுகிறது.

இதற்கான சின்ன (மினி) ஏலம் சென்னையில் சமீபத்தில் நடந்தது. இதில் 57 வீரர்கள் விலை போனார்கள். 8 அணிகளும் சேர்ந்து இவர்களை ரூ.143.69 கோடிக்கு ஏலத்தில் எடுத்தன.

தமிழகத்தை சேர்ந்த 25 வயதான ஷாருக்கான் ரூ.5.25 கோடிக்கு ஏலம் போனார். அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. உள்ளூர் போட்டியான முஸ்தாக் அலி 20 சுற்றில் தமிழக அணி சாம்பியன் பட்டம் பெற்றது. இதனால் தமிழக வீரர்கள் மீது ஏலத்தில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

இதேபோல மற்ற தமிழக வீரர்களான ஹரிநிஷாந்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், எம்.சித்தார்த்தை டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் தலா ரூ.25 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தன.

பஞ்சாப் அணி 2019-ம் ஆண்டு ஏலத்தில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியை ரூ.8.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. பின்னர் அவரை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது. அதே பஞ்சாப் அணிதான் தற்போது அதிரடி பேட்ஸ்மேன் ஷாருக்கானை ஏலத்தில் எடுத்துள்ளது.

இந்த ஐ.பி.எல். போட்டியில் 13 தமிழக வீரர்கள் விளையாடுகிறார்கள். ஆர்.அஸ்வின், தினேஷ்கார்த்திக், வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், விஜய்‌ஷங்கர், டி.நடராஜன், முருகன் அஸ்வின், ஜெகதீசன், சாய் கிஷோர், சந்தீப் வாரியர் ஆகியோருடன் ஷாருக்கான், ஹரிநிஷாந்த், எம்.சித்தார்த் ஆகியோர் தற்போது ஐ.பி.எல். போட்டியில் இணைந்துள்ளனர்.

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja