Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): தனிமைப்படுத்தப்பட்ட வுஹான் நகரில் வாழ்க்கை எப்படி உள்ளது?

கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சீன நகரமாக வுஹானில் வசிப்பவர் க்வோ ஜிங். கடந்த ஜனவரி 23ஆம் தேதியில் இருந்து வுஹான் நகரம் முற்றிலுமாக முடக்கப்பட்டிருக்கிறது.

போக்குவரத்து ரத்து, கடைகளும் வியாபாரங்களும் மூடப்பட்டதுடன் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

29 வயதான ஜிங், வுஹானில் தனியே வசித்து வரும் ஓர் சமூக சேவகர். கடந்த ஒரு வாரமாக என்னென்ன நடந்தது என்பதை டைரியில் எழுதி வைத்த ஜிங், அதனை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.

ஜனவரி 23 – நகரம் முழுவதும் முடக்கப்பட்ட நாள்

நான் எழுந்தவுடன் இந்த நகரம் முழுவதும் முடக்கப்பட்டது என்ற செய்தியை கேட்டு எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அப்படி என்றால் என்னவென்று கூட எனக்கு தெரியவில்லை. எவ்வளவு நாட்கள் இது நீடிக்கும், நான் எவ்வாறு இதற்கு தயாராக வேண்டும் என்று எதுவும் எனக்கு தெரியவில்லை.

செய்திகளை பார்த்தேன். பல நோயாளிகளுக்கு இடம் இல்லாததால் மருத்துவமனையில் சேர்க்க முடியாத சூழல். காய்ச்சல் இருக்கும் பலருக்கும் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை.

வெளியே மக்கள் அனைவரும் முகமூடிகளை அணிந்து நடந்து கொண்டிருந்தனர். உணவுப் பொருட்களை வாங்கி சேமித்து வைத்துக் கொள்ளுமாறு என் நண்பர்கள் அறிவுறுத்தினார்கள். அரிசி, நூடுல்ஸ் என அனைத்தும் வேகமாக விற்பனையாகிவிட்டது.

கடையில் ஒரு நபர் அதிகப்படியான உப்பை வாங்கிக் கொண்டிருந்தார். ஒருவர் ஏன் அப்படி வாங்குகிறீர்கள் என்று கேட்டதற்கு, “ஓராண்டுக்கு இதே நிலை நீடித்தால் என்ன செய்வது?” என உப்பு வாங்கிய அந்த நபர் கேட்டார்.

நான் மருந்துக்கடைக்கு சென்றால், அங்கு முகமூடிகளும், கிருமிநாசினிகளும் ஏற்கனவே விற்பனையாகிவிட்டன.

நான் எனக்கு தேவையானவற்றை சேமித்துக் கொண்ட பிறகும் என்னால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. நகர வாழ்க்கை திடீரென நின்றுவிட்டது. எப்போது மீண்டும் உயிர் பெறும் என்று தெரியவில்லை.

ஜனவரி 24 – அமைதியாக கடந்து போன புத்தாண்டுக்கு முந்தைய இரவு

உலகமே அமைதியாக இருக்கிறது. இந்த அமைதி பயத்தை உண்டாக்குகிறது. நான் தனியாக வாழ்கிறேன். ஏதாவது சத்தம் கேட்கும்போதுதான் எனது அருகில் மனிதர்கள் வசிக்கிறார்கள் என்பதை உணர முடிகிறது.

என் குறிக்கோள்களில் ஒன்று என் உடல்நிலையை பராமரித்துக் கொள்வது. நான் உயிர்வாழ உணவு அவசியம். அதற்கு தேவையான உணவுப் பொருட்கள் என்னிடம் இருப்பது முக்கியம்.

எவ்வளவு நாட்களுக்கு இந்த நகரம் இவ்வாறு முடக்கப்பட்டிருக்கும் என்பதை அரசாங்கம் அறிவிக்கவில்லை. சிலர் மே மாதம் வரை இது நீடிக்கலாம் என்கிறார்கள்.

என் வீட்டிற்கு கீழே இருக்கும் மருந்தகம் உள்ளிட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன. ஆனால், கூரியரில் உணவு விநியோகம் செய்வது தொடர்ந்தது என்பது ஆறுதல் செய்தி.

பலசரக்குக் கடைகளில் நூடுல்ஸ்கள் அனைத்தும் விற்பனையாகிவிட்டன. ஆனால் அரிசி கிடைத்தது. நானும் சூப்பர் மார்கெட்டுக்கு சென்று செலரி, பூண்டு மற்றும் முட்டைகளை வாங்கி வந்தேன்.

வீட்டிற்கு சென்றவுடன் குளித்துவிட்டேன். ஒரு நாளைக்கு 20 – 30 முறையாவது கைகளை கழுவி விடுவேன்.

நான் வெளியே சென்றால்தான், இந்த உலகத்துடன் நான் தொடர்பில் இருப்பதை என்னால் உணர முடிந்தது. வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் எல்லாம் இந்த நாட்களை எப்படி கடப்பார்கள் என்று நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

இது பன்றி ஆண்டின் கடைசி இரவு என்பதால், நான் சமைக்கவில்லை. வழக்கமாக பெரும் கொண்டாட்ட உணவாக இது இருக்கும்.

பின்னர் இரவில் நான் எனது நண்பர்களுடன் வீடியோ காலில் பேசினேன். ஆம். வைரஸ் குறித்த பேச்சு கட்டாயமாக இடம் பெற்றிருந்தது. பலரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தங்கள் வீடுகளுக்கு செல்லாமல் இருந்தனர்.

சுமார் 3 மணி நேரம் பேசிய பின், நல்ல நினைவுகளுடன் உறங்கலாம் என்று நினைத்தேன். ஆனால், என் கண்களை மூடியவுடன் எனக்கு கடந்த நாட்களின் நினைவுகள்தான் நியாபகத்துக்கு வந்தன.

கண்களில் கண்ணீர். எதற்கும் உதவாதவள் போன்று உணர்ந்தேன். கோபமும் சோகமும் என்னை தொற்றிக் கொண்டது. மரணம் குறித்தும் நினைத்துக் கொண்டேன்.

ஜனவரி 25 – சீனப்புத்தாண்டு

இன்று சீனப்புத்தாண்டு. எனக்கு பண்டிகைகளை கொண்டாட என்றும் ஆர்வம் இருந்ததில்லை. ஆனால், இந்தப் புத்தாண்டுக்கும் எனக்கும் ஏதோ சம்மந்தமே இல்லாதது போல இருந்தது.

காலையில் நான் தும்பிய போது, எனக்கு சிறிதளவு ரத்தம் வந்தது. நான் பயந்து போனேன். எனக்கு உடல்நிலை சரியில்லை என்று பெரும் கவலையில் இருந்தேன். வெளியே போகலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தேன். ஆனால் எனக்கு காய்ச்சல் இல்லை. அதனால் வெளியே செல்லலாம் என்று முடிவு செய்தேன்.

இரண்டு முகமூடிகள் அணிந்து கொண்டேன். மக்கள் சிலர் முகமூடிகளால் எந்த பலனும் இல்லை என்கிறார்கள். இருந்தும் நான் முகமூடிகளை அணிந்து கொண்டு வெளியே சென்றேன்.

மிகவும் அமைதியாக இருந்தது.

சூப்பர் மார்கெட்டில் காய்கறிகள் வைக்கப்படும் இடம் முழுக்க காலியாக இருந்தது. நூடுல்ஸ் பாக்கெட்டுகள் எல்லாம் கிட்டத்தட்ட காலியாகி இருந்தன. குறைந்தளவு மக்களே அங்கு இருந்தார்கள்.

ஒவ்வொரு முறை நான் கடைக்கு செல்லும் போதும் அதிகப்படியான உணவுப் பொருட்களை வாங்க வேண்டும் என்ற துடிப்பு எனக்கு இருந்தது. என் வீட்டில் 7 கிலோ அரிசி இருந்தாலும், மேலும் 2.5 கிலோ அரிசியை நான் வாங்கினேன். உருளைக்கிழங்குகள், சாசேஜுகள், சிவப்பு பீன்ஸ், பச்சை பீன்ஸ், தினைகள் மற்றும் உப்புகண்டம் செய்யப்பட்ட முட்டைகளை வாங்கினேன்.

எனக்கு அந்த முட்டைகள் பிடிக்காது என்றபோதும் அவற்றை வாங்கினேன்.

ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்கள் என்னிடம் இருக்கின்றன. ஆனாலும் மேலும் வாங்க வேண்டும் என்ற எண்ணம். இதுபோன்ற சூழலில் நான் இவ்வாறு நினைப்பது தவறில்லைதானே?

பின்னர் நதிக்கரையோரம் நடக்க சென்றேன். அங்கு இரண்டு சிற்றுண்டி கடைகள் மட்டுமே திறந்திருந்தன. சிலர் தங்களது நாய்க்குட்டிகளுடன் நடந்து கொண்டிருந்தனர்.

நான் அந்த சாலையில் இதுவரை நடந்ததே இல்லை. என் உலகம் சற்று விரிவடைந்ததை போல உணர்ந்தேன்.

ஜனவரி 26 – ஒடுக்கப்படும் குரல்கள்

வுஹான் நகரம் மட்டும் முடக்கப்படவில்லை. மக்களின் குரல்களும்தான்.

நகரம் முடக்கப்பட்ட முதல் நாளன்று என்னால் சமூக வலைதளத்தில் எதுவும் எழுத முடியவில்லை. காரணம் தணிக்கை. வீ சாட்டில் சுட எதுவும் எழுத முடியவில்லை. இணையதள தணிக்கை என்பது சீனாவில் நீண்ட காலமாக இருந்துவரும் ஒன்றுதான். ஆனால், தற்போது அது கொடூரமாக தோன்றுகிறது.

உங்கள் வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது. மீண்டும் பழைய வாழ்க்கையை வாழ்வது சவாலான ஒன்று.

எத்தனை பேர் வெளியில் இருக்கிறார்கள் என்று பார்க்க இன்று மீண்டும் வெளியே சென்றேன். என் வீட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இருக்கும் நூடுல்ஸ் கடை வரை எட்டு பேரை பார்த்தேன்.

எனக்கு மீண்டும் வீட்டிற்கு செல்ல பிடிக்கவில்லை. நான் வுஹானில் குடியேறி இரண்டு மாதங்களே ஆகிறது. அவ்வளவு நண்பர்கள் இல்லை. இந்த நகரமும் எனக்கு அவ்வளவு பரீட்சயம் கிடையாது.

ஆனால், என்னை சுற்று அனைவரும் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

இரவு எட்டு மணிக்கு மக்கள் தங்கள் ஜன்னலோரங்களில் இருந்து “Go, Wuhan!” என்ற கூச்சலிடுவது என் காதில் கேட்டது. அது மக்கள் தங்களுக்கு தானே நம்பிக்கை மற்றும் அதிகாரம் அளித்துக் கொள்ளும் விதமாக இருந்தது.

ஜனவரி 28 – வெளிச்சம்

மக்கள் மத்தியில் ஒரு பயம் இருந்து கொண்டு இருக்கிறது.

பல நகரங்களில் பொதுமக்கள் முகமூடி அணிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும் பலர் முகமூடிகள் இல்லாமலேயே பயணிக்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை.

ஆனால், இறுதியாக இன்று வெளிச்சத்தை பார்க்க முடிந்தது. என் வீட்டின் அருகே அதிக மக்களை பார்த்தேன். ஒருசில சமூகப் பணியாளர்கள் மட்டுமே இருந்தார்கள். இருக்கும் மக்களின்

முடக்கப்பட்ட ஒரு நகரத்தில் நம்பிக்கையை ஏற்படுத்துவது சுலபமான காரியம் அல்ல. இந்த நகரம் அப்படிப்பட்ட சூழலில்தான் இருக்கிறது.

இதற்கிடையில், என்னை பாதுகாத்து கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »