311-வது வாரமாக ‘நம்பர்ஒன்’ இடம் – பெடரர் சாதனையை ஜோகோவிச் முறியடித்தார்

311-வது வாரமாக ‘நம்பர்ஒன்’ இடம் – பெடரர் சாதனையை ஜோகோவிச் முறியடித்தார்

ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றதன் மூலம் ஜோகோவிச் தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கிறார். இதன்மூலம் அவர் ரோஜர் பெடரர் சாதனையை முறியடித்தார்.

மெல்போர்ன்:

கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்தது.

ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் உலகில் முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) 7-5, 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ரசியாவை சேர்ந்த 4-ம் நிலை வீரரான மெட்வதேவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.

33 வயதான ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 9-வது முறையாக கைப்பற்றினார். இதற்கு முன்பு 2008, 2011, 2012, 2013, 2015, 2016, 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்று இருந்தார்.

அவர் 9 முறை இறுதிப்போட்டிக்கு வந்து அனைத்திலும் பட்டம் வென்று சாதித்து உள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபனில் தனக்கு நிகரான வீரர் யாரும் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து உள்ளார்.

ஜோகோவிச் கைப்பற்றிய 18-வது கிராண்ட் சிலாம் பட்டம் இதுவாகும். இதன்மூலம் அவர் முதல் இடத்தில் இருக்கும் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ரபெல் நடால் (ஸ்பெயின்) ஆகியோரை நெருங்கி உள்ளார்.

இருவரும் 20 கிராண்ட்சிலாம் பட்டங்களை வென்று உள்ளார். அவர்கள் நிலையை அடைய ஜோகோவிச்சுக்கு இன்னும் 2 கிராண்ட்சிலாம் பட்டங்களே தேவை.

அவர் ஆஸ்திரேலிய ஓப்பனை 9 முறையும், பிரெஞ்சு ஓபனை ஒரு தடவையும், விம்பிள்டன் பட்டத்தை 5 முறையும், அமெரிக்க ஓபனை 3 முறையும் வென்று உள்ளார்.

ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றதன் மூலம் ஜோகோவிச் தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் நீடிக்கிறார். அவர் 311-வது வாரமாக நம்பர்-1 வரிசையில் உள்ளார்.

இதன்மூலம் அவர் ரோஜர் பெடரர் சாதனையை முறியடித்தார். பெடரர் 310 வாரங்கள் டென்னிஸ் தர வரிசைப்பட்டியலில் நம்பர்ஒன் இடத்தில் இருந்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja