Press "Enter" to skip to content

மகாதீர் திட்டவட்டம்: அளித்த வாக்குறுதியின்படி பதவி விலகுவது உறுதி

சதீஷ் பார்த்திபன்
பிபிசி தமிழுக்காக, மலேசியாவிலிருந்து

தேர்தலுக்கு முன்பே அளித்த வாக்குறுதியின்படி ஆசிய பசிஃபிக் மாநாட்டுக்குப் பிறகு மலேசியப் பிரதமர் பதவியிலிருந்து விலக இருப்பதாக மகாதீர் மொஹம்மத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகளுடன் தாம் ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகி வந்த பரபரப்பு ஆருடத் தகவல்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

மேலும், எந்தவித சர்ச்சையும் பிரச்சினையும் எழாதபோதே, ஊடகங்கள் பலவிதமான கதைகளை வெளியிடுவதாகவும் மகாதீர் தெரிவித்தார்.

“பிரதமர் பொறுப்பை ஒப்படைக்கும் விஷயத்தில் ஊடகங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றன. இதில் எந்தவிதமான சர்ச்சையும் இல்லாத போதே இதுகுறித்து பல கதைகள் வெளிவருகின்றன.

“எனக்கும் அன்வாருக்கும் இடையே குத்துச்சண்டை சாத்தியம் என ஊடகங்கள் கருதுகின்றன. இருவருக்கும் இடையே வாக்குவாதத்தை ஏற்படுத்தவும் ஊடகங்கள் முயற்சிக்கின்றன. எனக்கும் அன்வாருக்கும் இடையே மோதல் என்றால் அது ஈர்க்கும். எல்லோரும் மோதிக் கொண்டால் ஊடகங்களுக்கு கதை சொல்வது இன்னும் வேடிக்கையாக இருக்கும்,” என்று இன்று லங்காவியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார் மகாதீர்.

மகாதீர் பிரதமரானபோது சிறையில் இருந்த அன்வார்

மலேசியாவில் தற்போது நம்பிக்கை கூட்டணி என்று அழைக்கப்படும் ‘பக்காத்தான் ஹராப்பான்’ கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதில் இடம்பெற்றுள்ள கட்சிகள் கடந்த 2018ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வகுத்துக் கொண்ட குறைந்தபட்ச செயல் திட்டங்களின் படி, தேர்தலில் இக்கூட்டணி வென்றால் மகாதீர் முதலில் பிரதமராகப் பொறுப்பேற்பார் என்றும், வான் அசிஸா துணைப் பிரதமராவார் என்றும் முடிவானது.

நம்பிக்கை கூட்டணியில் இடம்பெற்றுள்ள பிகேஆர் கட்சியின் தலைவரான அன்வார் இப்ராஹிமின் மனைவிதான் வான் அசிஸா.

பொதுத்தேர்தல் நடைபெற்ற வேளையில் ஒரு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்தார் அன்வார். தேர்தல் முடிந்த பின்னர் புதிய ஆட்சி அமையும் பட்சத்தில் அவர் சிறையிலிருந்து விடுதலையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நம்பிக்கை கூட்டணித் தலைவர்கள் அறிவித்திருந்தனர்.

மேலும், அவர் விடுதலையான பிறகு பிரதமர் பதவி வகிக்கும் மகாதீர் மொஹம்மத் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பதவி விலகி, பிரதமர் பொறுப்பை அன்வாரிடம் ஒப்படைப்பார் என்றும் நம்பிக்கைக் கூட்டணி அறிவித்தது. அதன்படி அன்வார் விடுதலையானார். தற்போது மகாதீர் ஆட்சிப் பொறுப்பை ஏற்று 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. இதையடுத்து அவர் உடனடியாக பதவி விலகி, அன்வார் பிரதமர் பொறுப்பை ஏற்க வழிவிட வேண்டும் என ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

திடீரென மகாதீரை ஆதரிக்க முன்வந்துள்ள எதிர்க்கட்சிகள்

இந்நிலையில் யாரும் எதிர்பாராத திடீர் திருப்பமாக, ஆட்சிக்காலம் முடிவடையும் வரை மகாதீரே பிரதமர் பதவியில் நீடிக்க வேண்டும் என்றும், அவரை நாடாளுமன்றத்தில் ஆதரிக்க தயார் என்றும் பாஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.

அந்த வகையில் மகாதீர் ஆட்சியில் நீடிக்க 130க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும், எனவே அன்வார் இப்ராகிம் தலைமையிலான பிகேஆர் கட்சியின் ஆதரவு இன்றியே மகாதீரால் பிரதமர் பதவியில் நீடிக்க முடியும் என்றும் தகவல் வெளியானது.

எனவே இந்த ஆதரவை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி, எதற்காக தாம் பதவி விலக வேண்டும் என்ற கேள்வியை அன்வார் தரப்பிடம் மகாதீர் முன்வைப்பார் என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து பதவியில் நீடிப்பதற்காக மகாதீர் மறைமுகமாக சில நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக மலேசிய அரசியல் களத்தில் புதுப்பரபரப்பு எழுந்தது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் தந்திரமான சதித்திட்டத்துடன் களமிறங்கி இருப்பதாக அன்வார் சாடினார். நம்பிக்கைக் கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்துவதே எதிர்க்கட்சிகளின் நோக்கம் என்றும், பிரதமர் மகாதீருக்கு இதில் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் பிரதமரிடம் தாம் இதுகுறித்து கேட்டபோது, கொல்லைப்புறம் வழியாகப் பிரதமர் பதவியைப் பிடிப்பது தமது நோக்கமல்ல என்று மகாதீர் தெளிவுபடுத்தியதாகவும் அன்வார் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்நிலையில், அடுத்த வெள்ளிக்கிழமை ஆளும் நம்பிக்கை கூட்டணியின் தலைமைக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது தலைமைத்துவ மாற்றம் குறித்து விவாதிக்கப்படும் என்று அன்வார் மேலும் தெரிவித்துள்ளார்.

WHO Warning to Malaysia : ”பள்ளிகளை மூட தயாராகுங்கள்” | கொரோனா | Corona Virus

மகாதீர்: நான் 22 ஆண்டுகள் பதவியில் நீடிக்க வேண்டும் என விரும்புகிறார்கள்

இதற்கிடையே தாம் இரண்டாவது தவணையிலும் 22 ஆண்டுகள் பிரதமர் பதவியில் நீடிக்க வேண்டும் என சிலர் விரும்புவதாக மகாதீர் மொஹம்மத் தெரிவித்தார்.

எனினும் அதற்கு சாத்தியமில்லை என இன்று லங்காவியில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் குறிப்பிட்டார்.

கடந்த 1981 முதல் 2003 வரை மலேசியப் பிரதமராக பதவி வகித்தார் மகாதீர். அதைக் குறிப்பிட்டு இம்முறையும் 22 ஆண்டுகள் தாம் பிரதமராக நீடிக்க வேண்டும் என்று சிலர் விருப்பம் தெரிவித்திருப்பதாக அவர் கூறினார்.

“எனக்கு தற்போது 94 வயதாகிறது. சில மாதங்களில் 95 வயதாகும். என்னால் அவ்வளவு நீண்ட காலத்துக்கு எப்படி பணியாற்ற முடியும்?” என்று கேள்வி எழுப்பினார் மகாதீர்.

“நான் ஆசிய பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டுக்குப் பிறகு பதவி விலகுவதாக வாக்குறுதி அளித்துள்ளேன். அதை நிறைவேற்றுவேன். மற்றபடி வேறு எந்த செயல்களிலும் நான் பங்கு பெறவில்லை,” என்றும் மகாதீர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தாம் பதவி நீடிக்க முயற்சிப்பதாக வெளியான தகவலை மறுக்கும் வகையிலேயே, ‘எந்த செயல்களிலும்’ ஈடுபடவில்லை என்று அவர் குறிப்பிட்டதாகக் கருதப்படுகிறது.

மகாதீர் அளித்த பதில்களால் உருவான குழப்பம்

கடந்த சில மாதங்களாக பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைப்பது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு திட்டவட்டமான பதில்கள் எதையும் அளிக்காமல் இருந்தார் மகாதீர். அதனால் அவர் எப்போது பதவி விலகுவார் என்பது தெரியாமலேயே இருந்தது.

பதவியேற்ற புதிதில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அன்வார் பிரதமர் ஆவார் என்று மகாதீர் தரப்பில் கூறப்பட்டது. பிறகு நாடு வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பிய பின்னர் பதவி விலகுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதையடுத்து ஆசிய பசிஃபிக் பொருளாத ஒத்துழைப்பு மாநாட்டுக்குப் பிறகு பதவி விலகப் போவதாக அறிவித்த மகாதீர், பின்னர் அம்மாநாட்டுக்குப் பிறகும் தாம் பதவியில் நீடிக்க வாய்ப்புண்டு என்றார்.

இதையடுத்து தாம் பிரதமர் பதவியை அன்வாரிடம் ஒப்படைத்தாலும், அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருக்க வேண்டியது முக்கியம் என்றார். அடுத்த பிரதமர் யார் என்பதை நாடாளுமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் மகாதீர் கூறியது, குழப்பத்தை ஏற்படுத்தியது.

அன்வாரால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க இயலாது என்று அவர் சொல்கிறாரா எனும் கேள்வி எழுந்தது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரைச் சந்தித்துப் பேசினார் மகாதீர். இதையடுத்து எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த சீன புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பிலும் அவர் பங்கேற்றார்.

இதன் பிறகு மகாதீர் தான் நடப்பு ஆட்சிக்காலம் முழுவதும் பிரதமராக நீடிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. பிரதமருக்கு ஆதரவு தருவதை உறுதி செய்யும் வகையில் நாடாளுமன்றத்தில் ‘நம்பிக்கைத் தீர்மானம்’ ஒன்றைக் கொண்டு வரப் போவதாகவும் அக்கட்சிகள் அறிவித்தது ஆளும் தரப்பையே புருவம் உயர்த்த வைத்தது.

எனினும் அடுத்த பொதுத் தேர்தலில் அன்வாரைத் தான் ஆளும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் என்று கருதுவதால், அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் எதிர்க்கட்சிகள் காய்களை நகர்த்துவதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதை திட்டவட்டமாக அறிவித்துள்ளார் மகாதீர். அவர் குறிப்பிட்ட APEC மாநாடு, மலேசியத் தலைவர் கோலாலம்பூரில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »