Press "Enter" to skip to content

ஷாஹின்பாக் பெண்கள் போராட்டம்: நடுங்கும் குளிரில் 50 நாளாகத் தொடரும் போராட்டம்

சின்கி சின்ஹா
பிபிசி செய்தியாளர்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஷாஹின்பாக் பகுதியில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து பெண்கள் நடத்தும் தொடர் தர்ணா போராட்டம் இன்று 50வது நாளை எட்டியுள்ளது.

நடுங்கும் குளிர் கால இரவு ஒன்றில் ஷாஹின்பாக் போராட்டம் நடக்கும் தெருவை தேடிச் சென்றோம். கலைக்கூடங்களும், வணிக வளாகங்களும், காபிக் கடைகளும் நிரம்பிய நாங்கள் அறிந்த டெல்லியில் இத்தெருவை எங்கே பொருத்திப் பார்ப்பது என்று தெரியவில்லை. ஆனால், டெல்லி என்பது பாரம்பரியமாக ஒன்பது மாநகரங்கள் அடங்கிய மாநகரம். அல்லது அப்படி எங்களுக்கு சொல்லப்பட்டது. இந்த மாநகரின் மக்களில் பெரும்பாலானவர்கள் வேறு எங்கிருந்தோ வந்து குடியேறியவர்கள்.

இரவு முழுதும் எதிர்ப்பின் கவிதைகளைப் பாடிக்கொண்டும், புரட்சிகரப் பாடல்களைக் கேட்டுக்கொண்டும், கொடுங்குளிரை பொருட்படுத்தாமல் தங்களோடு அழைத்து வந்த தங்கள் குழந்தைகளுக்கு தாலாட்டுப் பாடிக்கொண்டும் அங்கே அமர்ந்திருக்கிறார்கள் துணிச்சல் மிக்க பெண்கள்.

அவர்கள் ஏழைப் பெண்கள். அவர்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்ள தாதிகள் இல்லை.

இங்கே அழைத்து வருவதன் மூலம் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுவதாக சொல்கிறவர்களுக்கு அவர்கள் சொல்கிறார்கள் “நாங்கள் எங்கள் குழந்தைகளை மாற்றுக் கருத்துகள் தெரியாமலும், உலகம் அறியாமலும் பூட்டி வைப்பதில்லை”.

அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்காக நெடுஞ்சாலை ஒன்றில் அவர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இது நிச்சயமற்ற காலம். யார் வேண்டுமானாலும் காணாமல் போகலாம். இது தெரிந்தாலும், அவர்கள் நெடுஞ்சாலையை விட்டு அகலவில்லை.

நான் முதலில் ஷாஹின் பாக் சென்றது கிறிஸ்துமஸ் நேரத்தில். வானத்திலும், மாடிகளிலும் நட்சத்திரங்கள் தொங்கிக்கொண்டிருந்தன.

நீலநிற தார்ப்பாய் கவிந்த கூடாரத்தில் அமர்ந்திருக்கும் அந்தப் பெண்கள், அவர்கள் தாங்கள் வீடற்றவர்கள் ஆக்கப்படமாட்டார்கள் என்று அரசு உத்தரவாதம் அளித்தால் ஒழிய வீட்டுக்குத் திரும்புவதில்லை என்று உறுதியாக இருக்கிறார்கள். பாலத்தீனிய கவிஞர் மஹ்மூத் டார்விஷ் எழுதிய கவிதை ஒன்று எனக்கு நினைவுக்கு வந்தது. “எனது தாய்நாடு ஒரு சூட்கேஸ் அல்ல. நான் பயணியும் அல்ல” என்பதே அந்தக் கவிதை வரி.

ஷாஹின்பாக் இல்லாது ஒழிவதற்காக தங்களுக்கு வாக்களிக்கும்படி டெல்லி வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. பெரும்பாலான காலைப் பொழுதுகளில் ஷாஹின்பாகில் நான் சந்தித்த பெண்களிடம் இருந்து வரும் தகவலுக்காக நான் கைபேசியைப் பார்ப்பேன். எப்போதும் அந்த ஒரு செய்தி வந்திருக்கும். “நாங்கள் இன்னும் இங்கே இருக்கிறோம்” என்பதே அந்த செய்தி.

என் வாழ்க்கை முழுவதும் போராட்டங்களின் முக்கியத்துவத்தை பார்த்து வந்திருக்கிறேன். 1980களில், 90களில் பிகாரில் வளர்ந்தபோது ‘சக்கா ஜாம்’ எனப்படும் போராட்ட முறையைப் பார்த்திருக்கிறேன். சமூக, அரசியல் எதிர்ப்புகளைக் காட்டுவதற்காக வேண்டுமென்றே செய்யப்படும் போக்குவரத்து நெரிசல் அது. பிறகு பிகாரில் எல்.கே. அத்வானி கைது செய்யப்பட்டபோது, முதல் முறையாக ஊரடங்கு அமலானதையும், போராட்டத்தையும் பார்த்தேன்.

அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரையை மனப்பாடம் செய்து கற்றேன். அரசின் கொள்கைகளுக்கு வழிகாட்டும் நெறிகளைப் பற்றியும், அடிப்படை உரிமைகளைப் பற்றியும் தேர்வுகளில் எழுதியுள்ளேன்.

நான் கல்லூரியில் படித்தபோது, என் மூத்த மாணவி ஷில்பி ஜெயின் வல்லுறவு செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து நடத்தப்பட்ட மெழுகுவர்த்தி ஊர்வலம்தான் நான் பார்த்த முதல் மெழுகுவர்த்தி ஊர்வலம். அந்த வழக்கு இன்னும் முடிந்தபாடில்லை.

நாடு முழுவதும் பரவிய போராட்ட மாதிரி

குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019க்கு எதிராக நடக்கும் நீண்ட நெடிய போராட்டம்தான் ஷாஹின்பாக் போராட்டம். அந்தப் போராட்ட வடிவம் தற்போது நாடு முழுவதும் பரவிவிட்டது. ஒவ்வொரு போராட்டமும் தங்களையும் ஷாஹின்பாக் என்றே அழைத்துக்கொள்கின்றன. அந்தப் போராட்டத்தை ஒடுக்கிவிட அரசாங்கம் முயன்றாலும், போராட்டம் என்னவோ வீரியம்தான் பெறுகிறது.

அநீதி என்று தாம் கருதுகிறவற்றை எதிர்த்து, பாடல்கள், கவிதைகள், முழக்கங்கள், அமைதி ஆகியவற்றைக் கொண்டு உலகம் போராடிக் கொண்டுதான் இருக்கிறது. ஓர் எதிர்ப்பு இயக்கம் எப்படி உருவாகி நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள என் குடியிருப்பின் எல்லையைக் கடந்து விருப்பம் போல சுற்றித் திரிய முடிவு செய்தேன். அவர்கள் தங்களை பறவைகள் என்று அழைத்துக்கொள்கிறார்கள். பறவைகள் தற்போது தங்கள் சிறகுகளை விரிக்கின்றன.

ஷாஹீன் என்பதற்கு வலசை போகாத வல்லூறு என்று பொருள். விக்கிபீடியா தருகிற தகவல் இது.

மாலை வேளைகளில் ஒரு மூலையில் நின்று கவனித்துக்கொண்டிருப்பேன். ஒரு நாள் இரவு 1 மணி. நெடுஞ்சாலை போராட்டக்காரர்கள் தந்த ஒரு கோப்பை தேனீரை நன்றியோடு ஏற்றுக்கொண்டேன். பார்க்க, கவனிக்க, புரிந்துகொள்ள, நுரையீரலில் நம்பிக்கையின் காற்றை நிரப்பிக்கொள்ள அங்கே சென்றேன். டெல்லியில் பெரும்பாலான நேரம் காற்றின் தரம் தீங்குவிளைவிக்கும் தரத்தில் இருக்கும். இதில் இருக்கும் சிலேடை உங்களுக்குப் புரியும்.

அமர்கிறேன். சுற்றி வருகிறேன். நோட்டுப்புத்தகமும் பேனாவுமாக அலைகிறேன். தேனீர்க் கடைகளில் நேரம் செலவிடுகிறேன். குறைவாகப் பேசுகிறேன். அதிகம் கவனிக்கிறேன். பல காலம் போராட்டங்களை கவனித்துள்ளேன். சளி, தலைவலி இருந்தாலும், புறவயமாக இருப்பது தொடர்பாக வழகாட்டு நெறிகள், சிக்கலான கருத்துக்கள் இருந்தாலும் பல நாள்கள் தொடர்ந்து இங்கு வருகிறேன். நான் ஒரு செய்தியாளர். எனவே, புறவயமான உண்மைகளை மட்டுமே கையாளவேண்டும். ஆனால், நானொரு கதை சொல்லியும்கூட.

இரவு முழுவதும் அமர்ந்திருக்கும் பெண்களைப் பார்க்கிறேன். அவர்களை மாற்றி விடுவதற்காக வருகிற பெண்களையும் பார்க்கிறேன். ஆனமட்டில் தகவல்களை நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறேன். படமெடுக்கிறேன். அவர்கள் முழங்குகிற கவிதை வரிகளை குறிப்பெடுக்கிறேன். அங்கு நிலவும் சூழலை குறிப்பெடுக்கிறேன்.

இங்கு நிலவும் ‘அராஜக’ சூழல் உங்களை ஈர்க்கிறது. இங்குள்ள சந்துகளில் பலமுறை நடக்கிறேன். 75 வயது மூதாட்டி உங்களை வழிநடத்திச் செல்கிறார். தாங்கள் ஏன் போராட நேர்ந்தது என்பதையும் அவர் சொல்கிறார். என்னைப் பார்த்தவுடன் அவர்கள் புன்னகைக்கிறார்கள். உண்ண உணவும், கேட்க கதைகளும் தருகிறார்கள். எது கிடைக்கிறதோ அதை ஏற்றுக்கொள்கிறேன்.

ஒடிசலான தேகம் கொண்ட நூருண்ணிசா உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர். பல ஆண்டுகளுக்கு முன்பு தன் மகன்களோடு வந்து ஷாஹின்பாகில் வசித்துவருகிறார். இவர் போராட வருவதை கடுங்குளிர் தடுக்கவில்லை.

நான் எங்கே இருக்கிறேன் என்று அறிந்துகொள்ள அம்மா கைபேசியில் தகவல் அனுப்பி கேட்கிறார். நான் மீண்டும் தெருக்களில் இருக்கிறேன் என்று அவருக்கு பதில் அனுப்பினேன். நன்கு போர்த்திக்கொள் என்று அம்மா அறிவுரை சொல்கிறார். வீட்டுக்கு வந்துவிடு என்று அவர் சொல்லவில்லை.

ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. பல தர்ணா போராட்டங்கள் ஷாஹின்பாக் மாதிரியில் நடக்கின்றன. பாட்னாவில், பிரக்யாராஜில், வேறு இடங்களில் இத்தகைய போராட்டங்கள் நடக்கின்றன. நான் முதல் முதலாக ஷாஹின்பாக் வந்த பிறகு இத்தகைய போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துதான் இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from இந்தியாMore posts in இந்தியா »
More from தமிழகம்More posts in தமிழகம் »