அதிநவீன வசதிகளை கொண்ட உலகின் மிகப்பெரிய மைதானத்தில் நாளை இந்தியா- இங்கிலாந்து பலப்பரீட்சை

அதிநவீன வசதிகளை கொண்ட உலகின் மிகப்பெரிய மைதானத்தில் நாளை இந்தியா- இங்கிலாந்து பலப்பரீட்சை

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மொதேரா சர்தார் படேல் மைதானத்தில் முதல் சர்வதேச போட்டியாக நாளை இந்தியா – இங்கிலாந்து இடையிலான போட்டி நடக்க இருக்கிறது.

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 3-வது மற்றும் 4-வது சோதனை போட்டிகள் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள மொதேரா சர்தார் பட்டேல் மைதானத்தில் நடைபெறுகிறது. சீரமைக்கப்பட்ட ஸ்டேடியத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டிகள் நாளை தொடங்குகிறது.

இந்த மைதானத்தை பற்றிய சிறப்பு அம்சங்கள் வருமாறு:-

* அகமதாபாத் சபர்மதி நதியின் கரையில் அமைந்துள்ள இந்த மைதானம் 1982-ம் ஆண்டு கட்டப்பட்டது. பின்னர் உலகிலேயே மிகப்பெரிய மைதானமாக அதை மாற்றுவதற்கு 2015-ல் முடிவு செய்யப்பட்டு மறுசீரமைப்பு பணிகள் 2020 பிப்ரவரியில் நிறைவடைந்தன.

* முதலில் 40 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருந்த இந்த ஸ்டேடியம் மறுசீரமைப்பு பணிகளுக்கு பிறகு 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் கட்டப்பட்டது. இதன் மூலம் 90 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட மெல்போர்ன் மைதானத்தை முறியடித்து உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக மாறியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 55 ஆயிரம் ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

* இந்த ஸ்டேடியத்தில் தலா 25 பேர் வசதியாக அமரக்கூடிய 76 கார்ப்பரேட் பாக்ஸ்களும் உள்ளன. இது நவீன வசதிகளை கொண்டது.

* 63 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மைதானத்துக்கு நான்கு நுழைவு வாயில்கள் உள்ளன.

* உலகிலேயே வேறு எந்த மைதானத்திலும் இல்லாத வகையில் இங்கு வீரர்களுக்காக 4 உடைசிங் ரூம்கள் உள்ளன. அதில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே உடற்பயிற்சி கூடம் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

* பிரதான மைதானத்தின் ஆட்டத்துக்கு பயன்படுத்தும் வகையில் 11 ஆடுகளங்கள் (பிட்ச்) உள்ளன. வேறு எந்த மைதானத்திலும் இல்லாத வகையில் மைய ஆடுகளங்களில் பயன்படுத்தப்படும் மண்ணே பயிற்சி ஆடுகளத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

* பிரதான மைதானம் தவிர பயிற்சிக்கு என தனியே 2 மைதானங்கள் உள்ளன. அவை சிறிய பெவிலியனுடன் கூடியதாகும்.

* இதுதவிர பயிற்சிக்கு என தனியே 9 ஆடுகளங்கள் உள்ளன. இதில் 6 ஆடுகளங்கள் உள் அரங்கிலும், 3 ஆடுகளங்கள் வெளியிலும அமைந்து உள்ளன. உள் அரங்கு ஆடுகளங்களில் மட்டையாட்டம் பயிற்சிக்காக பந்து வீசும் தானியங்கி பந்துவீச்சு எந்திரங்கள் உள்ளன.

* மற்ற ஸ்டேடியங்களில் இல்லாத வகையில் மழை நீரை எளிதாக வெளியேற்றும் வசதிகள் இங்கு உள்ளன. ஆட்டத்தின் போது 8 செ.மீ அளவுக்கு மழை இருந்தாலும் நீரை விரைவாக வெளியேற்றி ஆட்டம் ரத்தாகாமல் மீண்டும் தொடங்க வகை செய்யப்பட்டுள்ளது.

* பிரமாண்ட விளக்கு கம்பங்களுக்கு பதிலாக மைதானத்தின் மேற்கூரை விளிம்புகளில் வட்ட வடிவில் எல்.இ.டி. பிளாட் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

* இந்த மைதான வளாகத்தில் 40 பேர் தங்கும் வசதியுடன் கூடிய உள் அரங்கு கிரிக்கெட் பயிற்சி அகாடமி உள்ளது.

* மிக முக்கிய நபர்கள் தங்கும் வகையில் 5 சூட்கள், 50 டீலக்ஸ் அறைகளுடன் கூடிய கிளப் ஹவுஸ் இதில் உள்ளது.

* பிரமாண்ட உணவகம், சின்ன (மினி) 3டி திரையரங்கம், மிகப்பெரிய நீச்சல்குளம், ஸ்குவாஷ் விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட வசதிகளும் இங்கு உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja