Press "Enter" to skip to content

பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட ரோஸ் கலெம்பாவின் காணொளி ஆபாச தளத்துக்கு சென்றது எப்படி? நீக்கப்பட்டது எப்படி?

கடந்த ஆண்டு ரோஸ் கலெம்பா தனது வலைப்பூ (blog) பக்கத்தில் ஒரு பதிவை எழுதியிருந்தார். 14 வயது சிறுமியாக இருந்தபோது பாலியல் வல்லுறவுக்கு ஆளானது, ஆபாச இணையதளத்தில் இருந்து அது பற்றிய விடியோவை அகற்ற அலைந்தது அதில் பதிவிட்டிருந்தார். இதேபோன்ற பிரச்சினை இன்றைய காலக்கட்டத்தில் தங்களுக்கும் ஏற்பட்டிருப்பதாகக் கூறி பல டஜன் பேர் அவரைத் தொடர்பு கொண்டனர்.

எச்சரிக்கை: இந்தக் கட்டுரை பாலியல் வெறித்தனம் பற்றி விவரிக்கிறது

மருத்துவமனையில் ரோஸ் சிகிச்சை பெற்ற அறையின் வாயிலுக்குச் சென்ற அந்த நர்ஸ் திரும்பி அவரைப் பார்த்தார். “உனக்கு இப்படி நடந்ததற்காக வருத்தப்படுகிறேன்” என்று உடைந்த குரலில் கூறினார். “என் மகளும் பாலியல் வல்லுறவுக்கு ஆளானார்” என்று அவர் குறிப்பிட்டார். அவருக்கு 40 வயதுக்கு மேல் இருக்காது என்று ரோஸ் நினைத்தார்.

பலாத்காரம் நடந்ததற்குப் பிறகு காலையில் நடந்த சம்பவங்களை ரோஸ் நினைத்துப் பார்த்தார். உணர்ச்சிகள் இல்லாத காவலர்கள், சிகிச்சை தந்த மருத்துவர் ஆகியோருடன் நடந்த உரையாடல்களை நினைத்தார். இரவு நீண்ட நேரம் நடந்த பாலியல் வன்முறை பற்றி அவர்களிடம் கூறியபோது, அந்தச் சம்பவத்தைக் குறிப்பிடும்போது “சொல்லப்படும்” என்ற வார்த்தையை அவர்கள் பயன்படுத்தினர். சிறுமியின் தந்தை, பாட்டியைத் தவிர, அவருடைய உறவினர்கள் பெரும்பாலானோர் அவர் சொன்னதை நம்பவில்லை.

அந்த நர்ஸ் வித்தியாசமாக இருந்தார்.

“அவர் என்னை நம்பினார்” என்று ரோஸ் கூறுகிறார்.

தனக்கு நடந்த பாலியல் வன்முறையை ஒருவர் நம்புகிறார் என்பது, சிறிய நம்பிக்கைக் கீற்றாக இருந்தது. அவர் மீது நிம்மதி அலைகள் வீசின. மீண்டு வருவதற்கான தொடக்கமாக அது இருக்கிறது என்பது போல உணர்ந்தார்.

ஆனால் பல நூறாயிரம் பேர் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து ரோசுக்கு எந்த அனுதாபமும் கிடைக்கவில்லை.

ஒரு தசாப்தம் கழித்து, ரோஸ் கலெம்பா தனது குளியலறை கண்ணாடி எதிரே நின்று, அடர்த்தியான, நீண்ட கூந்தலை பிடித்து நுனிகளை விரல்களால் சுற்றிக் கொண்டிருந்தார். சுருள் முடியாக வரும் வகையில் அப்படி செய்து கொண்டிருந்தார். வல்லுறவு நடந்த பிறகு சில மாதங்கள் வரை அவருடைய வீட்டில் இப்படி கண்ணாடிகளைப் பார்க்க முடியவில்லை. தன் முகத்தைப் பார்க்கவே முடியாது என்பதால், கண்ணாடிகளுக்குப் போர்வை போட்டு மூடியிருந்தனர்.

இப்போது அவருக்கு 25 வயதாகிவிட்டது. தினசரி வாழ்வில் தன்னை எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்பது அவருக்கு பழகிவிட்டது.

தலைமுடையை பராமரிப்பது அவற்றில் ஒன்று. தலைமுடியை சீவிக் கொள்வதற்கு நேரமும், முயற்சியும் தேவை. ஏறத்தாழ அதுவும் ஒரு தியானம் போல தான். தனக்கு அழகான தலைமுடி இருப்பதை அவர் அறிவார். நிறைய பேர் எப்போதும் அது பற்றி கமெண்ட் அடிப்பார்கள். தினமும் காலையில், சாக்லெட்டில் இருந்து தயாரிக்கப்படும் தூய்மையான, காக்காவ் பானத்தை ஒரு கப் தயாரித்துக் கொள்கிறார். அதில் நிறைய குணமாக்கும் சத்துகள் இருப்பதாக அவர் நம்புகிறார். தன்னுடைய லட்சியங்கள் பற்றி ஒரு டைரியில் அவர் எழுதுகிறார்.

இப்போது நடப்பது போலவே வேண்டுமென்றே எழுதுகிறார்.

“நான் ஓர் அருமையான ஓட்டுநர்” ஆகவேண்டும் என்பது ஒரு லட்சியம். “நான் ராபர்ட்டை திருமணம் செய்து மகிழ்வாக வாழ்கிறேன்” என்பது இன்னொன்று. “நான் ஒரு நல்ல தாய்” இது அதற்கடுத்தது.

பேசுவதற்கு அமர்ந்தபோது, தன் தோள்கள் மீது தலைமுடியை இழுத்து போட்டுக் கொள்கிறார் – அவருடைய உடலில் பெரும்பகுதியை அது மறைத்துக் கொள்கிறது. அவருடைய கவசம் அது.

ஓஹியோ என்ற சிறு நகரில் வளர்ந்த அவர், இரவில் படுக்கப் போவதற்கு முன்னதாக சிறிது நேரம் நடந்துவிட்டு வருவது வழக்கம். சுத்தமான காற்று மற்றும் அமைதியை அவர் அனுபவித்திருக்கிறார். எனவே 2009ல் அந்த கோடைக்கால மாலை நேரத்தில் 14 வயதான ரோஸ் மற்றவர்களைப் போலவே நடக்கத் தொடங்கினார்.

அப்போது மறைவான பகுதியில் இருந்து ஒரு ஆண் வெளியே வந்தான். கத்திமுனையில் மிரட்டி அந்த சிறுமியை ஒரு காரில் ஏற்றினான். காரில் 19 வயதான இன்னொரு ஆணும் இருந்தான். அந்தப் பகுதியில் ஏற்கெனவே அந்த ஆளை ரோஸ் பார்த்திருக்கிறாள். நகரில் இன்னொரு பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று, சுமார் 12 மணி நேரமாக பாலியல் வல்லுறவு செய்திருக்கின்றனர் – இதை மூன்றாம் நபர் ஒருவர் வீடியோ பதிவு செய்திருக்கிறார்.

இதில் ரோஸ் அதிர்ச்சியானாள் – சுவாசிப்பதற்கு கூட முடியவில்லை. கடுமையாக தாக்கப்பட்டு, இடது காலில் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். துணிகள் ரத்தக்கறை படிந்துள்ளன. சுயநினைவை இழந்துவிட்டாள்.

இடையில் ஒரு கட்டத்தில், அவர்களில் ஒருவன் ஒரு லேப்டாப் எடுத்து, மற்ற பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வீடியோக்களை ரோஸிடம் காட்டியிருக்கிறான். “நான் அதிபரின் இனத்தைச் சேர்ந்தவள்” என்று ரோஸ் கூறினார். பலாத்காரம் செய்தவர்கள் வெள்ளையர்கள். அவர்களுடைய எண்ணம் தெளிவானது. பாதிக்கப்பட்டவர்களில் சில வெள்ளை இனப் பெண்களும் உண்டு. ஆனால் பலரும் கருப்பர் இனத்தவர்கள்” என்று அவர் கூறினார்.

பின்னர், கொலை செய்துவிடுவோம் என்று ரோஸை அவர்கள் மிரட்டியுள்ளனர். சுயநினைவு வந்தபோது, அவர்களுடன் ரோஸ் பேசியிருக்கிறாள். தன்னை விடுவித்துவிட்டால், யாரையும் அடையாளம் காட்ட மாட்டேன் என்று கூறியிருக்கிறாள். யாருக்கும் எதுவும், தெரியாது, உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது என்று கூறியிருக்கிறாள்.

பின்னர் ரோஸை காரில் அழைத்துச் சென்று, வீட்டில் இருந்து அரை மணி நேர நடைபயண தூரத்தில் இறக்கிவிட்டுச் சென்றனர். கதவைக் கடந்து சென்றபோது, ஹாலில் இருந்த கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்திருக்கிறார். தலையில் ஆழமான வெட்டுக்காயத்தில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.

அவருடைய தந்தை ரோன், மற்றும் குடும்பத்தில் மற்றவர்கள் மதிய உணவுக்காக ஹாலில் இருந்தனர். கத்தியால் குத்தப்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்த நிலையில், தனக்கு நடந்த தாக்குதல் பற்றி சிறுமி விவரித்திருக்கிறாள்.

“என் தந்தை உடனே போலீசுக்குத் தகவல் கொடுத்து, எனக்கு ஆறுதல் சொன்னார். ஆனால், இரவில் தனியாக சென்றதற்கு எனக்கு இது தேவைதான் என்று மற்றவர்கள் கூறினர்” என்று ரோஸ் தெரிவித்தார்.

அவசர சிகிச்சை அறையில் ஆண் டாக்டர் ஒருவரும், ஆண் காவல் துறை அதிகாரியும் காத்திருந்தனர்.

“இருவரும் இயந்திரகதியில் நடந்து கொண்டனர். யாருமே அன்பு, கனிவைக் காட்டவில்லை” என்று ரோஸ் தெரிவித்தார்.

இது விருப்பத்தின் பேரில் நடந்த சம்பவமா என்று ஆண் காவல் அதிகாரி கேட்டார். கொடூரமான இரவாகிவிட்டதா என்று அவர் கேட்டார்.

இவற்றால் ரோஸ் அதிர்ச்சியடைந்தாள்.

“கொடூரமாக என்னைத் தாக்கியுள்ளனர். கத்தியால் குத்தியுள்ளனர். ரத்தம் வந்து கொண்டிருக்கிறது…”

ஒப்புதலின்பேரில் இது நடக்கவில்லை என்று ரோஸ் கூறியிருக்கிறாள். நடந்த சம்பவத்தில் இருந்து மீளாத நிலையில் இருந்த ரோஸ், தன்னிடம் இப்படி நடந்து கொண்டது யார் என தெரியவில்லை என்று கூறினாள். மேற்கொண்டு விசாரிக்க காவல் துறையினருக்கு ஒரு பிடிமானம் கிடைக்கவில்லை.

மறுநாள் ரோஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்ட பிறகு, அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். இனிமேல் எப்படி இயல்பு வாழ்க்கையை வாழ முடியும் என்ற அச்சத்தால் அவர் அந்த முடிவை எடுத்திருக்கிறார். உரிய நேரத்தில் சகோதரர் கவனித்ததால் அவர் காப்பாற்றப்பட்டார்.

சில மாதங்கள் கழித்து MySpace இணையதளத்தை தனது பள்ளியில் நிறைய பேர் பகிர்ந்து கொண்டிருப்பதை ரோஸ் கவனித்திருக்கிறாள். அவளுக்கும் அதை இணைப்பாக சேர்த்திருக்கிறார்கள். அதை கிளிக் செய்தபோது, pornhub என்ற ஆபாச வீடியோ இணையதளத்திற்குச் சென்றிருக்கிறது. தனக்கு துன்புறுத்தல் நடந்த காட்சிகளை பல வீடியோக்களாக அதில் பார்த்ததும் அவர் மயக்கமாகிவிட்டார்.

“அந்த வீடியோக்களுக்கு ‘teen crying and getting slapped around’, ‘teen getting destroyed’, ‘passed out teen’ என்று தலைப்பு தந்திருநதனர். ஒரு வீடியோ 400,000 முறை பார்க்கப் பட்டிருந்தது” என்று ரோஸ் நினைவுகூர்ந்தார்.

“நான் மயக்கமாகிப் போகும் வீடியோக்கள் மிக மோசமாக இருந்தன. நான் நினைவில்லாமல் இருந்தபோதுகூட பாலியல் தாக்குதல் நடந்த காட்சிகள் மிக மோசமாக இருந்தன.”

இந்த வீடியோக்கள் பற்றி குடும்பத்தினரிடம் சொல்வதில்லை என அப்போதே அவர் முடிவு செய்து கொண்டார். எப்படியும் அவர்களில் பலரும் தனக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் என நினைத்தார். அவர்களிடம் சொல்வதால் எதுவும் நடக்கப் போவதில்லை என்றும் கருதினார்.

சில நாட்களுக்குள், தன் பள்ளிக்கூடத்தில் நண்பர்கள் பலரும் அந்த வீடியோக்களை பார்த்திருந்தனர்.

“என்னை கேலி செய்தார்கள்” என்று ரோஸ் கூறினார். “எனக்கு இது வேண்டும் என்று பலர் கூறினர். அதனால்தான் ஆண்கள் அப்படி நடந்து கொண்டார்கள், நான் ஒரு வேசி என்று பேசினர்.” என்னிடம் இருந்து விலகி இருக்குமாறு தங்கள் பெற்றோர்கள் கூறியதாக சில மாணவர்கள் கூறினர். அவர்களை மயக்கி வலையில் விழச் செய்துவிட்டு, பிறகு பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு கூறுவார் என்று பெற்றோர்கள் கூறியதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

“பாதிக்கப்பட்டவர்கள் மீது குறை கூறுவது மக்களுக்கு எளிதான விஷயம்” என்று ரோஸ் கூறினார்.

அந்த வீடியோக்களை நீக்கிவிட வேண்டும் என்று 2009ல் ஆறு முறை pornhub இணையதளத்துக்கு ரோஸ் கடிதம் அனுப்பியுள்ளார்.

“கெஞ்சிக் கேட்டு இணையதளத்துக்கு நான் இமெயில்கள் அனுப்பினேன். `நான் ஒரு மைனர். இது ஒரு பாலியல் தாக்குதல் சம்பவம். தயவுசெய்து அகற்றுங்கள்’ என்று கூறி கெஞ்சி கேட்டுக் கொண்டேன்.”

அவருக்கு பதில் எதுவும் வரவில்லை. வீடியோக்கள் அகற்றப்படவில்லை.

“அடுத்த ஆண்டில் நான் கைவிட்டுவிட்டேன். எந்த உணர்வும் இல்லை. மரத்துப் போய்விட்டது” என்று தெரிவித்தார்.

வெளியில் யாரைப் பார்த்தாலும், அவர்கள் அந்த வீடியோவைப் பார்த்திருப்பார்களோ என்ற அச்சம் இருக்கும். “அவர்கள் அதைப் பார்த்திருப்பார்களோ? நான் பாலியல் தாக்குதலுக்கு ஆளான காட்சிகளை விரும்பியிருப்பார்களோ?” என்ற அச்சம் ஏற்பட்டது.

தன்னை யாரும் பார்ப்பதையே ரோஸ் விரும்பவில்லை. அவரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் தான் வீட்டில் எல்லா கண்ணாடிகளுக்கும் போர்வை போட்டு மூடி வைத்துவிட்டார். இருட்டிலேயே பல் தேய்த்து, குளித்துவிட்டு வருவார். தனது வீடியோக்களை யாரெல்லாம் பார்த்திருப்பார்களோ என்ற நினைவாகவே இருந்தார்.

பிறகு அவருக்கு ஓர் எண்ணம் ஏற்பட்டது.

ஒரு வழக்கறிஞர் என்று பதிவு செய்து ஒரு இமெயில் முகவரியை உருவாக்கினார். இந்த விஷயத்தில் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டி pornhub இணையதளத்துக்கு ஒரு இமெயில் அனுப்பினார்.

“அடுத்த 48 மணி நேரத்தில் வீடியோக்கள் காணாமல் போய்விட்டன.”

சில மாதங்கள் கழித்து ரோசுக்கு கவுன்சலிங் தரப்பட்டது; கடைசியாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் பற்றிய விவரங்களை கூறிவிட்டார். தன் கடமையை நிறைவேற்றும் வகையில், உளவியல் நிபுணர் இதுபற்றி காவல் துறையிடம் தெரிவித்தார். ஆனால் தன் குடும்பத்தாரிடமோ அல்லது காவல் துறையினரிடமோ இந்த வீடியோக்கள் பற்றி ரோஸ் எதுவும் கூறவில்லை.

ரோஸ் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இருந்து, பாதிப்பு நிலைமை குறித்த அறிக்கைகளை காவல் துறையினர் சேகரித்தனர். பாலுறவுக்கு ரோஸ் ஒப்புக்கொண்டு தான் அந்தச் சம்பவம் நடந்தது என்றும், பாலியல் வல்லுறவு பிரிவில் குற்றஞ்சாட்டப்படவில்லை என்றும், “மைனர் பெண்ணுடன் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டனர்” என்று தான் குற்றச்சாட்டு உள்ளது என்றும் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களின் வழக்கறிஞர்கள் வாதாடினர். இது தீவிர குற்றச்செயலில் வராது என்று கூறி, குறைந்த தண்டனை மட்டுமே கிடைக்கச் செய்தனர்.

கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று போராடுவதற்கு ரோஸ் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு பண வசதியோ, தைரியமோ இல்லாமல் போனது. அத்தனை ஆண்டுகளுக்கு முன்பு தன் மகளுக்கு நடந்த சம்பவம் பற்றி ரோன் கலெம்பா நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. தனக்கு அதிகம் தெரிந்திருந்தாலும் அப்போது வித்தியாசமாக என்ன செய்திருக்க முடியும் என்று நினைக்கிறார். பாலியல் தாக்குதலுக்குப் பிறகு அவருடைய மகள் மாறிவிட்டாள். வகுப்புகளுக்கு சரியாக செல்லாத மாணவியாகிவிட்டாள். வீட்டுப் பாடங்களை எப்போதாவது மட்டுமே செய்பவளாகிவிட்டாள்.

ரோன் அடிக்கடி வந்து செல்லக் கூடிய அவருடைய வீட்டின் அருகில் உள்ள ஒரு பூங்காவில் நாங்கள் அமர்ந்திருந்தோம். பிக்னிக் பெஞ்சில் ரோனும், ரோஸும் ஒன்றாக அமர்ந்து பைபிளில் இருந்து சில பக்கங்களைப் படித்துக் கொள்கிறார்கள். கடந்த காலம் பற்றி அவர்கள் அதிகம் பேசுவதில்லை. “ஒட்டுமொத்த உலகமே எங்களை கைவிட்டுவிட்டது போல இருந்தது” என்று ரோன் கூறுகிறார். “ரோஸ் பாலியல் தாக்குதலுக்கு ஆளானது, எல்லோருக்கும் பெரிய ஜோக் போல இருந்தது. அது அவளுடைய வாழ்க்கையை முழுவதுமாக மாற்றிவிட்டது. வாழ்க்கையில் ஒவ்வொரு நிலையிலும் மக்கள் அவளைக் கைவிட்டுவிட்டனர்” என்றார் அவர்.

தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி ரோஸ் வலைப்பூவில் பகிர்ந்த தகவல் ஊடகங்களில் வைரலாகப் பரவிய போது 2019-ல் தான் வீடியோக்கள் பற்றி ரோன் அறிந்தார். தன் மகள் பாலியல் தாக்குதலுக்கு ஆளான காட்சிகளை நிறைய பேர் பார்த்திருக்கிறார்கள் என்றோ, அவளுடைய பள்ளிக்கூடத்தில் பலரும் அவளை கேலி செய்திருக்கிறார்கள் என்றோ அவருக்கு அந்த காலகட்டத்தில் தெரிந்திருக்கவில்லை.

“எட்டாவது கிரேடு படிக்கும் போது பள்ளிக்கூடத்தில் ஒரு மாணவியை எனக்குத் தெரியும். சிலர் அவளை சீண்டுவார்கள். அடிக்கவும் செய்வார்கள். நாங்கள் யாரும் எதுவும் செய்ய மாட்டோம். வெறுமனே வேடிக்கை பார்ப்போம்” என்று ரோன் பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்தார். “பல ஆண்டுகள் கழித்து அவளை சந்திக்கும் வாய்ப்பு வந்தது. நானும் கூட அவளை கேலி செய்தவன் என்று நினைத்திருந்தாள். ஏனெனில் நானும் வெறுமனே நின்று வேடிக்கை பார்த்தவனாக இருந்தேன். உண்மையில் ஆரம்பத்தில் அவளிடம் ஒன்றிரண்டு பேர் தான் வம்பு செய்தனர். யாரும் தட்டிக் கேட்காததால் எல்லோரும் அவளுக்கு எதிரானவர்கள் என்று நினைத்துவிட்டனர். மற்றவர்களின் மௌனம் அவளுக்கு அந்த எண்ணத்தை தோற்றுவித்திருந்தது.”

ரோஸுக்கும் இது தான் நடந்திருக்கும் என்று அவர் கருதுகிறாரா?

“ஆமாம். ஆனால் அவளுக்கு மிக மோசமானதாக நடந்திருக்கிறது. அவளை கேலி செய்யும் டிஜிட்டல் கூட்டம் இருந்திருக்கிறது. சிலர் மௌனமாக, சிலர் திட்டிக் கொண்டு இருந்திருப்பார்கள். இது ஒரு வித்தியாசமான உலகம்.”

அடுத்த சில நாட்களில் டிஜிட்டல் உலகில் அடிக்கடி ரோஸ் மூழ்கிவிட்டார்.

எழுதுவது, வலைப்பூவில், சமூக ஊடகங்களில் தன் அனுபவங்களைப் பகிர்வது, சில நேரங்களில் வேறு பெயர்களிலும், சில நேரங்களில் தன்னுடைய பெயரிலும் பகிர்வது என இருந்தார்.

2019ல் ஒரு நாள், சமூக ஊடகத்தில் தன்னுடைய பதிவுகளை அவர் பார்த்துக் கொண்டிருந்தபோது pornhub பற்றி நிறைய பதிவுகள் இருந்ததைக் கவனித்தார். தேனீ பாதுகாப்பு அறக்கட்டளைகளுக்கு அந்த இணையதளம் நன்கொடை தந்திருப்பதற்கு பலரும் பாராட்டு தெரிவித்திருந்தனர். காது கேளாதோருக்கான வசதிகள், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கான அறக்கட்டளைக்கு உதவிகள், தொழில்நுட்பத் துறையில் நுழையும் பெண்களுக்கு 25,000 டாலர் உதவித் தொகை அளிப்பது என அதில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

அந்த இணையதளம் 2019ல் 42 பில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது – முந்தைய ஆண்டைவிட அது 8.5 பில்லியன் அதிகம். சராசரியாக தினமும் 115 மில்லியன் முறை அந்த இணையதளம் பார்க்கப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனமே தெரிவித்துள்ளது. ஒரு விநாடிக்கு 1,200 தேடுதல்கள் நடந்துள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது. “நீங்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்துபவராக இருந்தால், pornhub இணையதளத்தை அறியாமல் இருப்பது சாத்தியமற்றது” என்கிறார் ரோஸ். “கவர்ச்சி” வாசகங்களை பயன்படுத்தி தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில் அந்த இணையதளம் நன்றாகவே செய்திருக்கிறது. எல்லை கடந்த ஆபாசமாக இருக்கும். என்னுடைய வீடியோவுக்கு தரப்பட்ட தலைப்புகளில் இப்போதும் வீடியோக்கள் அதில் உள்ளன. அவற்றில் பாலியல் பலாத்கார வீடியோக்கள் இருக்குமா, பாதிக்கப்பட்டவர்களுக்கு இவை தெரியுமா என்பதெல்லாம் தெரியவில்லை.”

வைரலாக மாறிய அவருடைய வலைப்பூ பதிவில், தாம் பாலியல் பலாத்தாரம் செய்யப்பட்டது பற்றிய தகவல்களை ரோஸ் பகிர்ந்து கொண்டுள்ளார். தாம் வழக்கறிஞர் என்ற பெயரில் இமெயில் அனுப்பும் வரையில், தன்னுடைய கடிதங்களை கண்டுகொள்ளாத pornhurb-க்கு அவர் கண்டனம் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து டஜன் கணக்கில் பெண்களும், ஆண்களும் அவருடன் தொடர்பு கொண்டனர். தங்களைப் பற்றிய பாலியல் வீடியோக்களும் அந்த இணையதளத்தில் வந்திருப்பதாக அவர்கள் கூறியிருந்தனர்.

பிபிசிக்கு pornhub இணையதளம் அனுப்பிய அறிக்கை: “இந்தக் கொடூர சம்பவம் குறித்த புகார்கள் 2009 ஆம் ஆண்டில் நடந்தவை. இப்போதைய உரிமையாளர்களால் இந்த இணையதளம் வாங்கப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கிறது. எனவே, அந்த சமயத்தில் அது எப்படி கையாளப்பட்டது என்ற தகவல் எங்களிடம் இல்லை. இணையதளத்தின் உரிமையாளர் மாறிவிட்ட பிறகு, இத் துறையின் மிகக் கடுமையான பாதுகாப்பு விதிகள் மற்றும் கொள்கைகளை பின்பற்றுகிறோம். குழந்தைகள் பாலியல் கொடுமை வீடியோக்களைத் தடுக்கும் நோக்கில், சட்டவிரோத மற்றும் அனுமதியற்ற வீடியோக்களைத் தடுப்பதில் இந்த கவனத்தை செலுத்துகிறோம். Vobile என்ற மூன்றாம் தரப்பு, நவீன மென்பொருள் வசதியை இந்த நிறுவனம் பயன்படுத்துகிறது. புதிதாகப் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை ஸ்கேன் செய்து, தடுக்கப்பட வேண்டியவை ஏதும் இருக்கிறதா என ஆய்வு செய்து, தடுக்க வேண்டிய வீடியோக்கள் இணையதளத்தில் தோன்றாமல் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.”

ரோஸ் பாலியல் தாக்குதல் சம்பவத்தின் வீடியோவுக்கு தரப்பட்ட அதே தலைப்புகளில், “teen abused while sleeping” “drunk teen abuse sleeping” “extreme teen abuse” என்ற தலைப்புகளில் இன்னும் இந்த இணையதளத்தில் வீடியோக்கள் உள்ளனவே என்று கேட்கப்பட்டது. அதற்கு அளித்த பதிலில், “எங்களுடைய பயன்பாட்டு விதிமுறைகளின்படி உள்ள பாலியல் கருத்து பகிர்தல்கள் அனைத்தையும் நாங்கள் அனுமதிக்கிறோம். இது பொருத்தமற்றது என சிலர் நினைத்தால், உலகெங்கும் வேறு பலருடன் அந்தக் கருத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பல பேச்சுரிமை சட்டங்களின்படி அவர்கள் பாதுகாப்பு பெற்றுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

முறையற்ற வீடியோ என கருத்து தெரிவிக்க ஒரு கொடி சின்ன கட்டத்தை (flagging tab) 2015ல் இந்த இணையதளம் அறிமுகம் செய்தது. ஆனால் இணையதளத்தில் வல்லுறவு வீடியோக்கள் வருவதான புகார்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புளோரிடாவை சேர்ந்த 30 வயதான ஆண் கிறிஸ்டோபர் ஜான்சன் என்பவர், 15 வயது நபரிடம் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு அந்த வீடியோவை pornhub இணையதளத்தில் பதிவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கு பற்றி பிபிசிக்கு pornhub அளித்த அறிக்கையில், “அனுமதிக்கு உகந்ததாக இல்லாத வீடியோக்கள் பற்றி தகவல் வந்த உடனே அவற்றை நீக்குவது என்ற கொள்கை இருப்பதால், இந்த வழக்கில் அதைத் தான் செய்தோம்” என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் Girls Do Porn என்ற சேனலை pornhub நீக்கியது. தங்களை கட்டாயப்படுத்தி வீடியோ எடுத்ததாக 22 பெண்கள் வழக்கு தொடர்ந்ததை அடுத்து சேனலை நீக்கியதுடன், சேனல் உரிமையாளர்கள் மீது பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

“பத்தாண்டுகளுக்கு முன்பு எனக்கு நடந்தது, இப்போது உண்மை நிலையாக இல்லை என்று பலர் கூறலாம். ஆனால், அது சரியல்ல” என்று ரோஸ் கூறினார்.

“என் வலைப்பூவை பார்த்த பிறகு, இப்போதும் இதுபோல நடப்பதாக மக்கள் கூறுகிறார்கள். இவர்கள் சமூக ஊடகத்தில் ஈடுபாடு கொண்டிருக்கும் மேற்கத்திய பெண்கள்.”

“உலகின் வேறு பகுதிகளில், பதிவேற்றத்தில் இருக்கும் வீடியோக்களில், மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளில் ஆபாச இணையதளங்கள் அதிகம் பார்க்கப்படும் பகுதிகளில் உள்ளவர்களுக்கு, தங்களுடைய வீடியோ எதுவும் வேறு பகுதிகளில் உள்ளதா என தெரியாமல் இருக்கலாம்.”

ரோஸுக்கு இமெயில் அனுப்பிய ஒரு பெண்ணுடன் பிபிசி செய்தியாளர் தொடர்பு கொண்டு பேசினார். தன்னைப் பற்றிய ஒரு வீடியோ சிறிய இணையதளம் ஒன்றில் பல ஆண்டுகளாக இருந்து வந்தது என்றும், பல முறை தாம் இமெயில் அனுப்பியும் அதை அகற்றவில்லை என்றும் அந்தப் பெண்மணி கூறினார். வீடியோவின் கீழேயும் கூட தகவல் பதிவு செய்ததாகவும் தெரிவித்தார். அந்த வீடியோ பதிவிறக்கம் செய்து, வேறு ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்று கலிபோர்னியாவை சேர்ந்த அந்தப் பெண் தெரிவித்தார். தங்கள் கட்சிக்காரருக்கு “இதுபோன்ற எந்தத் தகவலும் வரவில்லை” என்று இணையதளத்தின் வழக்கறிஞர்கள் கூறினர். அந்த வீடியோவின் இணைய முகவரியையும், வீடியோவின் கீழேயே அந்தப் பெண் தகவல் பதிவு செய்திருப்பதையும் காட்டி வழக்கறிஞர்களுக்கு பிபிசி ஆதாரங்களை அனுப்பியது. இறுதியாக சில நாட்களில் அந்த வீடியோ நீக்கப்பட்டது.

“ரோஸுக்கு 2009ல் நடந்த சம்பவம் இப்போதும் இலவச ஆபாச இணையதளங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. pornhub-ல் மட்டுமின்றி எல்லா இணையதளங்களிலும் நடக்கிறது” என்று ஆபாச இணையதளங்கள் பற்றி புலனாய்வு செய்யும் Not Your Porn (உங்களுடைய ஆபாச படமல்ல) என்ற குழுவைச் சேர்ந்த கதே ஐசக்ஸ் என்பவர் கூறினார்.

“திரும்பத் திரும்ப இதுபோன்ற செயல்களில் ஈடுபடும், தனிநபர்கள் நடத்தும் சிறிய இணையதளங்கள் பற்றிய விஷயத்தில் நாம் எதுவும் செய்ய முடியாது. ஆனால் pornhub போன்ற பெரிய அளவிலான வணிக ரீதியிலான இணையதளங்களைப் பொருத்த வரை, அவர்கள் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். இப்போது அப்படி பொறுப்பேற்பது இல்லை. அவர்களுக்கு எந்தச் சட்டமும் பொருந்துவது இல்லை” என்று அவர் கூறினார்.

உருவப்படத்தை அடிப்படையாகக் கொண்டு பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவது, ஒருவருடைய அனுமதி இல்லாமல் வேண்டுமென்றே அவருடைய படத்தைப் பயன்படுத்தி ஆபாச படம் உருவாக்கி பதிவிடும் செயல் – பழிவாங்கும் ஆபாசப்படம் எனப்படுகிறது. இதுபோன்ற படங்கள் தயாரிப்பது 2015 ஆம் ஆண்டில் இருந்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் குற்றச் செயலாகக் கருதப்படுகிறது. இப்போது அதற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. இருந்தபோதிலும், இதுபோன்ற பதிவுகளைக் கொண்டுள்ள இணையதளங்கள் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

“ஒப்புதல் இல்லாத பதிவுகளை பகிர்வதை ஆபாச இணையதளங்கள் அறிந்துள்ளன” என்று ஐசக்ஸ் கூறுகிறார். “விரும்பி ரோல்-பிளே செய்தலையும், நடிக்க வைத்து தயாரிப்பதையும் அல்லது வல்லுறவு செயலையும் வேறுபடுத்தி பார்க்க வழி கிடையாது என அவர்களுக்குத் தெரியும்” என்கிறார் அவ்.

தன்னுடைய நண்பர் ஒருவருடைய 16 வயதுக்கு உள்பட்ட குழந்தையின் ஆபாச வீடியோ pornhub-ல் பதிவேற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து Not Your Porn என்ற அமைப்பை அவர் உருவாக்கியுள்ளார். தங்களுடைய ஒப்புதல் இல்லாமல், தங்களைப் பற்றிய ஆபாச வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக, கடந்த ஆறு மாதங்களில் பிரிட்டனை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் தன்னை அணுகியுள்ளதாக கதே ஐசக்ஸ் தெரிவித்தார். அவற்றில் 30 வீடியோக்கள் pornhub-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

Pornhub மற்றும் இதர இணையதளங்கள், வீடியோக்களை பயனாளர்கள் தங்கள் கம்ப்யூட்டர்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள அனுமதிப்பதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். எனவே ஒரு இணையதளத்தில் இருந்து ஒரு வீடியோவை நீக்கிவிட்டாலும், அந்த நபர் வேறொரு இணையதளத்தில் பகிர அல்லது பதிவேற்றம் செய்ய முடியும் என்கிறார்.

ஒப்புதல் இல்லாத ஆபாச வீடியோக்களைப் பகிர்வதை குற்றச் செயலாகக் கருதும் வகையில் இங்கிலாந்தில் சட்டங்கள் உருவாக்க வேண்டும் என்று Not Your Porn அமைப்பு ஆதரவு திரட்டி வருகிறது.

ரோஸ் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளார். 20 வயதுகளின் தொடக்கத்தில் அவருக்கு ராபர்ட் என்ற ஆண் நண்பர் கிடைத்தார். தனக்கு நேர்ந்த சம்பவம் பற்றி கலந்து பேசி, சமாதானத்துக்கு வர அவர் உதவியாக இருந்தார் என்கிறார் ரோஸ். தாங்கள் திருமணம் செய்து கொண்டு, ஒரு மகளைப் பெற்றுக் கொள்வோம் என்று ரோஸ் நம்பிக்கை கொண்டுள்ளார். பெல்லா என்ற அவருடைய ஆக்ரோஷ குணம் கொண்ட நாய் அவருக்கு பலமாக இருக்கிறது.

“இந்த வகை நாய்கள் ஆக்ரோஷமாக இருக்கலாம். ஆனால் மிகவும் அன்பானவை. நான் இவற்றுடன் வளர்ந்து பழகிவிட்டேன்” என்கிறார் ரோஸ். “மனிதர்கள் தொந்தரவு செய்தால் மட்டுமே அவை ஆக்ரோஷமாக மாறும்” என்று எதையோ குறிப்பிடும் வகையில் ரோஸ் சொன்னார்.

“பல வகைகளில் நான் ஆயுள் தண்டனை கைதி போல இருக்கிறேன்” என்கிறார் ரோஸ். “இப்போதும்கூட கடைகளுக்குச் சென்றால், அங்கிருக்கும் யாராவது என் வீடியோவை பார்த்திருப்பார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது.”

ஆனால் இனிமேலும் அமைதியாக இருக்க விரும்பவில்லை என்று ரோஸ் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »