Press "Enter" to skip to content

மேயர் வேட்பாளர் பாலியல் காணொளி வெளியீடு: தோழி கைது, தொடரும் சர்ச்சை மற்றும் பிற செய்திகள்

பாலியல் காணொளி வெளியீடு: தொடரும் சர்ச்சை, செயற்பாட்டாளர் தோழி கைது

பாரிஸ் மேயர் வேட்பாளரான பெஞ்சமின் இடம் பெற்றிருந்த ஆபாச காணொளியை வெளியிட்டதன் தொடர்பில் ரஷ்ய கலைஞர் மற்றும் செயற்பாட்டாளர் பீட்டரின் தோழி அலெக்ஸாண்டராவை கைது செய்தது பிரான்ஸ் போலீஸ். நேற்று பீட்டரை கைது செய்த போதே அலெக்ஸாண்டராவையும் கைது செய்திருக்கிறார்கள். ஆனால், அந்த தகவலை போலீஸ் நேற்று வெளியிடவில்லை.

தனிப்பட்ட தகவல்களை ஊடுருவியது மற்றும் சங்கடப்படுத்தும் புகைப்படங்களை வெளியிட்டது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அலெக்ஸாண்ட்ரா கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதுவரை நடந்தவை என்ன?

பாரிஸ் நகர மேயர் வேட்பாளராகக் களம் நின்றார் பெஞ்சமின். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங்கின் முன்னாள் செய்தித் தொடர்பாளரான இவர் ஒரு பெண்ணுடன் பகிர்ந்த பாலியல் தொடர்பான காட்சிகள் மற்றும் குறுஞ்செய்திகள் வெளியாகி வைரலாக பரவியது.

இதனை அடுத்து அவரது அரசியல் வாழ்வு கேள்விக் குறியானது. ரஷ்யாவிலிருந்து வந்து பிரான்ஸில் தஞ்சம் புகுந்துள்ள பீட்டர் என்பவர் இந்த காணொளியைப் பதிவேற்றினார். அரசியல் வாழ்வில் இருப்பவர்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக இதனைப் பதிவேற்றினேன் என்று அவர் கூறினார்.

ஆனால், யாரும் எதிர்பாராத வண்ணம் எதிர்க்கட்சிகளிடமிருந்து கூட பெஞ்சமினுக்கு ஆதரவு வந்தது. வலதுசாரிகள் மற்றும் இடதுசாரிகள் ஆகிய இருதரப்பும் பெஞ்சமினுக்கு சாதகமான கருத்தையே வெளியிட்டுள்ளனர்.

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி இணையத்தில் பரப்பலாம்? என எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பின. இப்படியான சூழலில் பீட்டர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். ஆனால், இந்த காணொளியை வெளியிட்டதற்காக பீட்டர் கைது செய்யப்படவில்லை. கடந்த டிசம்பர் 31ஆம் தேதி பாரிஸில் ஆயுதங்கள் கொண்டு கைகலப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பிரான்ஸ் நீதித்துறை கூறுகிறது.

தலித் இளைஞர் படுகொலை: விழுப்புரம் அருகே கும்பல் தாக்கி இறந்தார் – நடந்தது என்ன?

விழுப்புரம் அருகே தலித் இளைஞர் ஒருவர் வேறொரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு கும்பலால் தாக்கி கொல்லப்பட்டுள்ளார். சாலையோரம் மலம் கழிக்க முயன்றபோது அவர் தாக்கப்பட்டதாக, புகார் கூறப்படுகிறது. தாக்குதல் நடந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அவர் தம் உள்ளாடையைக் கழற்றி அங்கிருந்த பெண்களிடம் காட்டியதாக கூறுகிறார்கள்.

கடந்த புதன்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது.

அவரை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஏழு பேரை விழுப்புரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விரிவாகப் படிக்க:விழுப்புரம் அருகே கும்பல் தாக்கி தலித் இளைஞர் படுகொலை – நடந்தது என்ன?

ஷவேந்திர சில்வா மீது அமெரிக்கா தடை: “இலங்கை ஜனாதிபதி உரிமையை கேள்வி கேட்கிறது”

இலங்கை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிற்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளமையானது, ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதியின் உரிமையை வெளிநாட்டு அரசாங்கம் கேள்விக்கு உட்படுத்தும் செயற்பாடு என இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

விரிவாகப் படிக்க:ஷவேந்திர சில்வா மீது அமெரிக்கா தடை: “இலங்கை ஜனாதிபதி உரிமையை கேள்வி கேட்கிறது”

ஜாமியா நூலகத்தில் போலீசார் புகுந்து தாக்கும் காணொளி – 2 மாதம் கழித்து வெளியானது

கடந்த டிசம்பர் 15ஆம் தேதி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது டெல்லி போலீஸார் நடத்திய தடியடி தொடர்பான புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

29 விநாடி நேரம் ஓடும் உள்ள அந்த சிசிடிவி காணொளியில் கல்லூரி நூலகத்தில் இருக்கும் மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்துகின்றனர். அதில் சில மாணவர்கள் நாற்காலிக்கு அடியில் சென்று ஒளிந்துகொள்கின்றனர். சிலர் தங்களை விட்டுவிடுமாறு கைகூப்பி கேட்கின்றனர்.

விரிவாகப் படிக்க:ஜாமியா நூலகத்தில் போலீசார் புகுந்து தாக்கும் காணொளி – 2 மாதம் கழித்து வெளியானது

அமித் ஷாவை சந்திக்க ஷாஹீன்பாக் போராட்டக்காரர்களுக்கு அனுமதி மறுப்பு

குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக தங்கள் கோரிக்கைகளை விளக்குவதற்காக, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க சென்ற டெல்லி ஷாஹீன்பாக் போராட்டக்காரர்கள் அவரை சந்திக்க முடியாமலே திரும்பினர். முன் அனுமதி ஏதும் பெறவில்லை என்று கூறி அவர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

உள்துறை அமைச்சர் தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக நேற்று (சனிக்கிழமை) நடந்த செய்தியாளர் சந்திப்பில் போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், அதுபோன்ற எந்த சந்திப்பும் திட்டமிடப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்திருந்தது.

எனினும், இன்று ஷாஹீன்பாக் போராட்டக்காரர்கள் அமித் ஷா வீட்டை நோக்கி பேரணியாக சென்றனர்.

ஆனால் அவர்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர்.

விரிவாகப் படிக்க:அமித் ஷாவை சந்திக்க ஷாஹீன்பாக் போராட்டக்காரர்களுக்கு அனுமதி மறுப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »