Press "Enter" to skip to content

Coronavirus News: கொரோனா வைரஸால் மலேசியாவில் பொருட்கள் வாங்க குவிந்த சிங்கப்பூர் மக்கள்

சதீஷ் பார்த்திபன்
பிபிசி தமிழுக்காக

‘கோவிட் 19’ என பெயரிடப்பட்டுள்ள கொரோனா கிருமித் தொற்று, அளவில் சிறிய நாடான சிங்கப்பூரையும் விட்டு வைக்கவில்லை. அங்கு பிப்ரவரி 16ஆம் தேதி நிலவரப்படி 75 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

ஆயுதப்படை வீரர் ஒருவர், 29 வயது ஆடவர், 71 வயது மூதாட்டி ஆகிய மூவருக்கும் ‘கோவிட் 19’ எனப்படும் கொரோனா கிருமித்தொற்று இருப்பதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

அங்கு ‘கோவிட் 19’ பாதிப்புள்ள 56 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஐவர் மட்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்கள், தொழில்முனைவோர் எனப் பல்வேறு தரப்பினரும் பின்பற்ற வேண்டிய சில அறிவுறுத்தல்கள், விதிமுறைகளையும் சிங்கப்பூர் அரசு வெளியிட்டுள்ளது.

அவற்றைப் பின்பற்றவில்லை எனில் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிருமித்தொற்றுப் பரவலை தடுக்க முடியும் என்கிறது சிங்கப்பூர் அரசு.

கிருமித் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சிங்கப்பூரில் சீராக அதிகரித்து வந்தாலும், பொதுமக்கள் அதிகப்படியான பீதிக்கு ஆளாகவில்லை என்றே கூறப்படுகிறது.

சிங்கப்பூரில் கொரோனா கிருமியின் தாக்கம் எந்தளவில் உள்ளது? மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது? அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக என்பதை அறிய பிபிசி தமிழ் பல்வேறு தரப்பினரைத் தொடர்பு கொண்டு பேசியது.

வீடுதோறும் முகக்கவசங்களை விநியோகித்த சிங்கப்பூர் அரசு

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்திறங்குவோர்க்கு விமான நிலையத்திலேயே பரிசோதனை நடத்தப்படுகிறது. கொரோனா கிருமித் தொற்று பாதிப்புக்கான அறிகுறிகள் தென்படும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர் கூடுதல் பரிசோதனைக்காக விமான நிலையத்தில் இருந்து நேராக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சிங்கப்பூர் அமைச்சர்கள் அவ்வப்போது வருகை தந்து சகஜமாகப் பலருடன் உரையாடி, மக்களின் பயத்தைப் போக்குகின்றனர். உடல்நலம் பாதிக்கப்பட்டால் மட்டும் முகக்கவசம் அணியுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட சில நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. முகக்கவசங்கள் இருந்தால் மட்டுமே கிருமித்தொற்றில் இருந்து தப்பிக்க முடியும் என்று தகவல் பரவியதால் மக்கள் அவற்றை வாங்கிக் குவிக்க போட்டியிட்டனர். எனினும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டும் முகக்கவசம் அணிந்தால் போதும் என சிங்கப்பூர் அரசு அறிவுறுத்தியது.

மேலும் ஒவ்வொரு வீட்டுக்கும் தலா நான்கு முகக்கவசங்கள் அரசு செலவிலேயே விநியோகிக்கப்பட்டன.

“சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது”

கொரோனா கிருமித் தொற்று மனிதர்களுக்கு மட்டுமல்ல, சுற்றுலாத் துறைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்கிறார் பயண நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிராஜுதீன்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்துவிட்டது என்பதுடன், வெளிநாடு செல்லும் சிங்கப்பூரர்களும் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகச் சுட்டிக் காட்டுகிறார்.

“வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு உடனடியாக நாடு திரும்ப விருப்பம் இல்லை. செலவிட்ட காசுக்கு ஏற்ப சிங்கப்பூரைச் சுற்றிப்பார்க்க விரும்புகிறார்கள். அதனால் முகக்கவசம் அணிவதுடன், சிங்கப்பூர் அரசின் வழிகாட்டுதலையும் முழுமையாகப் பின்பற்றுகிறார்கள்,” என்கிறார் சிராஜுதீன்.

81% சிங்கப்பூரர்கள் கொரோனா பாதிப்பு குறித்து அஞ்சுகிறார்கள் – அண்மைய ஆய்வு

இதற்கிடையே, கொரோனா கிருமித் தொற்று குறித்து, சிங்கப்பூரில் வசிப்பவர்களில், 81 விழுக்காட்டினருக்கு அச்சம் இருப்பது அண்மையில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாக சிங்கப்பூர் ‘ஸ்ட்ரெய்ட் டைம்ஸ்’ ஊடகம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் லேசான காய்ச்சல் உள்ளிட்ட சிறு அறிகுறிகள் இருப்பினும், முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பதைத் தவிர்க்கப் போவதில்லை என 35 விழுக்காட்டினர் கூறியுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 8 முதல் 10ஆம் தேதி வரை, வீடு வீடாகச் சென்று இக்கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. மொத்தம் 401 வீடுகளில் பல்வேறு வயதினர், இனத்தவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் போது, 85.9 விழுக்காடு பெண்கள் தங்களுக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்படுமோ என்று அச்சப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். ஆண்களில் 75.5 விழுக்காட்டினர் இவ்வாறு அஞ்சுவதாகக் கூறியுள்ளனர்.

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தால் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், அதை மீறும் வகையில், உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும், திருமணம், தேர்வு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்க தயங்கப் போவதில்லை என 34.9 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.

ஞாயிறு வழிபாடுகளை ரத்து செய்த தேவாலயங்கள்

மக்கள் அதிகளவில் கூடும் நிகழ்வுகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டதை அடுத்து, சிங்கப்பூரில் கத்தோலிக்க தேவாலயங்கள் ஞாயிறு வழிபாடுகளை ரத்து செய்தன.

கொரோனா கிருமித்தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிங்கப்பூர், தமிழ்முரசு நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

‘கிரேஸ் அசெம்ப்ளி ஆஃப் காட்’ தேவாலயத்தின் தொடர்பில் இதுவரை 18 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தேவாலயத்தின் இரு வளாகங்களும் சுமார் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அந்நாளேடு மேலும் தெரிவித்துள்ளது.

நொவீனாவிலுள்ள செயின்ட் அன்போன்சஸ் தேவாலயத்தில் அனைத்து கூட்டு வழிபாடுகளும் ரத்து செய்யப்பட்டி ருப்பதாக அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. பிப்ரவரி 16ஆம் தேதி காலை 30க்கும் குறைவானவர்களே தேவாலயத்தின் பொது இடத்தில் காணப்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறியது.

கடந்த சனிக்கிழமை முதல் சிங்கப்பூரில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் பொது வழிபாடு நிறுத்தப்படும் என சிங்கப்பூரின் கத்தோலிக்க பேராயர் வில்லியம் கோ அறிவித்துள்ளார்.

தூய்மையைப் பேணும் கடைகளுக்கு அங்கீகார அடையாளச் சின்னம்

சுத்தத்தையும் சுகாதாரத்தையும் பேணுவதன் மூலம், கிருமித் தொற்றுப் பரவலை வெகுவாகக் கட்டுப்படுத்த முடியும் என சிங்கப்பூர் நாட்டவர்களுக்கு அந்நாட்டு அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

வீடுகள், பொது இடங்கள், வணிக வளாகங்கள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான நடவடிக்கைகளின் ஓர் அங்கமாக, நாடு முழுவதும் அங்காடிக் கடைகளுக்கு, சுத்தத்தைக் குறிப்பிடும் குறியீடாக, ஓர் அங்கீகார அடையாளச் சின்னத்தை அரசு வழங்குகிறது. இதை “SG Clean” என்று குறிப்பிடுகின்றனர். இந்தக் கடைகள் தூய்மையாக இருப்பதை இந்த அடையாளச் சின்னம் மூலம் பொதுமக்கள் அறிந்துகொள்ள முடியும்.

குறிப்பிட்ட சுகாதார தர நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் கடைகளுக்கு இந்தச் சின்னம் வழங்கப்படும் என சிங்கப்பூர் தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.

உணவகங்களில் சமையல் செய்யும் இடங்கள், அவற்றுக்கான சாதனங்கள், சாப்பாட்டு மேசைகள் உள்ளிட்ட அனைத்தும் சுத்தமாக வைத்திருக்கப்பட வேண்டும் என்றும், வீணாகும் உணவை அப்புறப்படுத்துவதில் கவனம் தேவை என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுத்தமாக இருக்க அறிவுறுத்தும் சுவரொட்டிகள்

தனியார் நிறுவனங்கள், உணவகங்கள், கடைகளில் பணியாற்றும் ஊழியர்களின் உடல்நலனைத் தொடர்ந்து கண்காணிக்கும் நடவடிக்கை நடைமுறையில் இருக்க வேண்டும் என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

அனைத்துத் தரப்பினரும் சுத்தத்தைக் கடைப்பிடிக்க வேண்டும், சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதை அறிவுறுத்தும் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

‘அடிக்கடி சோப்புப் போட்டு கைகளைக் கழுவுங்கள்’ என்றும் அந்தச் சுவரொட்டிகளில் அறிவுரை கூறும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

பள்ளிகள், உணவகங்கள், தங்குவிடுதிகள், கடைப்பகுதிகள் என ஒவ்வொரு இடத்தின் தன்மைக்கும் ஏற்ப துப்புரவு தொடர்பான பல்வேறு அறிவுறுத்தல்கள், புதுக் கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் அரசு விதித்துள்ளது.

மலேசியாவுக்குச் சென்று பொருட்களை வாங்கி வரும் சிங்கப்பூரர்கள்

கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், வெளியே நடமாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டதால் சிங்கப்பூரர்கள் பலர் சில தினங்களுக்கு முன்பு பெரும் கவலையில் மூழ்கினர்.

இதனால் நாடு முழுவதும் உள்ள பேரங்காடிகளில் குவிந்த பொதுமக்கள் மொத்தமாக பொருட்களை வாங்கிக் குவிந்தனர். இதையடுத்து அத்தகைய அவசர நிலை ஏற்படாது என சிங்கப்பூர் அரசு மக்களைத் தேற்றியது.

அச்சமயம் சிங்கப்பூர், மலேசியா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மலேசியாவின் ஜோகூர்பாரு மாநிலத்துக்கு தரைவழி பயணம் மேற்கொண்டு, அங்கிருந்து தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை மொத்தமாக வாங்கி வந்தனர் சிங்கப்பூரர்கள்.

எனினும் தற்போது யாரும் பொருட்களை வாங்கிக் குவிப்பதில்லை. போதுமான முகக்கவசம் கிடைப்பதை அரசு உறுதி செய்துள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் எல்லை மாநிலமான ஜோகூர்பாருவில் இருந்து தினந்தோறும் பேருந்து, இருசக்கர வாகனங்கள், கார்களில் சிங்கப்பூருக்குச் சென்று மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.

இரு நாட்டு எல்லைகளையும் இணைக்கும் இடத்தில் மிகப் பெரிய பாலம் அமைந்துள்ளது. பொதுவாகவே இந்த உட்லண்ட்ஸ் பாலத்தில், போக்குவரத்து நெரிசல் இருக்கும். இந்நிலையில் கொரோனா பாதிப்பைக் கண்டறிய இரு நாடுகளும் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதாரப் பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர். இதனால் தினந்தோறும் எல்லைப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

“கொரோனா கிருமித் தாக்கத்தால் வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது”

இதற்கிடையே, கொரோனா பாதிப்பு காரணமாக தமது வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார் ரஷீத் அலி. பணப்பரிமாற்ற நிறுவன ஊழியரான (money changer) இவர், சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்துவிட்டதே இதற்குக் காரணம் என்கிறார்.

“வெளிநாட்டுப் பயணிகள் வரவில்லை என்பது ஒருபுறம் இருக்க, உள்நாட்டில் இருந்தும் யாரும் சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதாகத் தெரியவில்லை. அதனால் தினமும் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் ஒருவருக்கொருவர் ஒருவர் முகம் பார்த்துக் கொள்வதைத் தவிர வேறு எதுவும் நடப்பதில்லை. இந்த நிலை விரைவில் மாறும் என நம்புகிறோம்.

“பொதுமக்கள் பீதியடையும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிடவில்லை என்பதை உணர முடிகிறது. எனினும் பயப்படுவது மனித இயல்பு தானே. அந்த வகையில் ஒருவித பயம் மனதை ஆக்கிரமித்துள்ளது.

“நமக்கு நெருக்கமான யாரேனும் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் போது, மணியடித்தாலே மனம் பதறுகிறது. அவரிடம் பேசத் துவங்கி நலமாக இருப்பதை உறுதி செய்த பிறகே பதைபதைப்பு குறைகிறது. அடுத்த பத்தே நிமிடங்களில் அவர் சாதாரணமாக தொடர்பு கொண்டாலும் கூட, மீண்டும் பதற்றம் ஏற்படுகிறது.

“அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது நல்ல பலன் அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள் தேவையின்றி அச்சப்படக் கூடாது என்பதற்காகவே பள்ளிக்கூடங்களை இன்னும் மூடவில்லை என நினைக்கிறேன். கடந்த சில தினங்களாக எங்கள் பகுதியில் வசிக்கும் குழந்தைகள் யாரையும் வீட்டிற்கு வெளியே பார்க்க முடியவில்லை. விளையாட்டைக் கூட தவிர்த்துவிட்டு குழந்தைகள் வீட்டிலேயே உள்ளனர்,” என்கிறார் ரஷீத் அலி.

“மக்கள் மனதில் ஒருவித அச்சம் உள்ளது”

கொரோனா கிருமி பாதிப்பு குறித்து சரியான தகவல்களை வெளியிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகச் சொல்கிறார், ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் சலாஹுத்தீன் பஷீர்.

மக்கள் மனதில் ஒருவித அச்சம் இருப்பது உண்மை என்றும், கொரோனா கிருமி விவகாரத்தால் தமது தொழிலுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் பிபிசி தமிழிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.

“ஆரஞ்சு நிற எச்சரிக்கை குறியீட்டை அரசு வெளியிட்டதும், இங்கு நான் நடத்தி வரும் சிறிய சூப்பர் மார்கெட்டில் ஒரு நாள் வழக்கத்தைவிட அதிக கூட்டம் இருந்தது. எனினும் அதன் பிறகு மக்கள் உண்மை நிலையை தெரிந்து கொண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர். தற்போது வழக்கமான அளவில் வியாபாரம் நடக்கிறது.

“கூட்டமாக இருக்கும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது. தேவாலங்களில் ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டை நிறுத்தி இருப்பதாக ஊடகங்களில் படித்தேன். ஆனால் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பாதிப்பு ஏதும் இல்லை.

எனினும் தொழுகைக்கு கூடுவோர் ஒருவருக்கொருவர் கைகுலுக்க வேண்டாம் என இஸ்லாமிய சமய மன்றம் அறிவுறுத்தி உள்ளது.

“இலக்கிய, கலை நிகழ்ச்சிகளை ஒத்திப் போட்டுள்ளனர். கடந்த சில தினங்களில் எங்கேனும் திருமணம் நடந்ததாக நான் கேள்விப்படவில்லை. அதே சமயம் தேவை என்றால் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்குச் செல்கிறோம். இல்லையெனில் வீட்டிலேயே இருந்துவிடுகிறோம்,” என்கிறார் சலாஹுத்தீன் பஷீர்.

நன்றி தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர்

சிங்கப்பூரில் ஆயிரக்கணக்கான துப்புரவு, சுகாதாரப் பணியாளர்கள் விடுப்பின்றி பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு பிரதமர் லீ சியன் லூங் நன்றி தெரிவித்துள்ளார்.

“உங்களது அன்பான கவனிப்பும் கடப்பாடும் மிக மிக முக்கியம். இந்த நேரத்தில், நாங்கள் அனைவரும் உங்கள் பக்கம் நின்று, முழு ஆதரவையும் வழங்குகிறோம்,” என்று தமது பதிவில் பிரதமர் லீ குறிப்பிட்டுள்ளதாக சிங்கப்பூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் அன்பர் தினத்தையொட்டி வெளியிட்ட பதிவில், நோயாளிகளை அக்கறையுடன் கவனித்துக்கொள்ளும் மருத்துவர்கள், தாதியர், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, 900 பொது சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்கள் அடங்கிய கட்டமைப்பை மீண்டும் செயல்படுத்த சிங்கப்பூர் சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளது என்றும், சுவாசக் கோளாறு அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூர்வாசிகளுக்கு இந்த மருந்தகங்களில் சிறப்புக் கழிவுடன் சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகவும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »